முள்ளும் மலரும் – விகடன் விமர்சனம், இயக்குனர் மகேந்திரன் சொன்னது


03.09.1978 அன்று வந்தது, விமல் அனுப்பி இருக்கிறார். அவருக்கும் விகடனுக்கும் நன்றி!

தலைப்பிலேயே இலக்கிய மணம் கமழ்கிறது. மேலோட்டமாகப் பார்க்கும்போது, முரடனான அண்ணனையும் பூப்போன்ற தங்கையையும் ‘முள்ளும் மலரும்’ என்ற தலைப்பு குறிப்பிடுவதாகத் தோன்றினாலும், முள்ளைப் போன்ற முரட்டு சுபாவம் கொண்ட அண்ணன் கூட, தன் தங்கைக்காகத் தணிந்து வந்து மலராகிறான் என்பதையே அது குறிக்கிறதோ?

தன்மான உணர்வும், தங்கையிடம் தாய்க்கு நிகரான பாசமும் கொண்ட காளியின் பாத்திரப் படைப்பு தமிழ்த் திரைக்குப் புதிதல்ல என்றாலும், ரஜினிகாந்த் அதைச் செய்திருப்பதில் ஓர் அழுத்தத்தையும் ஆழத்தையும் காண்கிறோம். சிவாஜி ஏற்று நடித்த அண்ணன் வேடத்தை இப்போது சிவாஜி ராவ் (ரஜினி) ஏற்றிருக்கிறார். இவரும் சக்கைப் போடு போடுகிறார்.

மேலதிகாரி மீதிருந்த கோபத்தைத் தங்கை மீது காட்டிவிட்டு பின்னர் மனம் வருந்தி வீடு திரும்பும் காளியைத் தங்கை சாப்பிடக் கூப்பிடும்போது, ”நான் வரமாட்டேன், போ!” என்று குழந்தை போலச் சிணுங்குவதும், பிறகு தங்கையிடம், ”நீ என்னை அடிச்சுடுடா” என்று கெஞ்சுவதும் அருமை.

எஞ்சினீயர் தன்னை மணந்துகொள்ளக் கேட்கும்போது ஏற்படும் மகிழ்ச்சி -சகோதரனின் கை போனதும் ஏற்படும் துக்கம் -கடைசியில் அண்ணனிடமே வந்து அடைக்கலம் புகும் பாசம்… அப்பப்பா! இத்தனையும் கொட்டி நடித்திருக்கிறார் ஷோபா. அவர் நடிப்பு பற்றி ஒரே வார்த்தை: ஷோபிக்கிறார்!

சரத்பாபுவுக்குப் பொருத்தமான எஞ்சினீயர் வேடம். மேல் மட்ட அதிகாரிகளுக்கே உரித்தான கொச்சைத் தமிழில் அவர் பேசுவது எஞ்சினீயர் வேடத்துக்கு ஒரு கம்பீரத்தைத் தருகிறது.

சரியான சாப்பாட்டுராமி மங்கா! அடைக்கலம் புகுந்த இடத்தில் அண்ணியாக பிரமோஷன் கிடைக்கிறது படாபட்டுக்கு! வள்ளியின் வாழ்க்கை கெட்டுவிடக் கூடாதே என்ற அக்கறையில் கணவனிடமே அவர் நடத்தும் தர்மயுத்தம், ஒரு பட்டிக் காட்டு அந்நியோன்னியத்தை மிகைப்படுத்தாமல் வெளிப்படுத்துகிறது.

காலை உதயத்தின் அழகு, வானவில்லின் வர்ணஜாலம், இயற்கையின் எழிற்கோலங்கள் -இவற்றை அற்புதமான முறையில் படமாக்கியிருக்கிறார் பாலு மகேந்திரா. கண்களில் ஐஸ் வைத்துக் கொண்டு படம் பார்ப்பது போல, அத்தனை குளிர்ச்சி!


நான்கே பாடல்கள்தான் என்றாலும், அவற்றை இனிமை இழையோட இசை அமைத்திருக்கிறார் இளையராஜா. ராமன் ஆண்டாலும் பாட்டு தொடங்கும் முன்னும், பாட்டின் மத்தியிலும் போட்டிருக்கும் ‘லேலே… லேலே…’ கோரஸ், காதுகளைக் கட்டித் தழுவி முத்தமிடுகிறது. கிளைமாக்ஸ் காட்சியில், வெறும் தாள வாத்தியத்தை மட்டும் வைத்துக் கொண்டு தேவையான ‘மூட்’ உருவாக்கியிருக்கிறார். அதற்காகவே தனியாக அவரைப் பாராட்டலாம்.

இதுவரை கதை-வசன கர்த்தாவாக மட்டுமே இருந்து வந்த மகேந்திரனுக்கு இந்தப் படத்தில் டைரக்ஷன் ஒரு புதிய பொறுப்பு. வியக்கத்தக்க அளவுக்கு அதில் தன் திறமையை வெளிக் காட்டியிருக்கிறார். உதாரணத்திற்கு…

எஞ்சினீயரிடம் காளியைப் பற்றி ஒருவர் கோள் மூட்ட, ஒவ்வொரு வாக்கியத்துக்குப் பிறகும் உண்மை என்ன என்பது போல, காளியின் நடவடிக்கைகளைக் காட்டுவதைப் பற்றிச் சொல்வதா…

நீட்டி முழக்கி, பக்கம் பக்கமாக வசனங்களை எழுதாமல் சொல்ல வேண்டியவற்றைக் கன கச்சிதமாகச் சொல்லி, இறுதிக் காட்சியில் தங்கை அண்ணனிடமே ஓடி வந்து அவனைக் கட்டிப்பிடித்துக் கதறியழும் கட்டத்தில் ஒரு வரி கூட வசனம் இல்லாமல் பேனாவை இறுக மூடி வைத்து விட்ட புத்திசாலித்தனத்தைப் பற்றிச் சொல்வதா…

இனி, அவர் எந்தப்படத்தை இயக்கினாலும், இந்தப் படத்தின் தரத்தை அவரிடமிருந்து எதிர்பார்ப்பார்கள்!

சொந்தக் கிராமத்துக்குச் சென்று இளைப்பாறிவிட்டு வந்த திருப்தி, படம் முடிந்ததும் கிடைக்கிறது. இந்த மலர், தமிழ்த் திரையில் எப்போதோ பூக்கும் ஒரு குறிஞ்சி மலர்!

முள்ளும் மலரும் திரைப்படம் 1978 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், சரத்பாபு, ஷோபா, படாபட் ஜெயலஷ்மி போன்றோரின் நடிப்பில் வெளிவந்தது. ஒளிப்பதிவு பாலுமகேந்திரா. தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான மகேந்திரனின் முதல் திரைப்படம்.

படத்தை தயாரித்த வேணு செட்டியார் மறுத்த ஒரு பாடல், கமல் அவர்களின் தலையீட்டால், ஷூட் செய்யப்பட்டு, படத்தில் இடம் பெற்றது. அந்த பாடலே…. ”செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்” என்ற சூப்பர் ஹிட் பாடல்..

சினிமாவும் நானும் என்னும் தனது நூலில் இயக்குனர் மகேந்திரன் சொல்கிறார்

“முள்ளும் மலரும்” நாவலை நான் படித்த போது கதாபுருஷன் காளி வேலை செய்யும் Winch operator உத்தியோகமும் அவனுடைய வித்தியாச சுயகெளரவமும் என்னைக் கவர்ந்தன. நாவலில் காளியை புலி ஒன்று தாக்கி அவனது ஒரு கை போய் விடும். அந்த அத்தியாயத்தோடு நாவலை மூடி வைத்து விட்டேன். பிறகு காளி அவனது தங்கை வள்ளி இருவரின் குழந்தைப் பருவம் என்று ஒவ்வொன்றாகப் புதிது புதிகாகச் சேர்த்துக் கொண்டே போய் திரைக்கதையின் கடைசிக் காட்சி வரை என் விருப்பத்திற்கு ஏற்ற மாதிரி திரைக்கதை எழுதி முடித்து விட்டேன். அப்போது நான் இயக்குனராகும் எண்ணத்திலேயே இல்லை.

இப்படியாக இருந்த மகேந்திரனுக்கு அவரின் குடும்ப நண்பர் ஆனந்தி பிலிம்ஸ் வேணு செட்டியாரின் அறிமுகம் மூலம் இந்தக் கதையையே தன் முதல் திரைப்படமாக உருவாக்க ஆரம்பித்தார்.

கமலஹாசனின் பரிந்துரையில் பாலுமகேந்திரா ஒளிப்பதிவாளராக நியமிக்கப்பட்டதாகச் சொல்லும் மகேந்திரன் படத்தின் பின்னணி இசையின் முக்கியத்துவம் கருதி இளையராஜாவை ஒப்பந்தம் செய்ததாக சொல்கிறார்.

படத்தின் இறுதிக் காட்சியில் அண்ணன் காளி (ரஜினி) பெருமை பிடிபடாது தன் தங்கையை (ஷோபா) வை அழைத்துக் கொண்டு வந்து மணமகன் (சரத்பாபு) முன்னே வந்து” இப்ப என் தங்கச்சியை உங்களுக்கு மனைவியாக்க சம்மதிக்கிறேன். ஆனா இப்பவும் உங்களை எனக்கு பிடிக்கலை” என்று சொல்வார். இந்தக் காட்சி படமாக்கும் போது சரத்பாபுவை காணவில்லையாம். தேடிப் பிடித்துக் கூட்டி வந்தால் “அதெப்படி இப்பவும் இந்த ஆள் இப்பவும் எனக்குப் பிடிக்கலை என்று சொல்லலாம்” என்று சொன்னாராம். பின்னர் மகேந்திரன் அவருக்கு புரிய வைத்துப் படத்தை எடுத்தாராம்.

படத்தை ரீரிக்கார்டிங் செய்வதற்கு முன்னர் பார்த்த தயாரிப்பாளர் வேணு செட்டியார் “அடப்பாவி என் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுட்டியே, படத்துல வசனமே இல்ல” என்று திட்டித் தீர்த்தாராம். ஓடாத படத்துக்கு விளம்பரம் தேவை இல்லை என்றும் ஒதுங்கிவிட்டாராம். படம் நூறு நாள் கண்டபோது blank cheque-ஐ எடுத்து வந்து “மகேந்திரா, என்னை மன்னிச்சுக்கோ” என்றபோது அன்பாக மறுத்துவிட்டாராம் மகேந்திரன்.

இளையராஜா தன் முதன்முறையாக தன் பின்னணி இசையின் ஆழமான ஞானத்தை வெளிப்படுத்திய படம் “முள்ளும் மலரும்” என்கிறார் மகேந்திரன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல், விகடன் விமர்சனங்கள்

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

One Response to முள்ளும் மலரும் – விகடன் விமர்சனம், இயக்குனர் மகேந்திரன் சொன்னது

  1. Ramkumar G Krish says:

    சொந்தக் கிராமத்துக்குச் சென்று இளைப்பாறிவிட்டு வந்த திருப்தி, படம் முடிந்ததும் கிடைக்கிறது. இந்த மலர், தமிழ்த் திரையில் எப்போதோ பூக்கும் ஒரு குறிஞ்சி மலர்!

    Very true lines….

பின்னூட்டமொன்றை இடுக