நல்லதந்தியின் ஜெய்ஷங்கர் புராணம்


நல்லதந்தியின் பல மறுமொழிகளை இங்கே படித்திருக்கலாம். அவர் எழுதமாட்டாரா என்று நான் எப்போதும் ஆவலுடன் இருப்பேன். அவர் ஜெய்ஷங்கர் பற்றி எழுதிய ஒரு மறுமொழி மிக சுவாரசியமாக இருக்கிறது, அதையே இங்கே பதிவாக போட்டிருக்கிறேன்.

நல்லதந்தி சேலத்துக்காரர். நானும் பக்சும் சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் படித்தவர்கள். எங்களுக்கு பொழுதுபோக்கு சினிமாதான். டவுனுக்கு போனால் (பழைய) பஸ் ஸ்டாண்டிலிருந்து சங்கீத் தியேட்டர் வரை உள்ள ஒரு மைல் ஏரியாவில் எழுபது என்பது தியேட்டர் இருக்கும். படம் பார்த்துவிட்டு பெங்களூர் பஸ் கண்டக்டர்களிடம் சண்டை போட்டு, அது பலிக்காவிட்டால் கெஞ்சி காலேஜில் இறங்குவோம். அவர் அப்சரா, உமா, பழனியப்பா, ஓரியண்டல் என்று தியேட்டர் பேரை அள்ளிவிடும்போது நாஸ்டால்ஜியா தாக்குகிறது!

நான் சின்ன வயதில் ரஜினி வருவதற்கு முன்பு ஜெய்யோட விசிறி. எனக்கு இன்னும் சேலத்தில ஓரியண்டல் தியேட்டரில் பொன்வண்டு பார்த்ததும், அத்தையா மாமியா? பார்த்ததும், ஜெயா தியேட்டரில் அக்கரை பச்சை, அப்சராவில் கல்யாணமாம் கல்யாணம் பார்த்ததும் பசுமையா நினைவிருக்கு!.

ஒருமுறை சங்கம் தியேட்டரில் ஜம்பு ரிலீஸ் ஆன முதல் நாள் படம் பார்க்கப் போனபோது (காலைக் காட்சி) (பெண்கள் பக்கம் தரை டிக்கட்) கவுண்டரில் இருந்த ஆள் எங்களுக்கு டிக்கெட் கொடுக்க மறுத்து விட்டார். எங்கள் கும்பலுக்கு (நான், என் சித்தி பையன், எனது தாய் மாமன் பையன்கள் 2) அது A படம் அதனால் கொடுக்கவில்லை என்ற விபரம் தெரியவில்லை. A படம் என்றாலே என்ன என்கிற விபரம் எங்களுக்குத் தெரியாது. அந்த டிக்கெட் கவுண்டர் நீண்ட திறந்த நடையாலானது என்பதால் நாங்கள் வெளியே சென்று அவருக்குத் கண்ணுக்குத் தெரியும்படியாகக் காத்திருந்தோம். கொஞ்ச நேரத்திற்குப் பிறகு பெண்கள் யாரும் வராததால் அவர் மனமிரங்கியோ, எதற்கு வந்த டிக்கெட்டை இழக்க வேண்டும் என்று நினைத்தோ எங்களைக் கூப்பிட்டு டிக்கெட் கொடுத்து உள்ளே அனுப்பினார். ஆண்கள் பக்கம் உள்ளே போகாததற்குக் காரணம் நாங்கள் எங்கள் அம்மாக்களுடன் பிற சினிமாக்களுக்குப் போகும் போது அந்தப் பக்கமே போனோம் என்பதைத் தவிர ஆண்கள் பக்கம் சரியான கூட்டம். உள்ளே போய் படம் பார்க்கும் போதுதான் A படம் என்றால் என்ன என்று தெரிந்தது! .

ஜெய்சங்கருக்கு சேலம் என்றால் ரொம்பப் பிரியம் அங்கே அவருக்கு நிறைய நண்பர்கள் கூட்டம் உண்டு. அவர் 70களில் சிறு தயாரிப்பாளர்களின் படத்தில் நடித்து வெள்ளிக் கிழமை ஹீரோ என்று புகழ் பெற்ற காலத்தில் அவரது பெரும்பான்மையான படங்கள் சேலத்தில் மாடர்ன் தியேட்டர் ஸ்டூடியோவிலேயே தயாரிக்கப்பட்டன.

ஒருமுறை குமுதம் வார இதழ் மாறு வேடத்தில் நடிகர்கள் இருக்க இரசிகர்கள் அவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். கண்டு பிடிப்பவர்களுக்கு பரிசு என்று ஒரு போட்டியை நடத்தியது. வாரவாரம் வெவ்வேறு ஊர்களில் பல நடிகர்கள் மாறு வேடமிட்டு தெருக்களில் அலையும் போது பொதுமக்கள் கண்டு பிடிக்க வேண்டும். ஜெய் வழக்கம் போல சேலத்தையே தேர்வு செய்தார். அதில் அவர் போட்டிருந்தது பிச்சைக்காரன் வேசம்!.

வண்டிக்காரன் மகன் பெருத்த வெற்றியைப் பெற்றவுடன், பிறகு தொடர்ச்சியாக கலைஞர் கைவண்ணத்தில் ஆடு பாம்பே, மாயாண்டி, காலம் வெல்லும் போன்ற படங்களில் தொடர்ச்சியாக நடித்த போது அவருக்கு தி.மு.க. முத்திரை குத்தப்பட்டது. கருணாநிதி ராசி அவரையும் தாக்கியது. அந்தக் குறிப்பிட்ட படங்கள் எதுவும் வெற்றியைப் பெறவில்லை. அந்த நேரத்தில் அவர் நடித்து வெளி வந்த (மேள தாளங்கள் சுமாரான வெற்றி சாந்தியில் வெளிவந்தது) அத்தனைப் படங்களும் காலி. எனவே பிற்காலத்தில் கலைஞர் கதை வசனம் எழுதி அழித்த நடிகர்களின் சகாப்தத்தை தொடங்கி வைத்த முதல் நடிகர் என்ற பெருமை மக்கள் கலைஞரை சென்றடைந்தது.(இதுவும் அந்த நேரத்தில் வழங்கப்பட்ட பட்டம்தான்).

ஒரு வருடம் சும்மா இருந்த அவரைக் கண்டு வருந்திய திரையுலகம் (ஜெய் திரைக்கு வந்த நாள் முதல் அவரை விரும்பாதவர்களே திரைஉலகில் இல்லை, என்கின்ற அளவிற்கு அவ்வளவு நல்ல பெயர் எடுத்திருந்தார். பத்திரிக்கைகள் கூட அவருக்கு படம் இல்லாமல் இருந்த காலத்தில் கூட ஆதரவு தந்தன. சினிமா நடிகர்களை புகழ்ந்து எழுதாத கல்கண்டு கூட அவரைப் பாராட்டியே எழுதியது) முரட்டுக் காளையில் வில்லனாக திரும்பவும் கொண்டு வந்து அவர் திரை வாழ்க்கையைப் பரபரப்பாக்கியது. அவரது இரசிகர்களுக்கு அவர் வில்லனாக நடிப்பது பிடிக்கவில்லை. பத்திரிக்கைகளுக்குக் கூட அவர் ஹீரோவாக நடிக்காமல் வில்லனாக நடிப்பது பிடிக்காவிட்டாலும், ஜெய்சங்கருக்கு வில்லன் வேடம் பொருந்தவில்லை இருந்தாலும் அவரது நடிப்புத் திறமையால் அதைச் சாமர்த்தியமாக சரி செய்து ஜெயித்துவிட்டார் என்று எழுதின.

நான் முரட்டுக்காளை வெளிவந்த நேரம் தீவீர ரஜினி ரசிகனாக மாறிவிட்டிருந்தேன்.விடியற்காலை ஐந்து மணிக்கு ஓரியண்டல் தியேட்டரில் எங்கள் கும்பல் படம் பார்க்க நின்றது, ரஜினிக்காக மட்டுமல்ல ஜெய்க்காகவும்தான்.

(இந்தப் படம் வரும்போது எனக்கு பதிமூன்று வயது இருக்கும். எவ்வளவு சுதந்திரமாக நான் இருக்க வீட்டில் விட்டிருக்கிறார்கள்.அப்போது ஊரும் கொஞ்சம் நன்றாக இருந்தது. இப்போது இந்த மாதிரி பையன்கள் இருக்க முடியுமா?)

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

தொடர்புடைய பதிவுகள்: நல்லதந்தியின் தளம்

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

6 Responses to நல்லதந்தியின் ஜெய்ஷங்கர் புராணம்

  1. காலையில் இன்ப அதிர்சி!. எதிர்பார்க்கவே இல்லை !. மிக்க நன்றி RV! 🙂

  2. RV says:

    நல்லதந்தி,

    உங்களுடன் இணையம் மூலம் பேசுவது எனக்கு ஒரு feel-good சம்பவம். இதில் நீங்கள் எதற்கு நன்றி எல்லாம் சொல்லிக் கொண்டு…

  3. gkrishna says:

    திரு ஜெய்ஷங்கர் அவர்களை பற்றி திரு ரஜினிகாந்த் அவர்கள் நடிகர் சங்கத்தில் ஜெய்ஷங்கர் பட திறப்பு விழாவில் வெளியிட்ட செய்தி இவ்வளுவு சீக்கிரம் ஜெய் மறைவுக்கு காரணம் நாம் எல்லோருமே அவருக்கு 90 கால கட்டங்களில் நாம் எந்த திரை படத்திலும் உபயோகபடுத்தவில்லை அப்படி உபயோகபடுத்தி இருந்தால் நிச்சயமாக இவ்வளுவு சீக்கிரம் நம்மை விட்டு பிரிந்து இருக்க மாட்டார்

பின்னூட்டமொன்றை இடுக