மேஜர் சந்திரகாந்த் II (Major Chandrakanth)


இந்த போஸ்ட் கிடைத்துவிட்டது. அன்னை கிடைக்கவில்லை, மீண்டும் எழுத வேண்டியதுதான் போலிருக்கிறது. நாளைக்குத்தான்.

1966இல் வந்த படம். பாலச்சந்தரின் புகழ் பெற்ற மேடை நாடகம். ஏவிஎம் தயாரிப்பில் அவரே இயக்கியது. மேஜர், முத்துராமன், ஜெயலலிதா, நாகேஷ், ஏவிஎம் ராஜன் நடித்தது. வி.குமார் இசை. வெற்றி அடைந்திருக்கும் என்று நினைக்கிறேன், நிச்சயமாக தெரியாது.

ஹிந்தியிலும் “ஊஞ்சே லோக்” என்று எடுத்திருக்கிறார்கள். மேஜருக்கு பதில் அசோக் குமார், முத்துராமனுக்கு பதில் ராஜ் குமார், ஏவிஎம் ராஜனுக்கு பதில் ஃபெரோஸ் கான், ஜெவுக்கு பதில் கே.ஆர். விஜயா.

நான் பார்த்து ஒரு இருபது இருபத்தைந்து வருஷம் இருக்கும். அப்போது தமிழில் வந்த மிக நல்ல படங்களில் ஒன்று என்று நினைத்தேன். நேற்று பார்த்திருந்தால் என் கருத்து ஒரு வேளை மாறி இருக்கலாம். நான் இங்கே எழுதுவது அன்றைய கருத்தை வைத்து.

இது பாலச்சந்தர் ஏஜிஸ் அலுவலகத்தில் வேலை செய்யும்போது எழுதப்பட நாடகமாம். முதலில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டதாம். யாரோ தமிழ் தெரியாத மேலதிகாரி சென்னைக்கு மாற்றலாகி வந்தபோது அவரை வரவேற்க எழுதப்பட்டிருக்கிறது. பிறகு நாடகம் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு மேஜர் நடித்திருக்கிறார். ஏவிஎம் செட்டியார் நாடகத்தை பார்த்து இம்ப்ரஸ் ஆகி படமாக்க முன் வந்திருக்கிறார்.

வி. குமார் பிரமாதமான பாட்டுகளை போட்டிருக்கிறார். “நேற்று நீ சின்ன பாப்பா” என்ற பாட்டில் துள்ளல், “ஒரு நாள் யாரோ” என்ற பாட்டில் இனிமை, “கல்யாண சாப்பாடு போடவா” என்ற பாட்டில் குத்து, “துணிந்து நில்” என்ற பாட்டில் கம்பீரம். “நானே பனி நிலவு” என்பதும் நல்ல பாட்டுதான். இவரை தமிழ் திரை உலகம் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. டிஎம்எஸ், சீர்காழி எல்லாரும் நன்றாக பாடி இருந்தாலும், சுசீலா எல்லாரையும் மிஞ்சிவிட்டார். “துணிந்து நில்” பாட்டு சுரதா எழுதியது. மற்ற எல்லாம் வாலி. “ஜிங்கிடுச்சான் ஜிங்கிடுச்சான் ஜிங்கிடிச்சிச்சான் சிச்சான் சான்” போன்ற காவிய நயம் மிக்க வரிகளை அந்த காலத்தில் எழுதக் கூடியவர்கள் தஞ்சை ராமையா தாசும் வாலியும்தான்.

“நேற்று நீ”, “ஒரு நாள் யாரோ”, “கல்யாண சாப்பாடு” பாட்டுக்களை இங்கே கேட்கலாம்.

மேஜரின் மாஸ்டர்பீஸ் இதுதான். குருட்டுத்தனத்தை வெல்லும் தன்னம்பிக்கை, மன உறுதி, ஒழுக்கத்தின் மீதுள்ள அழுத்தமான நம்பிக்கை எல்லாவற்றையும் மிக சிறப்பாக வெளிப்படுத்தி இருப்பார். இதை விட சிறப்பாக அவர் நடித்ததில்லை. எவ்வளவோ திறமைசாலியான அவர் எப்போதும் ஒரு டம்மி அப்பா ரோலில் வந்து போனது கொடுமை. ஒரு விதத்தில் பார்த்தால் இந்த படத்தில் நடித்தது அவரது துரதிர்ஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும் – இதற்கு பிறகு முக்கால்வாசி படங்களில் அவர் நடித்தது திருப்பி திருப்பி இதே ரோல்தான்!

முத்துராமன் மிக அருமையாக நடித்திருப்பார். நாகேஷ் முதல் பகுதியில் சிரிக்க வைப்பார். அவர் அழ வைக்கும் இரண்டாவது பகுதி கொஞ்சம் மெலோட்ராமாவாக இருந்தாலும் மோசம் என்று சொல்ல முடியாது.

மேஜரின் நண்பராக வருபவர் யார்? யாருக்காவது தெரியுமா?

நல்ல plot. குருடரான ரிடையர்ட் மேஜர் மே. சுந்தரராஜன் தன் பலவீனத்தை உறுதியுடன் சமாளித்து வாழ்கிறார். அவரது முதல் பையன் முத்துராமன் கடமை தவறாத போலிஸ் அதிகாரி. இளைய மகன் ஏவிஎம் ராஜனோ ஒரு ப்ளேபாய். ஜெயை மயக்கி கைவிட்டுவிடுகிறார். ஜெ தற்கொலை செய்து கொள்ள, அவரது அண்ணன் நாகேஷ் ராஜனை தேடி கண்டுபிடிக்கிறார். ராஜனிடம் ஆறுதலாக இரண்டு வார்த்தைகள் எதிர்பார்க்கும் அவரிடம் பயப்படும் ராஜன் பணம் தருகிறேன் என்னை விட்டுவிடு என்கிறார். வெறியில் நாகேஷ் ராஜனை கொன்றுவிட்டு தப்பி ஓடி, மேஜரின் வீட்டுக்குள் ஒளிகிறார். குருடராய் இருந்தாலும் மேஜர் நாகேஷ் ஒளிந்திருப்பதை கண்டுபிடித்து விடுகிறார். நாகேஷ் மேஜருக்கு கண் தெரியாது என்று தெரிந்து அதிசயப்படுகிறார். அவரிடம் தான் கொலை செய்ததை சொல்கிறார். மேஜருக்கு அது தவறாக தெரியவில்லை. ஆனால் நாகேஷ் தன் வீட்டில் ஒளிந்துகொள்ளக்கூடது என்று சொல்கிறார். நாகேஷ் மேஜரின் போலித்தனத்தை சாடுகிறார். பிறகுதான் அவருக்கு மேஜரின் மகன் போலீஸ்காரர் என்று தெரிகிறது. தான் கொலை செய்தது மேஜரின் இன்னொரு மகன் என்றும் தெரிகிறது. மேஜர் உடைந்துபோனாலும், நாகேஷ் செய்தது சரிதான் என்று சொல்கிறார். நாகேஷுக்கு இடம் கொடுக்கிறார். முத்துராமன் நாகேஷை கண்டுபிடித்து அவரையும் அவருக்கு இடம் கொடுத்த மேஜரையும் கைது செய்கிறார்.

“ஊஞ்சே லோக்” என்றால் “உயர்ந்த மனிதர்கள்” என்று அர்த்தம். மேஜர், நாகேஷ், முத்துராமன் ஆகியவர்களின் கதாபாத்திரங்கள் உண்மையிலேயே உயர்ந்தவர்கள்தான்.

சில காட்சிகள் பிரமாதமாக செதுக்கப்பட்டிருக்கின்றன. மேஜர் தான் குருடனாக இருப்பதால் தனக்கு ஒரு ப்ராப்ளமும் இல்லை என்று நாகேஷுக்கு சொல்வார். வீட்டில் ஒவ்வொரு பொருளும் எங்கே இருக்கிறது என்று தனக்கு ஒரு கணக்கு இருக்கிறது என்று காண்பிப்பார். அடுத்த வினாடி கீழே விழுந்துவிடும்போது என்ன கணக்கு இருந்தாலும் கண் தெரியாத குறை எவ்வளவு பெரியது என்று தெரிகிறது.

“ஒரு நாள் யாரோ” படமாக்கப்பட்ட விதம் – ரேடியோவில் தங்கை ஜெ பாடுவதை தன் அக்கம்பக்கத்தார் கேட்க நாகேஷ் வாங்கும் ஓட்டை ரதியோ சரியாக எல்லாரும் வந்ததும் உடைந்துவிட, ஜெயை லைவ் ஆக பாட வைத்து, சமையல் பாத்திரங்களைக் கொண்டு நாகேஷ் இசை அமைப்பது அமர்க்களம்! காட்சியை அமைத்தவருக்கு ஒரு சபாஷ்! இதை youtubeஇல் தேடிப் பார்த்தேன், கிடைக்கவில்லை. வீடியோ இருந்தால் ரசிக்கலாம், யாராவது நல்ல மனம் upload செய்யுங்களேன்!

மீண்டும் பார்த்திருந்தால் ஒரு வேலை கொஞ்சம் நாடகத்தனம் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் வேறு குறைகள் எதுவும் எனக்கு தெரிந்திருக்காது என்று தோன்றுகிறது.

பார்க்க வேண்டிய படம். 10க்கு 7.5 மார்க். B+ grade.

யுனெஸ்கோ லிஸ்ட்


யுனெஸ்கோ ஒவ்வொரு நாட்டிலிருந்தும் படங்களை அந்த நாட்டின் சினிமா மைல் கல்களாக தேர்ந்தெடுத்துள்ளது. அமெரிக்க லிஸ்டிலிருந்து 1980 வரைக்கும் வந்த படங்களையாவது பண்ணி இருப்பார்கள் போல தெரிகிறது.

இந்திய லிஸ்ட்.

  1. 1919, காளிய மர்தன். தாதா சாகேப் ஃபால்கே இயக்கம். ஊமைப் படம். கிருஷ்ணன் காளிங்கன் என்னும் பாம்பை அடக்கிய கதையாக இருக்கும்.
  2. 1925, பிரேம் சாயஸ். ஹிமான்ஷு ராய் இயக்கி நடித்தது. ஊமைப் படம். புத்தரைப் பற்றியது.
  3. 1935, தேவதாஸ். கே.எல். சைகல் நடித்து பி.சி. பரூவா இயக்கியது. ஹிந்தி. சைகலை ஒரு சூப்பர்ஸ்டார் ஆக்கிய படம்
  4. 1936, அச்சுத் கன்யா. அசோக் குமாரின் முதல் படம். தேவிகா ராணி நடித்தது. ஹிந்தி. பிராமண அசோக் குமார் தலித் பெண்ணான தேவிகா ராணியை காதலிப்பார்.
  5. 1936, சந்த் துகாராம். வினாயக் டாம்லே இயக்கியது. மராத்திப் படம் என்று ஞாபகம்.
  6. 1939, புகார். சோரப் மோடி இயக்கி நடித்தது. சந்திரமோகன் உடன் நடித்தது. ஹிந்தி. ஜஹாங்கீரின் காலத்தில் நடக்கும் கதை.
  7. 1939, தியாக பூமி: கல்கியின் கதை, கே. சுப்ரமண்யம் இயக்கி, பாபநாசம் சிவன், எஸ்.டி. சுப்புலக்ஷ்மி, பேபி சரோஜா நடித்தது. தமிழ்.
  8. 1948, கல்பனா: உதய் ஷங்கர் நடித்து இயக்கியது. ஹிந்தியா, வங்காளமா என்று தெரியவில்லை. நடனக் கலைஞனின் கதை.
  9. 1948, சந்திரலேகா: டி.ஆர். ராஜகுமாரி, எம்.கே. ராதா, ரஞ்சன் நடிப்பு, எஸ். வாசன் தயாரிப்பு, இயக்கம். தமிழ்.
  10. 1951, ஆவாரா: நர்கிஸ், பிருத்விராஜ் கபூர் நடிப்பு. ராஜ் கபூர் நடித்து இயக்கியது. ஹிந்தி. இந்தியாவுக்கு வெளியே புகழ் பெற்ற படம் இதுதான்.
  11. பதேர் பாஞ்சாலி: சத்யஜித் ரேயின் முதல் படம். வங்காளம். உலக அளவில் தலை சிறந்த படங்களில் ஒன்று எனக் கருதப்படுவது.
  12. ப்யாசா: குரு தத் இயக்கி நடித்தது. வஹிதா ரஹ்மான் உடன் நடித்தது. ஒரு கவிஞனின் போராட்டங்கள்.
  13. மதர் இந்தியா: நர்கிஸ், சுனில் தத், ராஜ் குமார், ராஜேந்திர குமார் நடித்து, மெஹ்பூப் கான் இயக்கியது.
  14. மொகலே ஆஜம்: திலிப் குமார், மதுபாலா, பிருத்விராஜ் கபூர் நடித்து, மெஹ்பூப் கான் இயக்கியது. அனார்கலி கதை.
  15. சுபர்ணரேகா: ரித்விக் கடக் இயக்கியது. வங்காளம்.

யுனெஸ்கோவின் முழு லிஸ்ட் இங்கே.

நான் இவற்றில் சந்திரலேகா, ஆவாரா, ப்யாசா, மதர் இந்தியா, மொகலே ஆஜம் ஆகிய படாங்களை பார்த்திருக்கிறேன். ஆவாரா தவிர மற்ற படங்கள் பார்க்க வேண்டியவைத்தான். ஆவாரா கேட்க மட்டும்தான். ஆனால் தியாக பூமி? இது கப்பலோட்டிய தமிழனை விட சிறந்த படமா? வீரபாண்டிய கட்டபொம்மனை விட, நாடோடி மன்னனை விட பெரிய மைல் கல்லா? மிஸ்ஸியம்மா, மாயா பஜார் போன்ற ஒரு தெலுங்கு படம் கூட இல்லையா? யார் இந்த லிஸ்டை தேர்ந்தெடுத்தது?

எனக்கு இன்னும் ஒரு poll set செய்ய தெரியவில்லை. தெரிந்தால் உங்கள் சாய்ஸ் என்ன என்று கேட்கலாம். என்னுடைய ரசனையில், ரொம்ப யோசிக்காமல் உடனே தோன்றும் படங்கள்:

சிறந்த 5 படங்கள்:

  1. கப்பலோட்டிய தமிழன்
  2. தண்ணீர் தண்ணீர்
  3. நாயகன்
  4. தளபதி
  5. தேவர் மகன்

6 மைல் கல்கள்:

  1. சந்திரலேகா
  2. நாடோடி மன்னன்
  3. வீரபாண்டிய கட்டபொம்மன்
  4. பதினாறு வயதினிலே
  5. நாயகன்
  6. ஜென்டில்மன்

5 பொழுதுபோக்கு படங்கள்:

  1. சந்திரலேகா
  2. ஆயிரத்தில் ஒருவன்
  3. தில்லுமுல்லு
  4. மைக்கேல் மதன காம ராஜன்
  5. பஞ்ச தந்திரம்

நான் முன்னமே சொன்ன மாதிரி இது ரொம்ப யோசிக்காமல் உடனே தோன்றும் படங்கள். நாளை நான் மாற்றலாம். உங்கள் சாய்ஸ் என்ன? படிப்பவர்கள் எல்லாம் எழுதினால் உங்கள் கருத்துகளை நான் கூட்டி கழித்து வேறு ஒரு போஸ்டில் பதிக்கிறேன்.

புன்னகை (Punnagai)


நான் இந்த ரெவ்யூக்களை தாமதமாகத்தான் எழுத ஆரம்பித்தேன். நான் எழுத ஆரம்பித்ததற்கு முன்னால் பார்த்த படங்கள் சிலவற்றுக்கும் விமரிசனம் எழுதலாமா வேன்டாமா என்று கொஞ்சம் குழப்பமாகத்தான் இருக்கிறது. கடைசியில் படிப்பவர்கள் தலைவிதியை யாரால் மாற்றமுடியும் என்று மனதை தேற்றிக்கொண்டு எழுத ஆரம்பித்துவிட்டேன்!

ஞாபகத்திலிருந்து எழுதப்படும் இந்த கருத்துக்களுக்கு மிகவும் டிடைலான விவரங்களை என்னால் கொடுக்கமுடியாது. (இப்போது மட்டும் கொடுக்க முடிகிறதா என்ன? பல சமயம் டைட்டில்களை மிஸ் செய்துவிடுகிறேன்). எல்லா பாட்டுக்களும் ஞாபகம் இருக்கப் போவதில்லை. படிப்பவர்கள் தங்களுக்கு நினைவிருக்கும் விவரங்களை எழுதி உதவினால் உதவியாக இருக்கும்.

“புன்னகை” படத்திலிருந்து தொடங்குகிறேன். இங்கே தொடங்க காரணம் பாலசந்தர் இதைப் பற்றி ஒரு பேட்டியில் சொன்னது – Q) Of all the films you made what is your favorite film?
A) This is the most common question put to me. This was and is a very difficult question to answer. But I personally feel that “Punnagai”, a Tamil film with Gemini Ganeshan and Nagesh in it, is one of the best films I ever made. In that film, I was really able to voice out my opinion and I was able to say something through that film. Sadly, that film did not farewell at the box office and I was not surprised…

பாலசந்தர் தமிழின் தலை சிறந்த இயக்குனர்களில் ஒருவர். ஆனால் எனக்கு தமிழின் தரத்தை பற்றி அவ்வளவு உயர்ந்த எண்ணம் இல்லை. ஒரு அகிரா குரொசவா, சத்யஜித் ரே, ஷ்யாம் பெனகல் தரத்தில் உள்ள இயக்குனர்கள் தமிழில் இல்லை. ஆனால் பாலசந்தர் தமிழின் தலை சிறந்த இயக்குனர்களில் ஒருவர் என்பதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். அவரை விட மணிரத்னம் ஒருவர்தான் தமிழில் நல்ல இயக்குனர் என்பது என் கருத்து. அவர் உயர்வாக கருதும் படத்திலிருந்தே ஆரம்பிப்போமே! (எனக்கு மிகவும் பிடித்த பாலசந்தர் படங்கள் வேறு இரண்டு – தில்லுமுல்லு, தண்ணீர் தண்ணீர்.)

1971இல் வெளி வந்தது. பாலசந்தரின் ஃபேவரிட் நடிகர்களான ஜெமினி, நாகேஷ், முத்துராமன், வி. கோபாலகிருஷ்ணன், ஜெயந்தி மற்றும் எஸ்.வி. சகஸ்ரநாமம், எம்.ஆர்.ஆர். வாசு, வி.எஸ். ராகவன், எஸ்.வி. ராம்தாஸ், சசிகுமார் நடித்திருக்கிறார்கள். பலருக்கும் ஒரு மேடை நாடக பாரம்பரியம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இது ரிஷிகேஷ் முகர்ஜி எடுத்த “சத்யகாம்” என்ற படத்தின் தழுவல். Hindiயில் ஜெமினிக்கு பதிலாக தர்மேந்திரா, முத்துராமனுக்கு பதிலாக சஞ்சீவ் குமார், ஜெயந்திக்கு பதிலாக ஷர்மிலா தாகூர், எஸ்.வி. சகஸ்ரநாமத்துக்கு பதிலாக அஷோக் குமார், வி.எஸ். ராகவனுக்கு பதிலாக டேவிட் நடித்திருக்கிறார்கள். சத்யகாம் 1969இல் வெளி வந்தது.

காந்தியின் வழியில் நாடும், குறிப்பாக இளைஞர்களும் நம்பிக்கை இழந்துகொண்டிருந்த காலம். எப்போதும் உண்மையே பேசுவது நடக்காத விஷயம் என்று எல்லாருக்கும் தோன்ற ஆரம்பித்த காலம். இந்த கால கட்டத்தில் எந்த வித காம்ப்ரமைஸும் செய்து கொள்ளாத ஒரு மனிதனின் போராட்டம்தான் இந்த படத்தின் கதை.

கதையின் denouement நமது இதிகாச காலத்திலிருந்து வருவது. சத்யகாமன் என்ற சிறுவன், வேதம் படிக்க விரும்பி ஒரு குருகுலத்துக்கு சென்றான். அங்கே அவனுடைய குலம் கோத்திரம் பற்றி விசாரித்தார்கள். அவனுடைய அம்மாவோ பல மனிதர்களிடம் பழகியவர். அதனால் தன் அப்பா யார் என்று தெரியாது. கேள்வி கேட்கும் குருவிடம் தான் ஜபலா என்ற பெண்ணின் மகன், தந்தை பெயர் தெரியாது என்று கூச வைக்கும் உண்மையை வெளிப்படையாக சொல்கிறார். குருவும் நான் உனக்கு வேதம் படிப்பிக்க முடியும், ஆனால் நேர்மையைப் படிப்பிக்க முடியாது என்று சொல்லி அவரை தனது குருகுலத்தில் சேர்த்துக்கொள்கிறார். இந்தக் காட்சி இந்த கதையில் அற்புதமாக கையாளப்பட்டிருக்கிறது.

இவர் சத்யகாம ஜாபாலி என்றே அதற்கு பின் அறியப்பட்டார். எனக்கு தெரிந்து நம் இதிகாசங்களில் தாயின் பெயரால் அறியப்படுபவர் இவர் ஒருவரே. இந்த கதை சாந்தோக்ய உபநிஷதத்தில் சொல்லப்படுகிறது. ஜபல்பூர் இவரது நினைவாக எழுப்பப்பட்ட ஊர் என்று படித்திருக்கிறேன். ஜாபாலி ராமாயணத்திலும் வருகிறார் – அங்கே அவர் சொர்க்கம் நரகம் என்றெல்லாம் ஒன்றும் இல்லை என்றும், ராமன் பரதன் சொல்வது போல மீண்டும் அயோத்திக்கு சென்று ஆட்சியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் உபதேசிக்கிறார். ஜாபாலி, ராமாயணம் பற்றிய இன்னொரு வியூபாயின்டை நார்லா வெங்கடேஸ்வர ராவ் எழுதிய “சீதா ஜோஸ்யம்” என்ற தெலுங்கு நாடகத்தில் பார்க்கலாம். சாகித்ய அகாடெமி ஒரு தமிழ் மொழிபெயர்ப்பை வெளியிட்டிருக்கிறது.

மூலக்கதை வங்காள மொழியில் நாராயண் சன்யால் என்பவரால் எழுதப்பட்டது.

ஜெமினி, முத்துராமன், எம்.ஆர்.ஆர். வாசு, நாகேஷ், வி. கோபாலகிருஷ்ணன் சக மாணவர்கள். கோபி மாணவனாகவே இறந்துவிடுகிறார். இது எல்லாரையும் அழுத்தமாக பாதிக்கிறது. ஒரு முறைப்பான ஆஃபீசராக வேலைக்கு சேரும் ஜெமினி, ஒரு கட்டத்தில் ஜெயந்திக்கு அடைக்கலம் தருகிறார். ஆனால் ஜெயந்தியை அவரால் ராம்தாஸிடமிருந்து காப்பாற்ற முடியவில்லை. ராம்தாஸினால் தயாகும் ஜெயந்தியை ஜெமினி மணக்கிறார். அவராலும் ஜெயந்தி கன்னி அல்ல என்பதை மறக்க முடியவில்லை, அதனால் அவர்கள் இருவருக்கும் தாம்பத்திய உறவு இல்லை. (ஜெமினி காரக்டரின் ஒரே பலவீனம், makes him human) ஆனால் ஜெயந்தியின் மகனுக்கு ஜெமினி பூரணமான அப்பாவாக இருக்கிறார். இந்த திருமணத்தை ஆன்மிக வழியில் ஆசிரமம் நடத்தும் ஜெமினியின் தாத்தா எஸ்.வி. சகஸ்ரநாமம் ஏற்றுக் கொள்ளாமல் தனது உறவை முழுமையாக துண்டித்துக்கொள்கிறார். நேர்மையான அதிகாரி என்பதால் பல இடஙகளுக்கு பந்தாடப்படும் ஜெமினி கடைசியில் நோய் வந்து இறக்கும் தறுவாயில் இருக்கிறார். எம்.ஆர்.ஆர். வாசு லஞ்சம் கொடுத்து பணக்காரரான ஒரு காண்ட்ராக்டர். முத்துராமன் ஜெமினிக்கு அவ்வப்போது உதவி செய்யும் ஒரு அதிகாரி. ஜெமினியோடு contrast செய்ய இந்த இருவரும். ஜெமினி இறந்துவிட்டால் ஜெயந்தியும் பையனும் நடுத்தெருவில்தான் நிற்கவேண்டும். எம்.ஆர்.ஆர். வாசு ஜெமினி ஒரு ஃபைலில் கையெழுத்து போட்டால் அவரது குடும்பம் வாழ தேவையான பணம் தருவதாக சொல்கிறார். வறுமைக்கு பயப்படும் ஜெயந்தி ஜெமினியிடம் இதைப் பற்றி பிரஸ்தாபிக்கிறார். ஜெமினியும் ஜெயந்தி சொன்னால் கையெழுத்து போடுவதாக சொல்கிறார். ஜெயந்தியால் கேட்க முடியவில்லை. ஜெமினி இறக்கும்போது வரும் சகஸ்ரநாமத்திடம் சின்னப் பையனான ஜெயந்தியின் மகன் ஜெமினி தனது அப்பா இல்லை என்று வெளிப்படையாக சொல்கிறார். சிறு பையனிடமும் சத்தியத்தின் வேகத்தை ஜெமினி ஊட்டி விட்டதைப் பார்க்கும் சகஸ்ரநாமம், ஜெயந்தியை தன் மருமகளாக ஏற்றுக்கொள்கிறார். சுபம் என்று சொல்லமுடியாது, ஆனால் ஒரு நிறைவான முடிவு.

Hindiயில் படம் இன்னும் நன்றாக இருந்தது. பாலசந்தர் தேவையற்ற பல காரக்டர்களை உள்ளே நுழைத்து கதையின் ஓட்டத்தை தளர்த்திவிடுகிறார். உதாரணமாக சோரம் போகும் முத்துராமனின் மனைவி தேவையே இல்லை. நாகேஷ், மேஜர் காரக்டர்கள் தேவை இல்லை – ஆனால் ரொம்ப மோசம் என்றும் சொல்லமுடியாது. கமல் ஒரு முறை சொன்னது போல தன்னை ஒருவன் கற்பழிக்க வரும்போது “ஆணையிட்டேன் நெருங்காதே’ என்று பாட்டு பாடுவது மடத்தனமாக இருக்கிறது. ஜெயந்தி கொஞ்சம் ஓவர்ஆக்ட் செய்கிறார்.

ஜெமினி, எம்.ஆர்.ஆர். வாசு, சகஸ்ரநாமம், தன் பெண்ணையே விலை பேசுபவராக வரும் வி.எஸ். ராகவன் நன்றாக நடித்திருக்கிறார்கள். அதுவும் ஜெமினி மெலோட்ராமா பண்ணக்கூடிய வாய்ப்பு நிறைய இருந்தும், அவர் மிகவும் அருமையாக, நம்பும்படியாக நடித்திருக்கிறார்.

இசை அமைப்பாளர் யார் என்று நினைவில்லை. அனேகமாக வி. குமார் இல்லை எம்எஸ்வி. “ஆணையிட்டேன் நெருங்காதே” பாட்டு ஒன்றுதான். உடனே நினைவு வருகிறது. சாரதா நினைவுபடுத்திய மற்ற இரண்டு பாட்டுக்களும் எனக்கு அவ்வளவாக பிடிக்காது. பாட்டுக்களை எங்காவது கேட்க முடிந்தால் சொல்லுங்கள், ஒரு லிங்க் செய்துவிடுகிறேன்.

ஆகஸ்ட் 30, 2008 அன்று சேர்த்தது:

சாரதாவுக்கு நன்றி! அவரது மறுமொழியிலிருந்து – மற்ற பாடல்கள், ‘நாளை நாம் ஒரு ராஜாங்கம் அமைப்போம், ஆண்டு பாருங்கள் தோழர்களே’ (இறந்து போன வி.கோபாலகிருஷணன் தவிர மற்ற நால்வரும் மீண்டும் சந்திக்கும்போதெல்லாம் இப்பாடல் பின்னணியில் ஒலிப்பது சிறப்பு). இது போக, ஓடும் ரயிலில் நாகேஷ் பிச்சையெடுக்கும் பாடல் ‘நானும் கூட ராஜாதானே நாட்டு மக்களிலே’.

நல்ல படம் மக்களுக்கு பிடிக்காது என்ற தத்துவப்படி ரிலீஸானபோது இப்படம் சரியாகப்போகவில்லை. ஆனால் இப்போது படம் பார்ப்பவர்கள் கேட்கும் கேள்வி ‘இந்த நல்ல படம் ஏன் ஓடவில்லை?’.

குறைகள் இருந்தாலும் பார்க்கக்கூடிய படம்.