முரளி பட லிஸ்ட்


முரளி எத்தனை படங்களில் நடித்தார் என்று சரியாகத் தெரியவில்லை. தெரிந்த வரைக்கும் விமல் இங்கே ஒரு லிஸ்ட் போட்டிருக்கிறார். மிஸ் ஆன படங்களை சொல்லுங்கள்!

முரளி நடித்த படங்கள் (எனக்கு தெரிந்த) :

  1. பூவிலங்கு (பார்த்தபோது எனக்கு பிடித்திருந்தது. முதல் படம். வெற்றிப்படம்.)
  2. பகல் நிலவு (பார்க்கலாம். மணிரத்னம் இயக்கம்.)
  3. தங்கமணி ரங்கமணி
  4. பொற்காலம் (நல்ல படம், விமலுக்கும் பிடித்த படம். சேரன் இயக்கம்.)
  5. புது வசந்தம் (பார்க்கலாம். விக்ரமன் இயக்கம். முரளியின் கேரியரில் பெரிய வெற்றி)
  6. பாலம்
  7. வெற்றி மலை
  8. புதியவன் (25 வருஷங்களுக்கு முன் பார்த்தபோது எனக்கு பிடித்திருந்தது. அன்றைய யூத் படம்)
  9. சிலம்பு
  10. நானும் இந்த ஊருதான்
  11. நாங்கள் புதியவர்கள்
  12. சிறையில் சில ராகங்கள்
  13. புதிய காற்று
  14. நம்ம ஊரு பூவாத்தா
  15. சாமி போட்ட முடிச்சு
  16. இதயம் (அவருடைய defining moment இதுதான். பெரிய வெற்றி. விமலுக்கு பிடித்த படம், எனக்கு பிடிக்காது. இதற்கப்புறம்தான் கல்லூரி மாணவன், காதலை சொல்லமாட்டார் என்ற க்ளிஷேக்களில் மாட்டிக்கொண்டார்.)
  17. குறும்புக்காரன்
  18. தங்க மனசுக்காரன்
  19. சின்ன பசங்க நாங்க
  20. தங்கராசு
  21. என்றும் அன்புடன்
  22. தாலி கட்டிய ராசா
  23. மணிக்குயில்
  24. தங்க கிளி
  25. மஞ்சு விரட்டு
  26. அதர்மம்
  27. என் ஆசை மச்சான்
  28. சத்யவான்
  29. ஆகாய பூக்கள்
  30. தொண்டன்
  31. ‌பொம்மை
  32. காலமெல்லாம் காதல் வாழ்க (பெரிய ஹிட் படம், பார்க்கலாம்)
  33. ‌போர்க்களம்
  34. ரோஜா மலரே
  35. காதலே நிம்மதி
  36. தினந்தோறும்
  37. வீர தாலாட்டு
  38. ரத்னா
  39. பூந்தோட்டம்
  40. என் ஆசை ராசாவே (சிவாஜியுடன் சேர்ந்து நடித்த ஒரே படம், என் கண்ணில் சுமார்)
  41. உன்னுடன்
  42. தேசிய கீதம் (விமலுக்கு பிடித்த படம், என் கண்ணில் சுமார். சேரன் இயக்கம்.)
  43. பூவாசம்
  44. கனவே கலையாதே
  45. ஊட்டி
  46. இரணியன்
  47. வெற்றி ‌கொடி கட்டு (நல்ல படம், விமலுக்கு பிடித்த படம். சேரன் இயக்கம்.)
  48. மனு நீதி (சுமார்)
  49. கண்ணுக்கு கண்ணாக
  50. சொன்னால்தான் காதலா
  51. ஆனந்தம் (பார்க்கலாம், விமலுக்கு பிடித்த படம். லிங்குசாமி இயக்கம்.)
  52. சமுத்திரம் (ஆனந்தம் மாதிரியே, ஆனால் அதை விட கிளிஷேக்கள் நிறைந்த படம்)
  53. அள்ளித் தந்த வானம்
  54. கடல் பூக்கள் (மாநில அளவில் சிறந்த நடிகர் விருது கிடைத்தது. பாரதிராஜா இயக்கம்.)
  55. சுந்தரா டிராவல்ஸ் (முரளி-வடிவேலு காமெடிக்காக ஓடிய படம்)
  56. காமராசு
  57. நம்ம வீட்டு கல்யாணம்
  58. காதலுடன்
  59. அறிவுமணி
  60. பேசா கிளிகள்
  61. எங்க ராசி நல்ல ராசி
  62. நீ உன்னை அறிந்தால்
  63. பாணா காத்தாடி (கடைசி படம், இதிலும் மாணவன்தான்; மகன் அதர்வா ஹீரோ)
  64. வண்ணக் கனவுகள் (1987)
  65. கீதாஞ்சலி (1985)
  66. பூமணி

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள், லிஸ்ட்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
முரளி – அஞ்சலி
பிரபல தமிழ் நடிகர் முரளி மரணம்
நடிகர் முரளியின் கடைசி ‌பேட்டி

முரளி – அஞ்சலி


விமல் எழுதி இருக்கும் அஞ்சலி கீழே. ஓவர் டு விமல்!


இதயமே உன் மெளனம் என்னைக் கொல்லுதே….

இந்தப் பாடலை வலித்து, ரசித்தவர்கள் எண்ணிக்கை எக்கச்சக்கம். அந்தப் பாடலும் சரி, அதில் நடித்த முரளியும் சரி தமிழ் ரசிகர்களால் மறக்க முடியாத அளவுக்கு தமிழ் சினிமாவில் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளனர். தமிழ் சினிமாவில் மறக்க முடியாத ஒரு கலைஞர் முரளி. அந்தப் படத்தில் கடைசி வரை தனது காதலை சொல்லாமலேயே போய் விடுவார் முரளி. இப்போதும் சொல்லாமல் கொள்ளாமல் சட்டென மறைந்து போய் விட்டார் முரளி.

முரளி பிரபல கன்னட பட தயாரிப்பாளர் சித்தலிங்கையாவின் மகன் ஆவார். முரளியின் தந்தை கன்னடர் என்றாலும் அவரது தாய் ஒரு தமிழ்ப்பெண். பெங்களூருவில் பிறந்த இவர், சினிமாத்துறைக்கு வந்த பின்னர் தமிழ்நாட்டிலேயே இருந்தார். தமிழ் தவிர பிற மொழி படங்களில் நடிக்காதவர் என்ற பெருமையும் முரளியை சேரும்.

1984ம் ஆண்டு பூவிலங்கு வெளியானபோது அதில் நாயகனாக நடித்த, கெச்சலான உருவத்துடன், அனல் பறக்க வசனம் பேசி நடித்த முரளி, தமிழ் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார். யார் இந்தப் பையன், இவ்வளவு வேகமாக, அழகாக நடிக்கிறாரே என்ற ஆச்சரியம் அனைவருக்கும்.

முதல் படத்திலேயே இயல்பான நடிப்பை வெளிப்படுத்தும் கலைஞர்கள் மிக மிகக் குறைவு. அந்த வகையில் முரளிக்கு பூவிலங்கு பெரும் ஏற்றத்தைக் கொடுத்தது.

1984ல் தொடங்கிய முரளியின் நடிப்பு பயணம் 2002ம் ஆண்டு வரை நிற்காமல் படு பிசியாக போய்க் கொண்டிருந்தது.

பூவிலங்கைத் தொடர்ந்து பகல் நிலவு படத்தில் மணிரத்னத்தின் கையால் குட்டுப்பட்டு பண்பட்ட நடிப்பைக் காட்டினார் முரளி. ஆக்ரோஷமாகவும் நடிக்க முடியும், பக்குவப்பட்ட நடிப்பையும் கொடுக்க முடியும் என்பதை நிரூபித்தார் இப்படத்தின் மூலம்.

தொடர்ந்து பல படங்களில் நடித்த முரளிக்கு பெரும் ஏற்றத்தையும், அவரை ஒரு ஸ்டார் நடிகராகவும் உயர்த்திய படம் விக்ரமனின் புது வசந்தம். அவரது திரையுலக வாழ்க்கையில் அது ஒரு முக்கிய மைல் கல். அதைத் தொடர்ந்து மிகவும் பிசியான நடிகராக உயர்ந்தார் முரளி.

அவரது நடிப்பில் வெளியான இன்னொரு சூப்பர் ஹிட் படம்தான் இதயம். இது முரளியின் கேரியரில் மிகப் பெரிய படம் என்பதில் சந்தேகமில்லை. காதலை கடைசி வரை சொல்லாமலேயே போகும் ஹீரோவாக அட்டகாசமான நடிப்பைக் காட்டியிருந்தார் முரளி.

கதையும், முரளியின் நடிப்பும், இசையும், பாடல்களும் இந்தப் படத்தை தமிழ் சினிமாவின் மிகப் பெரிய வெற்றிப் படங்களின் வரிசையில் இணைத்தது

சேரன் இயக்கத்தில் முரளி நடித்த பொற்காலம், வெற்றிக் கொடி கட்டு ஆகிய இரு படங்களும் முரளியின் நடிப்புத்திறமையை மேலும் பளிச்சிட வைத்த அருமையான படங்கள். சுந்தரா டிராவல்ஸில் இவரும், வடிவேலுவும் செய்த காமெடிக் காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க வைத்ததை மறக்க முடியாது.

ஆனந்தம் படமும் முரளியின் அருமையான நடிப்பை வெளிக் கொண்டு வந்த படங்களில் ஒன்று. பாசமுள்ள தம்பியாக அண்ணனுக்கும், மனைவியை விட்டுக் கொடுக்க முடியாத கணவராகவும் அவர் அருமையாக நடித்திருந்தார்.

தமிழ் சினிமாவின் ஆர்ப்பாட்டமில்லாத, அதே சமயம் ஏராளமான வெள்ளி விழா படங்களைக் கொடுத்த மிகச் சிறிய நடிகர்களில் முரளியும் குறிப்பிடத்தக்கவர். எந்த நிலையிலும் அவர் தலைக்கனம் பிடித்து நடந்ததில்லை. பந்தா செய்ததில்லை. தயாரிப்பாளர்களையும், இயக்குநர்களையும் மதித்து நடந்தவர்.

பன்ச் டயலாக் வைப்பது, அதி புத்திசாலித்தனமாக பேசுவது என எதுவும் இல்லாமல் வெகு இயல்பான நடிகர் அவர்.

2001ம் ஆண்டு பாரதிராஜாவின் கடல் பூக்கள் படத்திற்காக சிறந்த நடிகருக்கான மாநில அரசின் விருதைப் பெற்றார் முரளி.

கடந்த 2006ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுக்காக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

கடைசியாக முரளி நடித்த படம் அவரது மகனின் முதல் படமான பாணா காத்தாடிதான். முரளியின் மகன் அதர்வா நாயகனாக அறிமுகம் ஆன இந்த படத்தையும் முரளியை அறிமுகப்படுத்திய சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான படம்தான். தான் நடித்த பெரும்பாலான படங்களில் கல்லூரி மாணவராக நடித்த முரளி, கடைசியாக நடித்த பானா காத்தாடியிலும் எம்.பி.பி.எஸ். நான்காம் ஆண்டு மாணவராக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. திரையுலகை சேர்ந்தவர்கள், பத்திரிகையாளர்கள், நண்பர்கள், நண்பர்களின் நண்பர்கள் என யார் அழைப்பிதழ் வைத்தாலும் நேரில் சென்று வாழ்த்துவதை வாடிக்கையாக கொண்டிருந்த முரளியின் மரணம் அவரது ரசிகர்கள் மற்றும் நண்பர்களுக்கு பேரிழப்பாக அமைந்துள்ளது.

பாணாவுக்கு அதற்கு முன்பு அவர் நடித்த படமான கவசம் இந்த வாரம் திரைக்கு வரவுள்ள நிலையில் அகால மரணத்தை சந்தித்துள்ளார் முரளி.

முரளியின் காதல் மனைவி ஷோபா. இந்தத் தம்பதிக்கு மகன் அதர்வா தவிர காவ்யா என்ற மகள் உள்ளார். மகள் காவ்யா எம்.பி.பி.எஸ். படித்து முடித்துள்ளார். அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்த நடிகர் முரளி, கடந்த 3 நாட்களுக்கு முன்புதான் திருமணம் பேசி முடித்துள்ளார். மே மாதம் பிரமாண்டமாக திருமண விழாவை நடத்த திட்டமிட்டிருந்தாராம் முரளி.

மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்தி செய்தியாளர்களிடம் முரளி பேசிய வார்த்தை இது.

நான் 30 வருடங்களாக நடித்த காலத்தில் எத்தனையோ தவறுகளை செய்துள்ளேன். ஆனால் அதை தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் பொறுத்துக் கொண்டு என்னை வாழ வைத்தனர்.

எனவே தயாரிப்பாளர்களுக்கு மதிப்பு கொடு, நல்ல பெயரெடு, நல்ல நடிகராக உருவாகு, பணத்தை விட நல்ல படம் முக்கியம் என்பதையே எனது மகனுக்கு அறிவுரையாக கூறியுள்ளேன் என்றார் முரளி.

முரளியின் மறைவு எதார்த்தமான, இயல்பான தமிழ் சினிமாவுக்கு மிகப் பெரிய இழப்பு என்பதில் சந்தேகம் இல்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

தொடர்புடைய சுட்டிகள்:
பிரபல தமிழ் நடிகர் முரளி மரணம்
முரளி பட லிஸ்ட்
நடிகர் முரளியின் கடைசி ‌பேட்டி

பிரபல தமிழ் நடிகர் முரளி மரணம்


இப்போதுதான் படித்தேன், அதற்குள் விமலும் செய்தி அனுப்பி இருக்கிறார்.

முரளியின் நடிப்பைப் பற்றி எனக்கு பெரிதாக எதுவும் அபிப்ராயம் இல்லை. அவரது ஆரம்ப காலத் திரைப்படங்களில் – பூவிலங்கு, புதியவன், பகல் நிலவு மாதிரி படங்களில் – அவரிடம் ஒரு எனர்ஜி தெரிந்தது. கல்லூரி மாணவன் என்ற க்ளிஷேக்குள் புகுந்தவர் வெளியே வர விரும்பவே இல்லை. கடைசி படமான “பாணா”வில் கூட மகன் ஹீரோ, இவர் கல்லூரி மாணவராம்!

அவர் நடித்த படங்களில் எனக்குப் பிடித்தது பொற்காலம். அது சேரனின் படம், முரளியின் படம் இல்லை.

46 எல்லாம் ஒரு வயதே இல்லை. அவர் குடும்பத்துக்கு என் அனுதாபங்கள்.

ஓவர் டு விமல்!

நல்ல எளிமையான ஒரு நடிகர்.
அலட்டல் இல்லாத நடிப்பு.

முரளியுன் அன்றும் இன்றும் படங்கள் பாதி அளவு தான் தயார் செய்து வைத்து இருந்தேன். முழுமை செய்து வெளி இடுவதற்குள் இந்த மாதிரி ஒரு செய்தி …….

தமிழ் திரை உலகிற்கு இது ஒரு பெரிய இழப்பு.
அவர் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்வோமாக.
————————————–
ஏராளமான தமிழ்ப்படங்களில் முன்னணி நாயகனாக நடித்து வந்த முரளி(46 வயது), நெஞ்சுவலி காரணமாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்பே அவரின் உயிர் பிரிந்தது.

1984 ம் ஆண்டு பூவிலங்கு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் முரளி. தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் பகல் நிலவு படத்தில் நடித்தார்.

இதயம், புது வசந்தம், பொற்காலம், காலமெல்லாம் காதல் வாழ்க, வெற்றிக்கொடி கட்டு என்று பல சூப்பர் ஹிட் படங்களைத் தந்த முரளி என்றும் மார்க்கண்டேயன் என்பது மாதிரி இதயம் படத்தில் படத்தில் பார்த்தது போலவே இப்போதும் இளமையாக இருந்து வந்தார்.

கடல் பூக்கள், தேசிய கீதம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்து வந்த இவரது மகன் அதர்வா நாயகனாக நடித்த பாணா திரைப்படம் தற்போது வெளி வந்து ஓடிக் கொண்டிருக்கிறது.

நாயகனாகிவிட்ட மகன் குறித்து சமீபத்தில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய முரளி, ‘’30 வருட திரையுலக வாழ்க்கையில் நான் ஆயிரம் தவறுகள் செய்திருக்கிறேன். அதையெல்லாம் மன்னித்து தயாரிப்பாளர்கள் ஏற்றுக்கொண்டார்கள். என் மகன் அதர்வாவிடம், தயாரிப்பாளர்களை மதிக்க வேண்டும் என்று அறிவுரை சொல்லியிருக்கிறேன்.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் ‘பகல் நிலவு’, ‘இதயம்’ படங்களில் நடித்தேன். அதே நிறுவனம் என் மகனை ஹீரோவாக அறிமுகம் செய்கிறது.

‘பூவிலங்கு’ படத்தில் நான் நடித்திருந்ததை விட அதர்வா சிறப்பாக நடித்திருக்கிறான். எனக்கு டான்ஸ் ஆடவே வராது. அதர்வா நன்றாக டான்ஸ் ஆடியிருக்கிறான். ஒரு நடிகன் மகன் ஹீரோவாக ஜெயிப்பது கஷ்டம். இங்கு வந்திருந்தவர்கள், அதர்வாவை பாராட்டினார்கள். எனவே அவன் ஜெயித்துவிடுவான் என நம்புகிறேன்’’என்று கூறியிருந்தார்.

பணம் முக்கியமல்ல; நல்ல படம்தான் முக்கியம் என்று அதர்வாவுக்கு அறிவுரை கூறி தனது மகனின் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தியிருந்தார்.

இந்நிலையில் திடீர் நெஞ்சுவலியால் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று காலை அவரின் உயிர் பிரிந்தது.

அவரது நினைவில் மூன்று பாட்டுகள் கீழே:

பூவிலங்கு படத்திலிருந்து ஆத்தாடி பாவாட காத்தாட


இதயம் திரைப்படத்திலிருந்து பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா


வெற்றிக்கொடி கட்டு படத்திலிருந்து கறுப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

தொடர்புடைய சுட்டிகள்:
முரளி – அஞ்சலி
முரளி பட லிஸ்ட்
நடிகர் முரளியின் கடைசி ‌பேட்டி