யார் அந்த நிலவு? (சாந்தி திரைப்படம்)


விமல் அனுப்பிய சிவாஜி பாட்டு தகவல்களில் முதல் இன்ஸ்டால்மென்ட்.

செய்வன திருந்தச் செய் – சிவாஜி மாண்பு

நடிகர் திலகம் நடிக்கும் அந்தப் படத்தில் அவர் பாடுவதாக உணர்வு பூர்வமான பாடல் ஒன்று. மெல்லிசை மன்னர் எம்எஸ்வி அவர்கள் மிகவும் வித்தியாசமாக அந்தப் பாடலுக்கான மெட்டை உருவாக்கினார். டிஎம்எஸ் பாட வேண்டிய பாடல் அது என்பதால் அவரிடம் அந்தப் பாடலைப் பாடிக் காட்டினார் மெல்லிசை மன்னர். மெட்டைக் கேட்டுப் பார்த்த போது டிஎம்எஸ் முகத்தில் திருப்தியின் அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை.

“நான் வழக்கமாகப் பாடும் பாடல்களில் இருந்து இந்தப் பாடலின் மெட்டமைப்பு மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. அது மட்டுமன்றி இந்த மெட்டு என் பாணிக்கு ஒத்து வரக் கூடிய விதத்திலும் இல்லை. எனவே மன்னிக்க வேண்டும், இந்தப் பாடலை என்னால் பாட முடியாது” என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டார் டிஎம்எஸ்.

“நீங்கள் அப்படிச் சொல்லக் கூடாது, இது கொஞ்சம் வித்தியாசமான மெட்டுத்தான் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் உங்களுக்கு இருக்கும் அபாரமான இசைப் புலமைக்கும் குரல் வளத்திற்கும் இந்தப் பாடலை உங்களால் வெகு சிறப்பாகப் பாட முடியும். எனவே நீங்கள் மறுக்காமல் இந்தப் பாடலைப் பாடிக் கொடுக்க வேண்டும்.” என்று டிஎம்எஸ்ஸிடம் வேன்டுகோள் விடுத்தார் எம்எஸ்வி.

“அப்படியா? இந்தப் பாடலோடு என்னை வீட்டுக்கு அனுப்பத் திட்டமிட்டு இருக்கிறீர்களோ?” என்று மறுபடியும் கொஞ்சம் கோபமாகவே கேட்டார் டிஎம்எஸ்.

ஆனால் எம்எஸ்வி தமது முடிவில் இருந்து பின் வாங்குவதாகத் தெரியவில்லை. “நீங்கள் வேண்டுமானால் பாருங்கள், இந்தப் பாடலும் உங்கள் பாடல்களில் மற்றுமொரு தனித்துவம் பெற்ற பாடலாக மிளிரத்தான் போகிறது’ என்று சொல்லிய எம்எஸ்வி டிஎம்எஸ்ஸை சமாதானம் செய்து அந்தப் பாடலைப் பாட வைத்தார்.

பாடல் காட்சியில் நடிக்க வந்த நடிகர் திலகத்திடம் அந்தப் பாடலைப் போட்டுக் காட்டினார்கள். பாடலைக் கேட்ட நடிகர் திலகம் “உடனடியாக படப்பிடிப்பை ரத்து செய்யுங்கள்.இன்னொரு தினம் இந்தப் பாடல் காட்சிக்கான படப் பிடிப்பை வைத்துக் கொள்ளலாம்” என்றார்.

அவரிடம் காரணம் கேட்டபோது அவர் சொன்னார். “மிக மிக வித்தியாசமாக இந்தப் பாடலின் மெட்டை உருவாக்கி இருக்கிறார் எம்எஸ்வி அவர்கள். டிஎம்எஸ் மிகவும் அபாரமாக இந்தப் பாடலைப் பாடிக் கொடுத்து இருக்கிறார். இந்தப் பாடலை ஒரு சவாலான பாடலாக நான் கருதுகிறேன். டிஎம்எஸ்ஸும், எம்எஸ்வியும் உயிரைக் கொடுத்து உழைத்த இந்தப் பாடலில் எனது நடிப்பும் உயிரோட்டமாக அமையுமாறு நான் பார்த்துக் கொள்ள வேண்டாமா? அதற்கு எனக்கு அவகாசம் வேண்டும். அதனால்தான் படப்பிடிப்பை ரத்து செய்யச் சொன்னேன்” என்றாராம் சிவாஜி.

சொன்னது போலவே அந்தப் பாடலை பல முறை கேட்டுப் பார்த்து அந்த மெட்டையும் டிஎம்எஸ்ஸின் குரலில் உள்ள பாவங்களையும் நன்கு உள்வாங்கிக் கொண்ட நடிகர் திலகம் மிக வித்தியாசமாக அந்தப் பாடல் காட்சியை நடித்துக் கொடுத்தார்.

அந்தப் பாடல் எது என்று கேட்கிறீர்களா? சாந்தி திரைப்படத்தில் இடம் பெற்ற “யார் அந்த நிலவு? ஏன் இந்தக் கனவு?

அந்தக் காலத்துக் கலைஞரகளின் ஆழ்ந்த தொழில் ஈடுபாட்டுக்கும் ’செய்வன திருந்தச் செய்’ என்கின்ற தொழில் நேர்த்தியை மதிக்கின்ற மாண்புக்கும் இந்த சம்பவம் ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

தொகுக்கப்பட்ட பக்கம்: பாட்டுகள்

தொடர்புடைய சுட்டிகள்:
பொட்டு வைத்த முகமோ (சுமதி என் சுந்தரி)
நீயும் நானுமா பாட்டு (கெளரவம்)

சிறை+அனுராதா ரமணன்


சிலிகான் ஷெல்ஃப் தளத்தில் அனுராதா ரமணன் பற்றி ஒரு பதிவு எழுதினேன். அதன் தொடர்ச்சியாக அங்கேயே விகடனில் வந்த சிறை திரைப்படத்தின் விமர்சனத்தைப் பதித்திருக்கிறேன். இந்த மாதிரி நேரங்களில் ஒரே ப்ளாகாக இருந்தால் சவுகரியமாக இருக்குமே, இந்த மாதிரி cross-reference எல்லாம் கொடுக்க வேண்டாமே என்று தோன்றுகிறது. 🙂

என்னை யாரென்று எண்ணி எண்ணி – பாடல் பிறந்த கதை 4


சாரதாவின் பாடல் பிறந்த கதை சீரிஸின் அடுத்த இன்ஸ்டால்மென்ட்.

என்னை யாரென்று எண்ணி எண்ணி – பாலும் பழமும்

‘காதலித்து மணந்த முதல் மனைவியைப் விபத்தில் பறிகொடுத்து விட்டு (சந்தர்ப்ப சூழ்நிலையால் அவள் இறந்துவிட்டதாக நினைத்து) பற்றற்ற வாழ்க்கை வாழும் ஒரு புற்று நோய் டாக்டர். தன்னை வளர்த்து ஆளாக்கியவர்களுக்கு செலுத்தும் நன்றிக்கடனாக (விருப்பமில்லாமல்) செய்து கொண்ட இரண்டாவது திருமணத்தில் மனம் ஈடுபடாத வாழ்க்கை. அவளோடு ஏற்ப்பட்ட வாக்குவாதத்தால் விபத்து நேர்ந்து கண்களையும் இழந்து தவிக்க, அசந்தர்ப்பமாக முதல் மனைவியே அவருக்கு நர்ஸாக வர, இரண்டாவது மனைவியோடு தன் கணவர் விரும்பாத வாழ்க்கை வாழ்வது அறிந்து அவரை அவள் பால் திருப்ப எடுக்கும் முயற்சியின் ஒரு கட்டமாக, உடல் நலமில்லாத அவரை வாக்கிங் அழைத்துப்போகும்போது அவர் மனம் மாற்றம் ஏற்பட பாட, அதற்கு மறுப்பு தெரிவித்து கணவர் பாடும் பாடல்… இதுதான் சிச்சுவேஷன் இதற்கு பாடல் எழுதுங்கள்’ – இயக்குநர் பீம்சிங் ஒரே மூச்சில் சொல்லி முடித்தார். பல்லவிக்காக மெல்லிசை மன்னரும் மூன்று ட்யூன்கள் போட்டு காண்பித்தார். அதில் ஒன்று பிடித்துப் போக, பல்லவிக்காக வரிகளை யோசித்துக்கொண்டிருந்த கண்ணதாசன், தன் உதவியாளர் பஞ்சு அருணாசலத்திடம் “டேய் பஞ்சு, காரில் என் ஃபைல் இருக்குல்ல? அதை எடுத்துகிட்டு வா” என்றார்.

பஞ்சுவும் ஃபைலுடன் வந்தார். அதைப் புரட்டி, ஒரு தாளை எடுத்த கவிஞர் “இந்த வரிகளைப் பாருங்கள், கண்ணனைப் பற்றி நான் எழுதிய பாடல். இதில் ‘அவன்’ என்பதை அவள் என்று மாற்றிப் பாருங்கள். விசு போட்ட சந்தத்துக்கும் நீங்க சொன்ன சிச்சுவேஷனுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன்” என்றார். பீம்சிங் பாடலை வாங்கிப் பார்த்தார். பாடல் இப்படி இருந்தது.

என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் என்று நீ கேட்கிறாய்
நான் ‘அவன்’ பேரை தினம் பாடும் குயிலல்லவா
என் பாடல் ‘அவன்’ தந்த மொழியல்லவா

இதில் அவன் என்று வந்த இடங்களை அவள் என்று மாற்றி விஸ்வநாதன், தன் மெட்டோடு பாட, வாவ்! கனகச்சிதமாக பொருந்தியது. எல்லோரும் ஆச்சரியத்தில் உறைந்து போனார்கள். மெல்லிசை மன்னர் துள்ளி குதித்தார் “எப்படி கவிஞரய்யா இது…?” என்று.

சொற்களை மாற்றிய பின் பாடலின் தன்மை அப்படியே மாறிப் போனது. கடவுளைப் பற்றி கவிஞர் எழுதிய பாடல், இரண்டாவது மனைவியோடு சேர்ந்து வாழும்படி நர்சாக வந்த முதல் மனைவி அட்வைஸ் செய்ய, அவர் அதை மறுப்பதாக அமைந்தது.

என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் என்று நீ கேட்கிறாய்
நான் ‘அவள்’ பேரை தினம் பாடும் குயிலல்லவா
என்பாடல் ‘அவள்’ தந்த மொழியல்லவா

தொடர்ந்து கவிஞர்

என்றும் சிலையான உன் தெய்வம் பேசாதய்யா
சருகான மலர் மீண்டும் மலராதய்யா

என்று வரிகளை அடுக்கினார்.

பாடல் தயார். மறூநாள் ரிக்கார்டிங். விஸ்வநாதன்-ராமமூர்த்தி குழுவினர் தயார் நிலையில் இருந்தார்கள், சுசீலாவும் வந்து தன் போர்ஷன்களை பாடிப் பார்க்க துவங்கிவிட்டார். ஆனால் டிஎம்எஸ் வரவில்லை. சிறிது நேரம் கழித்து அவரிடமிருந்து ஃபோன் வர, பீம்சிங் தான் பேசினார்.

“என்ன் சௌந்தர்ராஜன்… குரல் ஒரு மாதிரியாக இருக்கு?”

“அதைச் சொல்லத்தான் ஃபோன் செய்தேன். நேற்று இரவு முதல் ஜலதோஷம். அதனால் இன்னைக்கு ரிக்கார்டிங்கை கேன்ஸல் செஞ்சுடுங்க. இரண்டு நாள் கழித்து வச்சுக்கலாம்”.

(இப்போ மாதிரி ட்ராக் சிஸ்டம் எல்லாம் அப்போது கிடையாது. பாடகர்கள், இசைக் குழுவினர் எல்லோரும் ஒரே நேரத்தில் அமர்ந்து பாடலை ரிக்கார்டிங் செய்து முடிக்க வேண்டும். ஒருவர் தவறு செய்தாலும் அத்தனை பேரும் மீண்டும் வாசிக்க வேண்டும். இப்போது டூயட் பாடல் என்றால் அனுராதா ஸ்ரீராம் தன்னுடைய போர்ஷனை பாடி விட்டு போய்விடுவார். தன்னோடு உடன் பாடுவது எஸ்.பி.பி.யா, மனோவா, அல்லது திப்புவா என்பது கேஸட் வெளியான பின்புதான் அவருக்கே தெரியும்)

பீம்சிங் கேட்டார்…. “உங்களுக்கு ஜலதோஷம் மட்டும் தானா? அல்லது ஜுரம் ஏதாவது அடிக்கிறதா?”

“இல்லீங்க வெறும் ஜலதோஷம் மட்டும்தான்”

“அப்படீன்னா உடனே புறப்பட்டு ரிக்கார்டிங் தியேட்டருக்கு வாங்க. நீங்க இப்போ பேசுகிற குரல்தான் இந்தப் பாடலுக்கு வேண்டும்” என்றார் பீம்சிங்.

டிஎம்எஸ்ஸும் வந்து விட்டார். “அப்படி என்னென்னே இன்று என்னுடைய குரலில் விசேஷம்?” என்று கேட்க, இயக்குநர் சொன்னார் “இந்தக் காட்சியில் சிவாஜி உடல்நிலை சரியில்லாதவராக இருக்கிறார். அதோடு வாக்கிங் போகும்போது மழையிலும் நனைந்து விடுகிறார். அதனால் இந்தக் காட்சிக்கு இப்போதுள்ள் உங்கள் ஜலதோஷக்குரல் கச்சிதமாக பொருந்தும்” என்றார்.

டிஎம்எஸ் ஒத்திகை பார்த்து விட்டு ரிக்கார்டிங்குக்கு தயாரானார். அப்போது விஸ்வநாதன் அவர்கள் ” அண்ணே…, மூக்கை உறிஞ்சுவது, தும்மல் போடுவது எல்லாத்தையும் ரிக்கார்டிங் துவங்கும் முன்னர் பண்ணிக்குங்க. இடையில் பண்ணிடாதீங்க.” என்றார்.

அதற்கு பீம்சிங் “பரவாயில்லை, அப்படியே தும்மல் வந்தாலும் போடுங்க. படத்தில் சிவாஜி சாரையும் தும்ம வைத்து எடுக்கிறேன்” என்று சொல்ல அனைவரும் சிரித்தனர்.

நல்லவேளையாக பாடல் முடியும் வரை டிஎம்எஸ் அவர்கள் தும்மல் எதுவும் போடவில்லை. இப்போதும் கூட அப்பாடலைக் கேட்கும்போது, டி.எம்.எஸ்ஸின் ஜலதோஷக்குரல் நமக்கு நன்றாக தெரியும்.


பாட்டுக்கு வீடியோ கிடைக்கவில்லை. இங்கே கரவோகே முறையில் வரிகளைப் பார்த்துக் கொண்டே பாட்டை கேட்கலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: சாரதா பக்கம்,பாட்டுகள்

தொடர்புடைய சுட்டிகள்:
விஸ்வநாதன் வேலை வேணும் – பாடல் பிறந்த கதைகள் I
சொன்னது நீதானா – பாடல் பிறந்த கதை 2
கேட்டவரெல்லாம் பாடலாம் – பாடல் பிறந்த கதை 3

எம்எஸ்விடைம்ஸ் தளத்தில் சாரதாவின் ஒரிஜினல் பதிவு
எம்எஸ்விடைம்ஸ் தளம்