புல்லட்டின் போர்ட் (அண்மைய பதிவுகளுக்கு கீழே scroll செய்யவும்)


இது எங்கள் நோட்டிஸ் போர்ட்.

பிரபல பதிவர் லக்கிலுக் எங்களைப் பாராட்டி இப்படி இந்தப் பதிவில் எழுதி இருக்கிறார். இந்த பதிவு புதிய தலைமுறை இதழிலும் வந்திருக்கிறதாம்.

ஆர்.வி. என்ற பதிவரின் ‘அவார்டா கொடுக்குறாங்க?’ (awardakodukkaranga.wordpress.com) என்ற வலைப்பூவில் பழைய, நல்ல சினிமாக்கள் குறித்த விரிவான அலசல்கள் படிக்க கிடைக்கிறது.

அவருக்கு நன்றி! விமர்சனம் எழுதுவதே குறைந்து வருகிறது, இவர் சொல்லி இருப்பதற்காகவாவது தொடர வேண்டும். 🙂

ரொம்ப நாளாக பயமுறுத்திக் கொண்டே இருந்தேன், கடைசியில் புத்தகங்களுக்காக ஒரு தனி ப்ளாக் – சிலிகான் ஷெல்ஃப் – ஆரம்பித்துவிட்டேன். ஜெயமோகன் இந்த தளத்தைப் பற்றி தன் ப்ளாகில் எழுதி இருக்கிறார்.

எங்கள் தளங்கள்

ப்ளாக்
அவார்டா கொடுக்கறாங்க?
கூட்டாஞ்சோறு
சிலிகான் ஷெல்ஃப்

எங்களுடைய அழைப்பு எழுத்தாளர் சாரதாவின் கட்டுரைகளும் வரத் தொடங்கியிருக்கிறது. அன்றும் இன்றும் என்ற ஃபோட்டோ பதிவுகள் அனேகமாக விமல் உபயத்தில் ஓடிக் கொண்டிருக்கின்றன.

பழைய தெலுகு திரைப்படம் – யோகி வேமனா


சமீபத்தில் யோகி வேமனா பற்றி படித்தேன். தமிழுக்கு அவ்வையார் போல தெலுகுக்கு வேமனா என்று நினைக்கிறேன். அப்போது யோகி வேமனா திரைப்படத்தைப் பற்றியும் தெரிந்தது. சரி கொஞ்சம் நேரம் பார்ப்போம் என்று ஆரம்பித்தேன். எதிர்பார்த்ததை விட நன்றாகவே இருந்தது.

படத்தின் revelation நாகய்யாதான். தெய்வமகன் சிவாஜி, வசந்தமாளிகை சிவாஜி என்று சிவாஜி ரசிகர்கள் சிலாகிப்பதைக் கேட்டிருக்கலாம். (நானும் தெய்வமகன் சிவாஜிக்கு ரசிகன்தான்). நாகய்யா – அழுமூஞ்சி நாகய்யா, ஒரே stereotype பாத்திரத்தில் மட்டுமே நான் பார்த்திருக்கும் நாகய்யா அந்த ஸ்டைலை எல்லாம் தூக்கி சாப்பிட்டுவிட்டார். படத்தின் முதல் பாதியில் வேமனா போகி, தாசி பக்தர். Subtle ஆன உதட்டோரத்து சிறு சிரிப்பில், உடல் மொழியில், நடையில் அப்படியே கொண்டு வந்துவிட்டார். நடிப்பில் கலக்குகிறார்.

திரைப்படத்தின் அடுத்த takeaway எம்.வி. ராஜம்மா. ராஜம்மாவுக்கு தாசி பாத்திரம். எப்போதும் சோக முகத்துடன் வலம் வரும் ராஜம்மாவா இது! நன்றாகவே நடனமாடுகிறார்.

வேமனா பதினேழாம் நூற்றாண்டில் பிறந்தவராம். ஆனால் அவர் பிறப்பு, வாழ்வு பற்றி சரியான தரவுகள் இல்லையாம்.

திரைப்படத்தின் கதைப்படி வேமனா சிற்றரசர் குடும்பத்தில் பிறந்தவர். அவரது அண்ணியின் அரவணைப்பில் வளர்ந்தவர். அண்ணியின் மகள் ஜோதி மீது உயிரையே வைத்திருக்கிறார். இளம் வயதில் பெண் பித்தர். வீட்டில் இருக்கும் நகைகள், பணத்தை திருடிக் கொண்டு போய் தாசி வீட்டில் கொட்டுகிறார். அண்ணி/அண்ணன் யாரும் அவரை திருத்த முடியவில்லை. கப்பம் கட்ட வைத்திருந்த பணத்தை தாசியிடம் கொடுத்துவிட அண்ணனை ராஜா சிறை செய்துவிடுகிறார். பொற்கொல்லர் அபிராம் வேமனாவின் உயிர் நண்பர். இருவரும் ரசவாதம் செய்ய முயற்சிக்கிறார்கள்.  வேமனாவின் கையில் ஸ்வர்ணரேகை ஓடுகிறது, அதனால் வெற்றி கிடைக்கிறது. ரசவாதத்தில் மும்முரமாக இருக்கும்போது அண்ணன் மகள் ஜோதி இறந்துவிடுகிறாள். சோகத்தில் வீழும் வேமனா சாவின் ரகசியம் என்று அறிந்து கொள்ளத் தவிக்கிறார். சிவபெருமான் அருளால் அவரும் ஒரு யோகியாகிறார், அவ்வையார் மாதிரி நிறைய பாட்டு பாடுகிறார், கடைசியில் ஜீவசமாதி அடைகிறார்.

நமக்கு கிடைக்கும் தொன்மக் கதைகளின் படியும் ஏறக்குறைய இப்படித்தான். தாசி அண்ணியின் நகைகளைக் கேட்க, அண்ணியும் கொடுப்பதாகவும், அண்ணி தாசி முழு நிர்வாணமாக பின்னால் வளைந்து தன் மூக்குத்தியை எடுக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்க அந்த “ஆபாசக் காட்சியை” காணும் வேமனாவின் பெண் பித்து முடிவடைகிறது என்று ஒரு தொன்மக்கதை இருக்கிறது. பொற்கொல்லர் அபிராம் ஒரு சாமியாருக்கு காலம் காலமாக சேவை செய்வதாகவும், சாமியார் அபிராமுக்கு சர்வ சித்திகளையும் அருளும் தருணத்தில் அபிராமை ஏமாற்றி வேமனா அவற்றைப் பெற்றுக் கொள்வதாகவும் ஒரு தொன்மக்கதை இருக்கிறது. அண்ணன் மகள் இறப்பால் வேமனா உலகைத் துறந்து சன்னியாசி ஆவது தொன்மக்கதைகளில் இருக்கிறது.

வேமனாவின் பாடல்கள் மிகப் பிரபலமாம். தமிழில் நாம் அங்கங்கே அவ்வையார் பாடல்களை மேற்கோள் காட்டுவது போல ஆந்திராவில் இவர் பாடல்களை மேற்கோள் காட்டுவார்களாம். ஏதாவது தெரிந்திருந்தால் திரைப்படத்தை இன்னும் ரசித்திருப்பேன்.

எல்லாருமே நன்றாக நடித்திருக்கிறார்கள். நாகையாவைத் தவிர மற்றவர்களில் நண்பர் அபிராமாக வரும் லிங்கமூர்த்தியும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

1947-இல் வெளிவந்த திரைப்படம். கே.வி. ரெட்டி இயக்கம். நாகையாவே இசை. சில பாடல்கள் இனிமையாக இருக்கின்றன.

நாகையாவின் நடிப்புக்காக கட்டாயம் பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தெலுகு திரைப்படங்கள்

It Happened One Night


Version 1.0.0

எனக்கு மிகவும் பிடித்த திரைப்படங்களில் ஒன்று.

1934-இல் வந்த திரைப்படம். க்ளார்க் கேபிள், க்ளாடெட் கோல்பர்ட் நடித்தது. ஃப்ராங்க் காப்ரா இயக்கம். 1933-இல் சாமுவெல் ஹாப்கின்ஸ் ஆடம்ஸ் எழுதிய Night Bus என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டது.

இந்தத் திரைப்படத்தில் நடித்தற்காக க்ளார்க் கேபிள் சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதைப் பெற்றார். க்ளாடெட் கோல்பர்ட்டுக்கு சிறந்த நடிகைக்கான விருது. ஃப்ராங்க் காப்ராவுக்கு சிறந்த இயக்குனர் விருது. ராபர்ட் ரிஸ்கினுக்கு சிறந்த திரைக்கதைக்கான விருது. முத்தாய்ப்பாக சிறந்த திரைப்படத்துக்கான விருதும்…

எல்லி ஆண்ட்ரூஸ் பெரிய பணக்கார வீட்டுப் பெண். கிங் வெஸ்ட்லி என்ற விமான ஓட்டியுடன் காதல். அவன் பணத்துக்காகத்தான் இவளை விரும்புகிறான் என்று அப்பா ஆண்ட்ரூஸுக்கு நன்றாகத் தெரியும். அதனால் காதலுக்கு தடை போடுகிறார். எல்லி வீட்டுக் காவலிலிருந்து தப்பித்து ஓடிவிடுகிறாள், மையாமியிலிருந்து கிங் வசிக்கும் நியூ யார்க் செல்ல வேண்டும்.  கிங்கோடு அவள் ஒன்று சேரக்கூடாது என்பதற்காக அப்பா அவளைக் கண்டுபிடித்து வீட்டுக்குக் கூட்டி வர தனிப்படையையே இறக்குகிறார், கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு பெரிய பரிசுகளை அறிவிக்கிறார்.

எல்லி மையாமியிலிருந்து நியூ யார்க் செல்லும் ஒரு பஸ்ஸில் ஏறுகிறாள். அவள் சக பயணி பத்திரிகை நிருபர் பீட்டர் வார்ன். பீட்டருக்கு அவள் யாரென்று தெரிந்துவிடுகிறது. இருந்தாலும் கொஞ்சம் இரக்கம், அவள் தப்பிச் செல்வதைப் பற்றி பத்திரிகையில் எழுதினால் பெரிய சென்சேஷன் ஆகும் என்ற எண்ணம். அதனால் அவளுக்கு உதவுவார். அதே நேரத்தில் எல்லி அதீத செல்லம் கொடுத்து வளர்க்கப்பட்ட பெண் என்று அவருக்கு கொஞ்சம் இளக்காரமும் உண்டு. போகப் போக இருவருக்கும் காதல்….

கேபிள் கலக்கி இருப்பார். க்ளாடெட்டும் சளைக்கவில்லை. ஆனால் என்னைப் பொறுத்தவரையில் திரைக்கதையை எழுதிய ரிஸ்கின்தான் நாயகன். எளிய கதையை மிகச் சுவாரசியமான திரைக்கதையாக மாற்றி இருக்கிறார்.

இதைத் தழுவி ஹிந்தியில் ராஜ் கபூர், நர்கீஸ் நடித்து சோரி சோரி என்ற திரைப்படத்தை ஷங்கர்-ஜெய்கிஷன் இசையில் ஏவிஎம் தயாரித்தனர். பல அருமையான பாடல்கள் கொண்ட திரைப்படம். ஆமிர் கான், பூஜா பட் நடித்து தில் ஹை கி மாந்தா நஹின் என்றும் தொண்ணூறுகளில் ஒரு திரைப்படம் வந்தது.

சமீபத்தில் எழுத்தாளர் பி.ஏ. கிருஷ்ணன் இந்தத் திரைப்படத்தை குறிப்பிட்டிருந்தார். அதனால்தான் மீண்டும் ஒரு முறை பார்த்தேன். படத்தின் charm குறையவே இல்லை. கட்டாயம் பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆங்கிலத் திரைப்படங்கள்

 

பழைய கமல் திரைப்படம்: குமார விஜயம்


நான் பழைய திரைப்படங்களைப் பார்ப்பதே அனேகமாக பாடல்களுக்காகத்தான். குமாரவிஜயத்தையும் சிறு வயதில் விரும்பிக் கேட்ட ஒரு பாடலுக்காகத்தான் பார்த்தேன் – கன்னி ராசி என் ராசி. தேவராஜன் இசையில் ஜேசுதாஸ், சுசீலா பாடியது.  ஜேசுதாஸ் ரிஷபக் காதல் என்று ரிஷபத்தை அழுத்தும் விதம் நிறையவே பிடிக்கும். எழுதியது யாரென்று தெரியவில்லை.

படத்தைப் பார்க்கும்போது அந்தக் கால சபா நாடகம் ஒன்றைப் பார்க்கும் உணர்வு வந்தது. கடைசியில் பார்த்தால் கோமல் ஸ்வாமிநாதன் எழுதிய நாடகம் ஒன்றைத்தான் – பெருமாள் சாட்சி – திரைப்படம் ஆக்கி இருக்கிறார்கள்.

ஊர் பெரிய மனிதர் வி.கே. ராமசாமியின் சிறு வயது திருவிளையாடலில் பிறந்தவன்(ள்) என்று சொல்லிக் கொண்டு கமலும் ஜெயசித்ராவும் அவரை சந்திக்கிறார்கள். விகேஆர் என்ன செய்ய வேண்டும்? அவர்கள் இருவருக்கும் வேலை கொடுத்து வீட்டில் தங்கவும் வைப்பார் என்று நீங்கள் ஊகித்தால் உங்களுக்கு அந்தக் கால சபா நாடகங்களைப் பார்த்த அனுபவம் உண்டு என்று சொல்லிவிடலாம். இருவரும் ஒருவரை ஒருவர் கவிழ்க்க திட்டம் போடுகிறார்கள், திட்டத்தின் ஒரு பகுதியாக கன்னி ராசி என் ராசி என்று டூயட் பாடுகிறார்கள், விகேஆரின் மகன், மகளை ஏமாற்ற முயல்பவர்களை தோற்கடிக்கிறார்கள், விகேஆரை ஏமாற்றும் அவரது மைத்துனன் தேங்காயை கண்டுபிடிக்கிறார்கள், கடைசியில் பார்த்தால் இருவரும் கணவன்-மனைவி, கமல்தான் விகேஆரின் மகன். விகேஆரின் மனைவி சுகுமாரி கமலை ஏற்கிறார், சுபம்!

கணவனும் மனைவியும் எதற்காக ஒருவரை ஒருவர் கவிழ்க்க வேண்டும் என்றெல்லாம் கேட்கக் கூடாது.

1976-இல் வந்த திரைப்படம். ஏ. ஜகன்னாதன் இயக்கியது. கமல், ஜெயசித்ரா, வி.கே. ராமசாமி, தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன், சுகுமாரி, மலையாள நடிகர் சோமன், கல்லாப்பெட்டி சிங்காரம் நடித்தது. தேவராஜன் இசை.

கன்னி ராசி என் ராசி பாட்டை மட்டும் கேட்பது நலம்…

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் திரைப்படங்கள்

தொடர்புடைய சுட்டி: விக்கி குறிப்பு

 

சர்ச்சை திரைப்படம்: அன்னபூரணி


இன்று மாறுதலுக்காக சமீபத்திய திரைப்படமான அன்னபூரணியைப் பற்றி. சர்ச்சை கிளம்பியதால்தான் பார்த்தேன். ஏண்டா பார்த்தோம் என்று நொந்தும் போனேன்.

இத்தனைக்கும் சைவ உணவு மட்டுமே உண்ணும் ஆசாரமான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பெண் மாமிசம் சமைக்க வேண்டிய சூழலை எப்படி எதிர்கொள்வாள் என்பது நல்ல, காலாவதி ஆகாத கருதான். அதை எப்படி எல்லாம் கெடுக்க முடியுமோ அப்படி கெடுத்திருக்கிறார்கள்.

எனக்கு முஸ்லிம் பன்றிக்கறி சமைக்க வேண்டிய சூழலை எப்படி எதிர்கொள்வார் என்ற whataboutery கேள்வி எதுவும் இல்லை. ஐயங்கார் கதைக்கே இத்தனை பிரச்சினை என்றால் முஸ்லிம் கதையில் டவுசர் கிழிந்துவிடும், ரிஸ்க் எடுக்க தயாரிப்பாளர் தயாராக இல்லை என்பது புரிந்து கொள்ளக் கூடியதுதான். அதே போலத்தான் ஆசாரமான குடும்பம் என்று காட்ட வேண்டுமென்றால் ஐயர், ஐயங்கார் என்று கோடி காட்டுவதுதான் சுலபம், அதை வலியுறுத்தத்தான் மடைப்பள்ளி சமையல், ஸ்ரீரங்கம் கோவில் என்று கதை போகிறது. ஆனால் முற்போக்கு மனப்பான்மையை காட்ட வேண்டும் என்று இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா நினைத்துவிட்டார், அதை செயற்கையாக வலிந்து புகுத்தி கடுப்பைக் கிளப்புகிறார்.

மிகவும் கடுப்பேற்றிய காட்சி பிரியாணி சமைப்பதற்கு முன் ஹிஜாப் அணிந்து நமாஸ் செய்யும் காட்சிதான். என்னய்யா சொல்ல வரே? அக்காரவடிசல் செய்வதற்கு முன்னால் அப்பாவின் நம்பிக்கைக்காக ஒரு எழவையும் செய்யக் காணோமே? அது என்ன முஸ்லிம் பெரிசின் நம்பிக்கைக்கு மட்டும் இந்தம்மா மரியாதை செய்வாங்க, சொந்த அப்பாவின் நம்பிக்கை என்றால் மயிரே போச்சா?

அப்புறம் மாமிசத்தின் ருசி தெரிந்தால்தான் நன்றாக மாமிசம் சமைக்க முடியும் என்று நாயகி நினைத்தாளாம், அதனால் மாமிசம் சாப்பிட ஆரம்பித்தாளாம். சரி அப்புறம்தான் ருசியே போய்விட்டதே? அதற்கப்புறம்தானே போட்டியில் வெற்றி? இப்படி ருசி போனதுதானே அவள் வெற்றிக்கு பெரிய தடை? அப்புறம் தான் நினைத்தது தப்பு, மாமிசத்தின் ருசி தெரியாவிட்டாலும் நன்றாக சமைக்க முடியும் என்று ஒரு காட்சி வர வேண்டாமா?

அந்தக் கால திரைப்படங்களில் symbolic shot ஒன்றை சில சமயம் வைப்பார்கள். திருடன் வில்லனிடமிருந்து தப்பினால் நண்டு பருந்திடமிருந்து தப்புவது மாதிரி ஒரு காட்சி இருக்கும். 50 வருஷத்துக்கு முன்னால் யோசித்த அளவுக்குக் கூட இயக்குனர் இன்று யோசிக்க மாட்டேன் என்கிறார், நாயகிக்கு தடை வந்தால் மலையிலிருந்து தடுக்கி விழும் கார்ட்டூன் காட்சி ஒன்றை வைத்திருக்கிறார்.

திரைப்படத்தின் ஒரே நல்ல காட்சி அடுப்பு இல்லாமல் நாயகி சமைப்பது.

2023-இல் வந்த படம். நயனதாரா நாயகி. ஜெய் ஒப்புக்கு சப்பாணி நாயகன். ரெடின் கிங்ஸ்லி எல்லாம் எதற்கு வருகிறார் என்றே தெரியவில்லை. சத்யராஜ், கே.எஸ். ரவிகுமார், சச்சு, கார்த்திக் குமார், அச்யுத் குமார், ரேணுகா என்று சில தெரிந்த முகங்கள். நிலேஷ் கிருஷ்ணா இயக்கம்.

படத்தைப் பார்க்கலாம் என்று யாராவது அழைத்தால் ஓடிவிடுவது உத்தமம். 3 மதிப்பெண் (கருவுக்காக மட்டும்), D grade.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் திரைப்படங்கள்

 

சக்கரம்: பழைய திரைப்படம்


இந்தத் தளத்தில் பழைய திரைப்படங்களைப் பற்றித்தான் எழுதுவேன். வாரம் ஒரு பதிவாவது எழுத வேண்டும் என்று எண்ணம். ஆனால் பழைய படம் ஒன்றைப் பார்த்து கொஞ்ச நாளாகிவிட்டதால் தாமதமாக பதிவு வருகிறது.

சக்கரம் படத்தைப் பற்றிய எனது ஒரே நினைவு – அதில் “காசேதான் கடவுளப்பா” என்ற பிரபலமான பாடல் உண்டு.

நான் ஏ.வி.எம். ராஜன் நடித்த படங்களை பொதுவாக ரசிப்பதில்லை. அவர் சிவாஜியின் சுமாரான நகல் என்று எனக்கு ஒரு எண்ணம் உண்டு. (இத்தனைக்கும் “என்னதான் முடிவு” எனக்குப் பிடித்த திரைப்படங்களில் ஒன்று.) அதனால் பழைய திரைப்படங்களை விரும்பிப் பார்த்தாலும் இதைத் தவிர்த்தே வந்திருக்கிறேன்.

கடைசியாக ஒரு வழியாகப் பார்த்தேன். வழக்கமான காட்சிகள் உண்டுதான் என்றாலும் தமிழுக்கு வித்தியாசமான படம்தான். வழக்கமான காதல், குடும்பம், பாசம் என்று இல்லாமல் இருப்பதே கொஞ்சம் refreshing ஆக இருக்கிறது. ராஜனின் பாத்திரமும் நடிப்பும் நன்றாகவே வந்திருக்கின்றன. அவருக்கு “வில்லன்” பாத்திரம்தான் என்றாலும் அவர்தான் நாயகன், ஜெமினி கணேசன் சும்மா ஒப்புக்கு சப்பாணிதான்.

1968-இல் வந்த திரைப்படம். ஜெமினி, ராஜன், வெண்ணிற ஆடை நிர்மலா, சௌகார் ஜானகி, நாகேஷ், மனோரமா, மேஜர் சுந்தரராஜன், எம்.ஆர்.ஆர். வாசு, ஓ.ஏ.கே. தேவர், வி.எஸ். ராகவன் என்று பலரும் நடித்திருக்கிறார்கள். எஸ்.எம். சுப்பையா நாயுடு இசை. திரைக்கதை, இயக்கம் ஏ. காசிலிங்கம்.

எளிய கதைதான். ஜம்பு (ராஜன்) மைசூர் காடுகளில் வாழும் நல்ல மனம் படைத்த கொள்ளைக்காரன். திருடும் பணத்தை ஏழைகளுக்கு கொடுத்துவிடுகிறான். பண்ணையார் (வி.எஸ். ராகவன்) வீட்டில் திருடப் போகும்போது அங்கு பிரசவ வலியால் துடிக்கும் பண்ணையார் பெண்ணைக் காப்பாற்றி அவளை தங்கையாக ஏற்றுக் கொள்கிறான். பணக்காரப் பையனோடு காதல் தோற்றுவிடும் என்பதால் தற்கொலை செய்து கொள்ளப் போகும் பாபுவின் (ஜெமினி) தங்கையைக் காப்பாற்றுகிறான். ஜம்புவை பிடித்துக் கொடுத்தால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு என்று அரசு அறிவித்திருக்கிறது.

பாபுவின் தங்கை காதலிப்பது அவனது எஜமானி அம்மாளின் (சௌகார்) பையனை. சௌகார் வசதி படைத்த குடும்பத்தவர்தான், ஆனால் கடனில் மூழ்கிக் கொண்டிருக்கிறார். 50000 ரூபாய் கொடுத்தால் உன் தங்கையை மருமகளாக ஏற்கிறேன் என்கிறார்.

பாபு ஜம்புவைப் பிடித்துக் கொடுத்து லட்ச ரூபாய் பரிசை வெல்லலாம் என்று கிளம்புகிறான். அவனுக்கு துணையாக அவன் காதலி (நிர்மலா); மற்றும் காடுகளைப் பற்றி நன்கு அறிந்த வழிகாட்டி (நாகேஷ்), கத்தி வீசும் நிபுணன் (ஓ.ஏ.கே. தேவர்), வர்மக்கலை நிபுணன் (வாசு), கயிறு வீசும் நிபுணன் ஒருவன் சம்பளம் பேசி சேர்ந்து கொள்கிறார்கள். ஜம்புவின் தோழர்களை இந்த நிபுணர்கள் கொன்றுவிட, பாபு ஜம்புவை சண்டை போட்டு தோற்கடிக்கிறான். ஜம்பு பாபுவிடம் சரண், தப்பி ஓடமாட்டேன் என்று வாக்கு கொடுக்கிறான்.

லட்ச ரூபாய் பரிசு, தங்களுக்கு நூறுகளில்தான் சம்பளம் என்று உணரும் தோழர்கள் பணத்துக்காக அடித்துக் கொள்கிறார்கள். ஜம்புவின் தங்கைதான் நாகேஷின் மனைவி (மனோரமா). அண்ணனைப் பிடித்துக் கொடுத்தால் லட்ச ரூபாய் பரிசு என்றதும் பிடித்துக் கொடுக்க அவளும் தயாராக இருக்கிறாள். ராஜன் பணத்துக்கு முன் நட்பும் உறவும் ஒரு பொருட்டில்லை என்று காசேதான் கடவுளப்பா என்று பாட்டு பாடுகிறார். கடைசியில் சௌகார்தான் ராஜனின் மனைவி வேறு. சௌகார் தற்கொலை செய்து கொள்ள, பத்தினிக்கு பணம் தூசு என்று வசனம் பேசிவிட்டு ராஜனும் தற்கொலை. பணம் தேவையில்லை என்று எல்லாரும் மறுக்கிறார்கள்.

தமிழ் திரைப்படங்களில் எதிர்பார்க்கக் கூடிய திருப்பங்கள், twists எல்லாம் உண்டுதான். ஆனால் கதைக்களம் வித்தியாசமாக இருப்பதால் திரைப்படம் பிழைக்கிறது. ராஜன் நன்றாகவே நடித்திருக்கிறார். ஜெமினியும் நாகேஷும் தண்டத்துக்கு வந்து போகிறார்கள். நாகேஷுக்காக படம் கொஞ்சம் ஓடலாம் என்ற காலம். நிர்மலா அதை விட தண்டம்.

பழைய படம் விரும்பிகள் பார்க்கலாம். பத்துக்கு 6.5 மதிப்பெண். C+ grade.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் திரைப்படங்கள்

தொடர்புடைய சுட்டி: யூட்யூபில் திரைப்படம்

 

ஆலயம் – பழைய தமிழ் திரைப்படம்


ஆலயம் (1967) 1967-க்கான சிறந்த தமிழ் திரைப்படம் விருது பெற்றது.

பிலஹரி எழுதிய நெஞ்சே நீ வாழ்க நாடகம்தான் மூலம். இயக்குனர்கள் பீம்சிங்கின் சீடர்களான திருமலை-மகாலிங்கம். மேஜர் சுந்தரராஜன், நாகேஷ், வி.கே. ராமசாமி, மனோரமா, ஸ்ரீகாந்த், சோ ராமசாமி, ஏ. கருணாநிதி, டைப்பிஸ்ட் கோபு, பக்கோடா காதர் நடித்திருக்கிறார்கள். டி.கே. ராமமூர்த்தி இசை.

1967-க்கு நல்ல திரைப்படம்தான். வழக்கமான காதல் மோதல் பாசம் குடும்பம் என்ற கருக்களிலிருந்து விலகி இருப்பதாலேயே தனியாக நிற்கிறது. இன்று கொஞ்சம் வயதாகிவிட்டாலும் பார்க்கலாம்.

எளிய கதைதான். மேஜர் அப்பழுக்கற்ற நேர்மையாளர், அதனால் அலுவலகத்திலும் சரி, ஊரிலும் சரி நிறைய மரியாதை. மேஜருக்கு 5000 ரூபாய் லஞ்சம் தர வருபவரை மேஜர் விரட்டிவிடுகிறார். ஆனால் மேஜரின் மாப்பிள்ளைக்கு திடீரென்று பண நெருக்கடி. நாலு மணிக்குள் 5000 ரூபாய் புரட்டாவிட்டால் சிறை செல்ல வேண்டியதுதான். மேஜர் என்ன செய்யப் போகிறார்?

முதலில் தன் மீது எக்கச்சக்க மரியாதை வைத்திருக்கும் முதலாளி ஸ்ரீகாந்திடம் கடன் கேட்க முயற்சிக்கிறார். ஆனால் ஸ்ரீகாந்த் இவர் வாயைத் திறக்கும் முன் தற்செயலாக நாளை வருமான வரி கட்ட 10000 ரூபாயை எப்படியாவது புரட்ட வேண்டும் என்கிறார். லஞ்சம் வாங்கிக் கொள்ளலாம் என்று தீர்மானிக்கிறார். ஸ்ரீகாந்த் மேஜரின் நேர்மையை புகழ்ந்து பேசுவதை கேட்கிறார், மனம் மாறுகிறார். நண்பர் ஒருவர் மகள் கல்யாணத்துக்காக கடன் வாங்கிய 5000 ரூபாயை இவரிடம் கொடுத்து எனக்கு வங்கி கணக்கு இல்லை, இரண்டு மாதம் கழித்து வாங்கிக் கொள்கிறேன் என்று இவரிடம் கொடுத்து வைக்கிறார். ஒரு உத்தரவாதமும் இல்லாமல் பணத்தை கொடுத்திருக்கிறாயே முட்டாளே என்று இன்னொரு அலுவலக குமாஸ்தா பேச அலுவலக பியூன் நாகேஷ் யாரை சந்தேகப்படுகிறாய் என்று கத்துகிறார்.

யாராவது என்னை அயோக்கியன் என்று சொல்லிவிட மாட்டார்களா, என் மீது நம்பிக்கை வைக்காமல் இருக்கமாட்டார்களா, அப்படி இருந்தால் என் மனத்தடைகள் நீங்கி நண்பனை ஏமாற்றுவேன் இல்லாவிட்டால் லஞ்சம் வாங்குவேன் என்று மேஜர் தவிக்கிறார். ஆனால் கடைசியில் மன உறுதி பெறுகிறார்; லஞ்சம் வாங்கலாம் என்று நினைத்தற்காக வேலையை ராஜினாமா செய்கிறார். மாப்பிள்ளையின் நெருக்கடி அதிர்ஷ்டவசமாக நீங்கிவிட, மேஜர் நிம்மதியில் இறந்தே போகிறார்.

மேஜரின் சிக்கல் சிறப்பாக வடிக்கப்பட்டிருக்கிறது. மெலோட்ராமா குறைவு. மேஜர் பிறழ முயற்சிப்பதும், ஆனால் அவரால் முடியாமல் போவதும் நன்றாக வந்திருக்கிறது. ஓரளவு டென்ஷன் குறையாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

திரைப்படத்தின் பலவீனம் அதன் சபா நாடகத்தன்மை. நகைச்சுவை வலிந்து புகுத்தப்பட்டிருக்கிறது. அலுவலகத்தில் வேலையைப் பார்க்காமல் ஸ்ரீராமஜயம் எழுதும் வி.கே. ராமசாமி, பத்திரிகைகளுக்கு கதை எழுதும் ஒரு குமாஸ்தா, மனோரமாவை சைட்டடிக்கும் சோ, மனோரமா-நாகேஷ் காதல் என்பதெல்லாம் கதையின் டென்ஷனை குறைக்கிறது. உதாரணத்துக்கு ஒரு நகைச்சுவைக் காட்சியில் வி.கே. ராமசாமியின் துணிகளை அலுவலகத்துக்கு எடுத்து வரும் வண்ணான். வண்ணானாக வருபவர் நன்றாகவே நடித்திருக்கிறார்,  கழுதையை ஹூம் என்று விரட்டிக் கொண்டே இருப்பது இயல்பாக இருக்கிறது, ஆனால் காட்சி செயற்கையாக இருக்கிறது.

டைப்பிஸ்ட் கோபுவுக்கு இதுதான் முதல் திரைப்படம். (நாணல் என்றும் எங்கோ படித்திருக்கிறேன்.) அலுவலகத்தில் டைப்பிஸ்ட். நாடகத்திலும் அவருக்கு இதே பாத்திரம்தான். நாடகத்தில் அவருக்கு வசனமே கிடையாதாம். திரைப்படத்தில் ஒரே ஒரு வசனம் பேசுகிறார். அப்படி இருந்தும் நாடகத்தில் நினைவில் நிற்கும்படி நடித்ததால்தான் டைப்பிஸ்ட் கோபு என்று அழைக்கப்பட்டாரம்.

பாடல்கள் எதுவும் நினைவில் நிற்கவில்லை.

வித்தியாசமான கதை மற்றும் மேஜர், ஏ. கருணாநிதி நடிப்புக்காக நூற்றுக்கு 65 மதிப்பெண் தருகிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் திரைப்படங்கள்

In the Heat of the Night


கதை, நடிப்பு, இசை, நடனம், உள்ளடக்கம் (content) நன்றாக இருந்தால் திரைப்படத்தைப் பார் என்று பரிந்துரைப்பேன். திரைப்படத்தின் பின்புலம், social commentary-காக பாருங்கள் என்று பரிந்துரைப்பது அபூர்வம். In the Heat of the Night (1967) அப்படிப்பட்ட ஒரு தனித்துவமான திரைப்படம்.

படத்தின் கரு அப்படி. 1967-இன் மிஸிஸிபி மாநிலம். நிறவெறி மிஸிஸிபி மாநிலத்தில் இன்றும் அபூர்வமானது அல்ல. சிறு நகரம், ஒரு கொலை. அங்கே ஒரு கறுப்பின காவல்துறை அதிகாரி “மாட்டிக் கொள்கிறார்”. கறுப்பர்,  நகரில் யாரும் அறியாத வழிப்போக்கர்,  அவரது கையில் பணம் இருக்கிறது என்பதால் அவரையே கொலையாளி என்று சந்தேக்கிறார்கள். அவ்வளவுதான் கதை. அவருக்கு என்ன ஆகிறது, கொலையாளி பிடிபட்டானா, அவ்வளவு ஏன் கறுப்பின நடிகர் சிட்னி பாய்டியர், காவல் துறை தலைவராக நடிக்கும் இணை நாயகர் ராட் ஸ்டெய்கர் எப்படி நடித்திருக்கிறார்கள் என்பது எல்லாம் இரண்டாம் பட்சம்தான்.

பல விதங்களில் இந்தத் திரைப்படம் ஒரு புரட்சி.

ஒரு காட்சியில் சிட்னி பாய்டியரை ஒரு வெள்ளை இன பணக்காரர் கன்னத்தில் அறைவார். பாய்டியர் அவரை திருப்பி அறைவார். அந்த ஒரு காட்சி அரங்கங்களில் ஏற்படுத்திய தாக்கம்! ஸ்டெய்கரும் பாய்டியரும் அவ்வப்போது திரை அரங்குகளுக்கு போய் இந்தத் திரைப்படத்தைப் பார்ப்பார்களாம். இந்தக் காட்சிக்கு எத்தனை கைதட்டல், எத்தனை அதிர்ச்சியான ஓ கேட்கிறது என்பதை வைத்து எத்தனை கறுப்பர்கள் (கைதட்டல்), எத்தனை வெள்ளையர்கள் (ஓ!) அன்று திரைப்படத்தை பார்க்க வந்திருக்கிறார்கள் என்று சொல்லிவிட முடியுமாம்.

இந்தக் காட்சி மூலப் புத்தகத்தில் கிடையாதாம், பாய்டியர் தன் பாத்திரம் இப்படி திருப்பி அடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அதை புகுத்தினாராம். அவருக்கு ஒரு ஜே!

இந்தத் திரைப்படத்தின் புகழ் பெற்ற காட்சி ஸ்டெய்கர் பாய்டியரை முதன்முதலாக விசாரிக்கும் காட்சி. பாய்டியர் பாத்திரத்தின் பெயர் விர்ஜில் டிப்ஸ். அது என்ன விர்ஜில் என்று உனக்கு பேர் வைத்திருக்கிறார்கள் (விர்ஜில் புகழ் பெற்ற ரோமானிய கவிஞர்), உன்னை ஃபிலடெல்ஃபியாவில் எப்படி கூப்பிடுவார்கள் என்று கிண்டலாக ஸ்டெய்கர் கேட்பார்.

They call me Mr. Tibbs!

என்று பாய்டியர் முழங்குவார்! அமெரிக்க திரைப்படங்களின் டாப் 100 வசனங்களில் இதற்கு 16-ஆம் இடம்!

எனக்கு ஒளிப்பதிவைப் பற்றி பேசும் அளவுக்கு அறிவு கிடையாது. ஆனால் இந்தத் திரைப்படத்திற்கு முன் கறுப்பர்களின் நிறத்திற்கு அன்று பயன்படுத்தப்பட்ட விளக்குகள் சரிவராது என்ற பிரக்ஞையே இல்லையாம். ஒளிப்பதிவாளர் ஹாஸ்கெல் வெக்ஸ்லர் இதை உணர்ந்து பாய்டியரின் காட்சிகளில் விளக்குகளை மாற்றி அமைத்துக் கொண்டாராம்.

எளிதாக ஊகிக்கக் கூடிய கதையோட்டம்தான். நகரில் ஒரு தொழிற்சாலையை நிறுவ விரும்பும் கோல்பர்ட் கொலை செய்யப்பட்டிருக்கிறார். பஸ் நிலையத்தில் காத்திருக்கும் விர்ஜில் டிப்ஸ் (பாய்டியர்) கறுப்பர் என்பதற்காகவே சந்தேகத்திற்கு ஆளாகிறார். சிறிது நேரம் விசாரித்த பின் டிப்ஸ்  கொலையாளி அல்லர், உண்மையில் சிறந்த துப்பறிவாளர், ஃபிலடெல்ஃபியாவில் காவல் துறை அதிகாரி என்பதை காவல்துறை தலைவர் கில்லஸ்பி (ஸ்டெய்கர்) உணர்கிறார்.

அடுத்தபடி சந்தேகத்திற்கு ஆளாவது ஹார்வி. ஆனால் கொலையாளி வலது கைக்காரன், ஹார்வி இடது கைக்காரன் என்று டிப்ஸ் காட்டுகிறார். கில்லஸ்பி கொலையை துப்பு துலக்க டிப்ஸ் போன்ற ஒரு திறமைசாலி பேருதவியாக இருப்பார் என்பதையும் புரிந்து கொள்கிறார்.

கில்லஸ்பி நிறவெறி நிறைந்த தன் நகரத்தில் பாய்டியருக்கு எதிராக குரல்கள் எழும் என்பதையும் உணர்ந்திருக்கிறார். கில்லஸ்பியே நிற வெறிக்கான பாரபட்சம், முன்முடிவுகள் உள்ளவர்தான். ஆனால் இவர்கள் இருவருக்கும் சகாக்கள் (colleagues) என்ற பந்தம் உண்டாகிறது. இன்னும் சில பேர் மீது சந்தேகம் உண்டாகிறது, கடைசியில் குற்றவாளி பிடிபடுகிறான்.

இரண்டு காட்சிகளை குறிப்பிட்டு சொல்ல வேண்டும். இரவு வேளையில் கில்லஸ்பியும் டிப்ஸும் கொஞ்சம் மனம் விட்டு பேசும் காட்சி. கில்லஸ்பி இந்த நகரத்துக்கு வந்த முதல் மனிதனே நீதான் என்கிறார். பிறகு கடைசி காட்சி. ஃபிலடெல்ஃபியாவுக்கு செல்லும் டிப்ஸிடம் தன் மனத்தடைகளை மீறி கில்லஸ்பி நட்போடு “You take care, you hear?” என்று சொல்வதும் அதை டிப்ஸ் புன்னகையோடு ஏற்பதும் நல்ல காட்சி.

ஆனால் இன்று கதைப்பின்னல் கொஞ்சம் இழுவையாக இருக்கிறது. இத்தனை பேர் மேல் சந்தேகப்படுவதற்கு பதிலாக கில்லஸ்பி-டிப்ஸ் இன்னும் கொஞ்சம் பேசலாம் என்றுதான் தோன்றியது. பாய்டியர், ஸ்டெய்கர் இருவரும் கலக்குகிறார்கள். ஆனால் பாய்டியரின் மௌனக் கணங்கள் (pauses) சீக்கிரம் ஏதாவது பேசுங்க சார் என்ற உணர்வை ஏற்படுத்துகின்றன.

1967-இன் சிறந்த திரைப்படம், மற்றும் சிறந்த நடிகருக்கான விருது (ஸ்டெய்கருக்கு) பெற்ற திரைப்படம். இயக்குனர் நார்மன் ஜூயிசன். ஸ்டெய்கரின் நடிப்பு சிறப்பு என்றாலும் பாய்டியருக்கு nomination கூட இல்லையா என்று வியப்பாக இருக்கிறது.

திரைப்படம் ஜான் பால் என்பவர் எழுதிய புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது.

திரைப்படத்தைப் பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆங்கிலத் திரைப்படங்கள்

தொடர்புடைய சுட்டி: ஐஎம்டிபி குறிப்பு

மீண்டும்


புத்தாண்டு வாழ்த்துக்கள்!

கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு முன் (பழைய) திரைப்படங்களைப் பற்றி என் விமர்சனங்களை பதிவு செய்ய இந்த பதிவுத் தளத்தை ஆரம்பித்தேன். மூன்று நான்கு வருஷத்துக்குப் பிறகு செயலிழந்து போயிற்று.

எனக்கு பழைய திரைப்படங்கள் – அதாவது 70கள் வரை வெளி வந்த திரைப்படங்கள் – மீது நிறைய ஈர்ப்பு இருந்த காலம் அது. இன்றும் அந்தக் கால கட்டத்தில் வந்த திரைப்பாடல்களுக்கு என் மனதில் பெரிய இடம் உண்டு – ராஜாவுக்கும் ரஹ்மானுக்கும் பெரிய இடம் உண்டுதான், ஆனால் ஜி. ராமநாதனுக்கும் எம்எஸ்விக்கும் – குறிப்பாக விஸ்வநாதன்-ராமமூர்த்தி இணைக்கும் எஸ்.டி. பர்மனுக்கும் ஷங்கர்-ஜெய்கிஷனுக்கும் ஏறக்குறைய சமமான இடம் உண்டு. கேவிஎம்முக்கும் சுதர்சனத்துக்கும் ஓ.பி. நய்யாருக்கும் சி. ராமசந்திராவுக்கும் ஆர்.டி. பர்மனுக்கும் இவர்களுக்கு மிக அருகில் இடம் உண்டு.

அப்போது இந்தத் தளத்தை ஆரம்பிக்க கிரியா ஊக்கியாக இருந்தது சன் தொலைக்காட்சி பழைய படங்களை வரிசையாகத் திரையிட்டதுதான். பல நானே கேட்டிராத அடாசு திரைப்படங்கள். இருந்தாலும் பார்த்துக் கொண்டிருந்தேன், அதைப் பற்றி எழுதிக் கொண்டிருந்தேன்.

இன்று திரைப்படங்களைப் பார்க்கும் நேரத்தை விட நெட்ஃப்ளிக்சிலும் அமேசான் ப்ரைமிலும் திரைப்படங்களைத் தேடும் நேரம்தான் அதிகம். அதுவும் நாளின் இறுதியில் மூளையைக் கழற்றி வைத்துவிட்டு பார்க்கக் கூடிய மசாலா படங்களையே தேடுகிறேன், குறிப்பாக தெலுகுப் படங்களை. இருந்தாலும் பார்க்கத்தான் செய்கிறேன்.

இந்தப் புத்தாண்டில் பார்க்கும் திரைப்படங்களைப் பற்றி திரும்பவும் எழுத ஆரம்பிக்கலாம் என்று யோசனை. பழைய திரைப்படங்கள் என்று குறுக்கிக் கொள்ளாமல் எழுத எண்ணம். ஆனால் பழைய திரைப்படங்களும் விலக்கில்லை. பார்ப்போம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: அறிமுகம்

பாஹுபலி


பாஹுபலி திரைப்படத்தைப் பற்றி நண்பர் திருமலைராஜன்:

bahubaliசிறு வயதில் மாயா பஜார், மாய மோதிரம், விடாக்கண்டன் கொடாக்கண்டன், அலாவுதீனும் அற்புத விளக்கும் போன்ற தெலுங்கில் இருந்து தமிழுக்குக் கொண்டு வரப் பட்ட காந்தாராவ், ரெங்காராவ், விட்டலாச்சார்யா படங்கள் அளித்த பிரமிப்பை எந்தவொரு பிரம்மாண்டமான தமிழ் படமும் அளித்ததில்லை. அந்த வகையில் சிறுவர்களின் கற்பனைகளுக்கும் ஆர்வங்களுக்கும் தீனி போடும் வகையிலான மாயாஜால படங்களையும் ஃபேண்டஸி படங்களையும் ஆந்திரா சினிமாக்காரர்களே எடுத்து வந்தார்கள். மாயாபஜார் ஒரு முக்கியமான சினிமா. அம்புலிமாமா அளித்த வாசிப்பனுவங்களை அவை தூண்டிய கற்பனைக் காட்சிகளை ஈடுகட்டக்கூடிய சினிமாக்கள் தெலுங்கில் இருந்தே இறக்குமதியாயின.

இன்றைய நவீன ஐபேட், வீ, நின்டண்டோ, எக்ஸ் பாக்ஸ், சோனி சிறுவர்களின் ஃபேண்டஸி தேடல்களுக்கு பெரும்பாலும் ஆங்கிலப் படங்களே தீனி போடுகின்றன. டிஸ்னி சினிமாக்களும், பிக்சார் சினிமாக்களும், ஹாரி பாட்டர்களும், லார்ட் ஆஃப் த ரிங்க்ஸ்களும் சிறுவர்கள் விரும்பிப் பார்க்கும் சினிமாக்களாகின்றன. அவர்களது கற்பனைகளில் விரியும் காட்சிகளும் அந்த ஆங்கில நாவல்களே உருவாக்குகின்றன. அவர்களுக்கு ஒரு இந்தியக் காடோ, இந்திய இமய மலையோ கற்பனையில் கூட அறிமுகமாவதில்லை.

முன்பு கல்கி, கோகுலம் பத்திரிகைகளில் இந்திய ஓவியர்களினால் வரையப்பட்ட இந்திய காமிக்ஸ் கதைகள் வந்து கொண்டிருந்தன. 007 பாலு, மூன்று மந்திரவாதிகள் போன்றவை அற்புதமான இந்திய காமிக்ஸ் கதைகளாக வந்தன. அம்புலிமாமாவும், சந்தமாமாவும் இந்திய புராணங்களையும் கதைகளையும் அருமையான வண்ணப் படங்களில் கொணர்ந்து சிறுவர்களின் கற்பனையில் காட்சிகளை விரித்தன வளர்த்தன. காலப் போக்கில் ஹாரி பாட்டர்களும், லார்ட் ஆஃப் த ரிங்க்ஸ்களுமே அவர்களின் கற்பனை பிம்பங்களை உருவாக்க ஆரம்பித்தன

ஜெயமோகனின் பனிமனிதன் ஒரு அருமையான ஃபேண்டஸி நாவல். சாதாரண கற்பனைகளைத் தாண்டி பிருமாண்டமான காட்சி அனுபவங்களை அளிக்கும் ஒரு நாவல். அத்தகைய ஒரு நாவலை இந்தியச் சூழலில் காட்சி அனுபவமாக மாற்றும் கற்பனா சக்தியும், காட்சி ரூபமாக சினிமாவில் அளிக்கும் தொழில் நுட்பமும், சினிமா மொழியும், நிதி வளமும் உடைய இந்திய இயக்குனர் எவரும் இல்லையே என்று ஏங்கியதுண்டு. பனிமனிதனை சினிமாவாக உருவாக்க ஒரு ஹாலிவுட் அல்லது ஆங்கில திரைப்பட இயக்குனரால் மட்டுமே முடியும் என்று நினைத்திருந்தேன். அந்தக் குறையைப் போக்கியுள்ளார் பாஹுபலி ராஜமெளலி.

இனி மஹாபாரதமும், ராமாயணமும் பிற இந்திய புராணக் கதைகளும், இந்திய சாகசக் கதைகளும், இந்திய விஞ்ஞானக் கதைகளும் கோரும் பிரம்மாண்டமான காட்சிகளை தத்ரூபமாக இந்திய இயக்குனர்களினாலும் இந்திய டெக்னீஷியன்களினாலும் உருவாக்க முடியும் என்றும் அதற்கேற்ற தொழில்நுட்பமும் நிதியும் இந்தியாவில் இருந்தே உருவாக்கிக் கொள்ள முடியும் என்றும் அத்தகைய படங்களுக்கு உலக அளவில் ஒரு சந்தையையும் உருவாக்க முடியும் என்பதையும் ராஜமெளலி தனது பஹுபலி சினிமாவின் மூலமாக நிரூபித்துள்ளார். மோடியின் மேக் இன் இண்டியா திட்டத்திற்கான சினிமா சாத்தியத்தை உருவாக்கியுள்ளார். விட்லாச்சார்யாவின் நவீன வாரிசாக தன்னை முன்னிறுத்தியுள்ளார். ஹாரி பாட்டர், லார்ட் ஆஃப் த ரிங்க்ஸ் போன்ற சினிமாக்களை இந்தியக் கதைகளுடனும் இந்தியப் பின்ணணியில் உருவாக்க முடியும் என்ற சாத்தியட்தை நிறுவியுள்ளார். இந்த சினிமா இந்தியக் கலைஞர்களுக்கும் இந்திய சினிமாவுக்கும் அளவற்ற தன்னம்பிக்கையை உருவாக்கப் போகிறது. இந்த மேக் இன் இண்டியா சினிமா இந்திய சினிமாவின் கற்பனை எல்லைகளையும் அதன் அளவற்ற திறன்களையும் உலக சந்தைக்கு விரிவாக்கப் போகின்றது.

பாஹுபலியின் கதை வெகு சாதாரணமானது. தமிழில் உத்தமபுத்திரன், அரசகட்டளை, அடிமைப் பெண் என்று நூறு முறையாவது அடித்துத் துவைக்கப் பட்ட பழைய ராஜா கதைதான். சிறு சிறு சாகச சம்பவங்களின் தொகுப்பே. சினிமாக்களில் டூயட் காட்சிகள், சண்டைக் காட்சிகளிலும் மட்டுமே தேவையில்லாமல் பல கோடி ரூபாய்கள் செலவில் செய்யப் பட்ட கிராஃபிக்ஸ் மற்றும் ஆர்ட்ஸ் காட்சிகளை வைத்துக் கொண்டிருந்தனர். அது அந்த சினிமாவின் கதையுடன் ஒட்டாமலும் யதார்த்தமில்லாமலுமே பெரும்பாலும் அமைந்திருந்தன. அந்த அபத்தங்களையெல்லாம் போக்கி ஒரு பிரம்மாண்டமான காட்சிகளைக் கோரும் கதையை உருவாக்கிக் கொண்டு அதற்குத் தேவையான பிரம்மாண்ட காட்சிகளை மட்டுமே அமைத்துள்ளார்.

இந்த சினிமாவில் கதையோ, யதார்த்தமான நுண்ணுணர்வு காட்சிகளோ, நம்பகத்தன்மையோ கிடையாது. ஒரு அம்புலிமாமா கதைக்குத் தேவையான அனைத்து சூழல்களையும் தத்ரூபமாக உருவாக்கி பெரும் காட்சியாக அளித்துள்ளதே இந்த சினிமாவின் பெரும் வெற்றி.

ஒரு பெரும் போர்க்களக் காட்சியைத் தத்ரூபமாக அமைப்பதற்கோ பெரும் மாளிகைகளையும் நகரங்களையும் கற்பனையில் உருவாக்குவதற்கோ, விரிவான பிரமிக்க வைக்கும் இயற்கைக் காட்சிகளையும் கற்பனையில் நினைத்துப் பார்ப்பதற்கோ அபாரமான அசாத்தியமான கற்பனைத் திறன் வேண்டும். அப்படியே கற்பனையில் ஒரு பிரம்மாண்டமான அருவியையோ மலையையோ அரண்மனைகளையோ போர்க்களத்தையோ கண்டு விட்டாலும் அதை சினிமா திரையில் கொணர்வதற்கு அளவற்ற தொழில் நுட்பத் திறனும் பொருட் செலவும் வேண்டும். முதலில் அடிப்படையான அந்த கற்பனா சக்தியில்லாமல் எவ்வளவு பொருட் செலவு செய்திருந்தாலும் அது வீணாகவே போயிருந்திருக்கும்.

பிரம்மாண்டமான காட்சிகளை தன் கற்பனையில் உருவாக்கிக் கொண்டு அதை அப்படியே காட்சி ரூபமாகவும் அளித்துள்ளதே இந்தப் படத்தின் முக்கியமான வெற்றியாகும். நமது சாதாரண கற்பனைகளையெல்லாம் மீறி நம் சிந்தனை அளவுகளின் எல்லைகளையெல்லாம் மீறி காட்சிகளை அமைத்ததினாலேயே ஒரு வில்லோவும், ஒரு லார்ட் ஆஃப் த ரிங்க்ஸும் ஒரு ரெய்டர்ஸ் ஆஃப் த லாஸ்ட் ஆர்க்கும், ஸ்டார் வார்ஸ் சினிமாக்களும் பெரும் வெற்றிகளை அடைந்தன. அவை போன்ற சினிமாக்களுக்கு சற்றும் குறையாமல் பிருமாண்டமான காட்சி அனுபவங்களை ஒரு இந்திய சினிமாவில் முதன் முதலாக வழங்கியுள்ளார் ராஜமெளலி

பிரமிக்க வைக்கும் இயற்கை காட்சிகளுக்கும், போர்க்களக் காட்சிகளுக்கும் செய்த செலவைப் போலவே இசைக்கும் செலவு செய்திருந்தால் இன்னும் பெரிய அளவை இந்த சினிமா எட்டியிருந்திருக்கும். பின்ணணிப் பாடல்களுக்காவது இளையராஜாவை அமர்த்தியிருந்திருக்கலாம்.

வில்லோ சினிமாவையும், ஸ்டார் வார்ஸ் சினிமாக்களையும் காணும் பொழுதெல்லாம் என்றாவது இந்தியக் கதைகள் இந்த விதமான கற்பனைக்கெட்டாத காட்சிகளுடன் கூடிய சினிமாவாக என்றாவது எடுக்கப்படுமா என்று நினைத்ததுண்டு. அந்த ஆதங்கத்தை நிஜமாக்கியிருக்கிறார் ராஜமெளலி. மாயாபஜாரின் பாரம்பரியத்தில் ஒரு உலக அளவிலான சினிமாவை இன்று இன்னொரு தெலுங்கு இயக்குனரும் அவருடன் இணைந்துள்ள ஏராளமான இந்தியத் தொழில் நுட்பக் கலைஞர்களும் அளித்துள்ளார்கள். இந்திய சினிமாவீல் ஒரு மைல்கல்லை இந்த பாஹுபலி மூலமாக அடைந்துள்ளார்கள். குழுவினருக்கு பாராட்டுக்கள்.

பார்க்கவில்லையென்றால் அவசியம் தியேட்டரில் மட்டும் பாருங்கள். சிறுவர்களுக்கான படம்தான் ஆனால் பெரியவர்களும் கூட இப்படி ஒரு இந்திய சினிமாவை அதன் வேர்களில் இருந்து உருவாக்கப்பட்ட சினிமாவைக் கண்டிருக்க வாய்ப்பில்லை. அவசியம் பாருங்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ராஜன் பதிவுகள்

The Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு


நண்பர் ராஜனின் விமர்சனம்

jigirthandaஇப்பொழுதெல்லாம் ஹாலிவுட் ஆட்கள் தமிழ் படங்களில் இருந்து காப்பி அடிக்க ஆரம்பித்து விட்டார்கள் 🙂 ஜிகர்தண்டா என்ற தமிழ் சினிமாவின் தீமை காப்பி அடித்து The Interview என்றொரு சினிமாவை எடுத்திருக்கிறார்கள். இந்தப் படம் தியேட்டருக்கு வராமலேயே பயங்கர பாப்புலாரிட்டியையும் பார்வையாளர்களையும் அடைந்துவிட்டது. இதே போன்று பயங்கரமான வில்லன்களின் சினிமா/டிவி ஆசை பலவீனங்களைக் கொண்டு அவர்களைக் கோமாளி ஆக்கி தோற்கடிக்கும் சினிமாக்கள் இவற்றிற்கு முன்பும் ஏதும் வந்திருக்கலாம். ஜிகர்தண்டாவில் ஒரு பயங்கரமான மதுரை தாதாவுக்கு திடீரென்று சினிமாவில் நடிக்க ஆர்வம் வந்து விடுகிறது. அந்த பலவீனத்தை சினிமா இயக்குனர் ஒருவர் பயன் படுத்திக் கொண்டு அவனைக் கோமாளியாக்கி அவனை அசிங்கப்படுத்திவிடுகிறார். ஒரு பெரிய பலமான எதிரியை கிண்டல் செய்து அவனை அவமானப்படுத்துவதன் மூலமாக பலவீனப்படுத்தும் கதை.

interviewகிட்டத்தட்ட அதே கருத்தைக் கொண்டு ஒரு ஹாலிவுட் சினிமா எடுத்து அது உலகம் முழுவதும் பிரபலமாகியிருக்கிறது. இதில் லோக்கல் தாதாவுக்குப் பதிலாக ஒரு international தாதா, வட கொரிய நாட்டின் கம்னியுச சர்வாதிகார அதிபர். வட கொரிய அதிபருக்கு அமெரிக்காவில் இருந்து வரும் ஒரு அபத்தத் தொலைக்காட்சி இன்டர்வ்யூ ஷோவில் ஆர்வம் ஏற்பட்டு அதில் தானும் கலந்து கொண்டு ஒரு பேட்டி கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறார். அதை வைத்துக் கொண்டு வட கொரிய அதிபர் ஒரு கோமாளி என்பதை நிரூபித்து வடகொரியாவை அந்த சர்வாதிகாரியிடமிருந்து மீட்க மக்களிடம் அந்த இன்டர்வ்யூவை பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதிபர் கொல்லப்பட்டு அந்த பேட்டியினால் ஜனநாயகம் மலர்கிறது. ஜிகிர்தண்டாவில் தாதாவின் கோமாளித்தனம் வெளிப்பட்டு விட அவன் தாதா தொழிலை விட்டுவிட்டு சினிமாவில் நடிக்கப் போய்விடுகிறான். ஒரு காமெடி நடிகனகாகி விடுகிறான்.

இரண்டு சினிமாக்களின் கரு ஒன்றுதான். இதில் ஜிகிர்தண்டாவுக்குப் பிறகுதான் இந்த இன்டர்வியூ வந்துள்ளது. இருந்தாலும் தாங்கள் 2000த்தில் இருந்து இந்த பாடாவதி சினிமாவை எடுக்க முயற்சிப்பதாக இயக்குனர் சொல்லியிருக்கிறார். இன்டர்வ்யூ சினிமாவை வட கொரியா கடுமையாக எதிர்த்தபடியாலும் அதன் பின்னர் அதன் தயாரிப்பாளர்கள் தியேட்டரில் வெளியிடப் போவதில்லை என்று அடித்த ஸ்டண்டுகள் காரணமாகவும் சோனியின் கம்ப்யூட்டர்கள் hack செய்யப் பட்டதினாலும் இந்தப் படம் திடீர் புகழ் பெற்று தியேட்டர்களுக்கு வராமலேயே பல மில்லியன் டாலர்கள் சம்பாதித்துவிட்டது.

படு திராபையான படு மொக்கையான கொஞ்சம் கூட புத்திசாலித்தனம் இல்லாமல் எடுக்கப்பட்ட ஒரு சாதாரண சினிமா இன்று பெரும் புகழ் பெற்றுவிட்டது. சமீபத்தில் நெட்ஃப்ளிக்ஸிலும் வெளியிட்டிருக்கிறார்கள். விடலைப்பையன்கள் எடுத்த அபத்த சினிமா போல உள்ளது. வட கொரிய அதிபரை இதை விட புத்திசாலித்தனமாக கிண்டல் அடித்திருக்கலாம். அந்தக் காலத்தில் கருணாநிதிகளையும் எம்ஜிஆர்களையும் இந்திராக்களையும் சோ தன் சினிமாக்கள் மூலமாக கிண்டல் அடித்தே அவர்களைக் கோமாளிகளாக்கியுள்ளார். அது போன்ற எந்தவிதமான குறைந்தபட்ச அங்கதம் கூட இல்லாமல் எடுக்கப்பட்டுள்ள மோசமான வெர்ஷன் இந்த இன்டர்வியூ.

அமெரிக்கர்கள் தங்கள் சினிமாக்கள் மூலமாகவும் நாவல்கள் பத்திரிகைகள் டிவிக்கள் மூலமாகவும் தங்களுக்குப் பிடிக்காத தேசத்தின் தலைவர்களை கோமாளிகளாகக் காட்டுவதும் தங்கள் குறி வைத்த நாட்டின் பண்பாடுகளை ஆபாசமாகச் சித்தரிப்பதும் அமெரிக்கா பல காலங்களாக செய்து வரும் ஒரு கலாசார போர்தான். இந்த விஷயத்தில் வட கொரிய அப்பா கிம் மகன் கிம்கள் நிஜமான காமெடி வில்லன்களும் கூட. இதை இன்னும் புத்திசாலித்தனமாக சாதுர்யமாக ரசிக்கும்படியான காமெடிகளுடன் எடுத்திருந்திருக்கலாம். அந்த வகையில் ஜிகிர்தண்டாவை அபாரமாக எடுத்திருப்பார் கார்த்திக். அதே வகையான ஹாலிவுட் படத்தை விட பல மடங்கு புத்திசாலித்தனமான அபத்த சினிமா ஜிகிர்தண்டா.

தி இன்டர்வ்யூவைப் பார்த்து நேர விரயம் செய்வதற்குப் பதிலாக ஜிகிர்தண்டாவை இன்னொரு முறை பார்த்துவிடலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ராஜன் பதிவுகள், ஆங்கிலத் திரைப்படங்கள், தமிழ்த் திரைப்படங்கள்