ராஜாதி ராஜா – விகடன் விமர்சனம்


இதுவும் விமல் அனுப்பியதுதான். அவருக்கும் விகடனுக்கும் நன்றி!

மினி! – படத்தில் ரஜினிக்கு இரட்டை வேடம். ஹாஸ்யம், ரௌத்ரம், காமம், குரோதம் எல்லாம் கலந்து, ரஜினிக்கென்றே மசாலா தூவி வைக்கப்பட்டிருக்கும் ரெடிமேட் ஃபார்முலா படம். சரி எதிர்காலத்தில் ரஜினிக்கு எப்படித் தீனி போடவேண்டும் என்று டைரக்டர்கள் சிந்தித்துச் செயல்பட வேண்டிய தருணம் வந்துவிட்டது.

மாக்ஸி! – ‘அப்பாவைக் கொன்றவர்களைப் பழிவாங்கறேன்” என்று பல்லைக் கடித்தபடி உறுமுகிறார் பட்டணத்து ரஜினி. அதே மாதிரி, ”எப்படியாவது 50,000 ரூபாயை என் மாமன் மூஞ்சியில கடாசிட்டு லட்சுமி(நதியா)யைக் கட்டிக்கறேன்” என்று கிளம்புகிறார் பட்டிக்காட்டு ரஜினி. செய்யாத கொலைக்காகப் பட்டணத்து ரஜினிக்கு மரண தண்டனை வழங்கப்பட, அவர் ஜெயிலுக்குப் போய் அங்கிருந்து தப்பி ஓடும்போது, வழியில் இன்னொரு ரஜினியைப் பார்க்கிறார். ”எனக்குப் பதில் பதினைந்து நாள் நீ உள்ளே இரு. நான் நிரபராதினு நிரூபிச்சுட்டு உன்னை விடுதலை பண்றேன். உன் கல்யாணத்துக்குப் பணமும் தர்றேன்” என்று சொல்ல, பட்டிக்காட்டார் தலையாட்டி விட்டு, ‘உள்ளே’ போகிறார். தலையில் கறுப்புத் துணி மாட்டி, கழுத்தில், சுருக்கை இறுக்குகிற பரபரப்பான சமயத்தில், முன்னவர் ஆதாரங்களோடு பாய்ந்து வந்து இவரை மீட்கிறார்.

சட்டம் தெரிந்தவர்கள் படத்தைப் பார்த்தால், புழுவாக நெளிந்து போவார்கள். அத்தனை குளறுபடி! ஆனால், அண்ணன்(!) ரஜினி பண்ணுகிற அட்டகாசத்தில் குளறுபடியெல்லாம் பஞ்சாய்ப் பறந்துவிடுகிறது என்பது வேறு விஷயம்!

இடப்பக்கக் கடை வாயைக் கடித்தபடி வசனம் பேசிக்கொண்டு படம் முழுக்கச் சண்டை போடுகிறார் சூப்பர் ஸ்டார்! கையால் அடிக்கிறாரா, காலால் உதைக்கிறாரா, எதிராளிக்கு அடி கண்ணில் விழுந்ததா, வயிற்றில் இறங்கியதா என்று ஊகிப்பதற்குள் சண்டையே முடிந்து போகிறது. சும்மா சொல்லக் கூடாது… தமிழ் சினிமாக்களில் ஸ்டன்ட் ரொம்பவும்தான் முன்னேறி வருகிறது!

மேக்கப்காரர் வித்தியாசமே காட்டவில்லையென்றாலும், இரண்டு காரெக்டர்களுக்கும் நடிப்பில் செமத்தியான வித்தியாசம் காட்டிவிடுகிறார் ரஜினி.

கோடீஸ்வரர் வேஷம் போட்டாலும், ரிக்ஷாக்காரர் ஜனகராஜால் மசால் வடை, சைனா டீயை மறக்கமுடியவில்லை. ராதாரவியிடம் அடிக்கடி உளறி அப்புறம் சமாளிக்கிறார். அநியாயத்துக்கும் வயிற்றில் கத்தி வாங்கிக்கொண்டு, தவளை மாதிரி காலைப் பரப்பிக்கொண்டு அவர் செத்துப்போவதிலும் பரிதாபம் இருக்கிறது.

முழுக்க முழுக்க ஹீரோ படம் என்பதால், ராதா, நதியா இரண்டு பேருமே டெபாஸிட் இழக்கிறார்கள்! சொந்தப் படம் என்பதால் பார்த்துப் பார்த்து அடித்திருக்கிறார் இளையராஜா. ஆனால், டியூன்களில் பழைய வாசனை கொஞ்சம் அதிகம்தான்!

தொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல், விகடன் விமர்சனங்கள்

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

பின்னூட்டமொன்றை இடுக