மேஜர் சந்திரகாந்த் II (Major Chandrakanth)


இந்த போஸ்ட் கிடைத்துவிட்டது. அன்னை கிடைக்கவில்லை, மீண்டும் எழுத வேண்டியதுதான் போலிருக்கிறது. நாளைக்குத்தான்.

1966இல் வந்த படம். பாலச்சந்தரின் புகழ் பெற்ற மேடை நாடகம். ஏவிஎம் தயாரிப்பில் அவரே இயக்கியது. மேஜர், முத்துராமன், ஜெயலலிதா, நாகேஷ், ஏவிஎம் ராஜன் நடித்தது. வி.குமார் இசை. வெற்றி அடைந்திருக்கும் என்று நினைக்கிறேன், நிச்சயமாக தெரியாது.

ஹிந்தியிலும் “ஊஞ்சே லோக்” என்று எடுத்திருக்கிறார்கள். மேஜருக்கு பதில் அசோக் குமார், முத்துராமனுக்கு பதில் ராஜ் குமார், ஏவிஎம் ராஜனுக்கு பதில் ஃபெரோஸ் கான், ஜெவுக்கு பதில் கே.ஆர். விஜயா.

நான் பார்த்து ஒரு இருபது இருபத்தைந்து வருஷம் இருக்கும். அப்போது தமிழில் வந்த மிக நல்ல படங்களில் ஒன்று என்று நினைத்தேன். நேற்று பார்த்திருந்தால் என் கருத்து ஒரு வேளை மாறி இருக்கலாம். நான் இங்கே எழுதுவது அன்றைய கருத்தை வைத்து.

இது பாலச்சந்தர் ஏஜிஸ் அலுவலகத்தில் வேலை செய்யும்போது எழுதப்பட நாடகமாம். முதலில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டதாம். யாரோ தமிழ் தெரியாத மேலதிகாரி சென்னைக்கு மாற்றலாகி வந்தபோது அவரை வரவேற்க எழுதப்பட்டிருக்கிறது. பிறகு நாடகம் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு மேஜர் நடித்திருக்கிறார். ஏவிஎம் செட்டியார் நாடகத்தை பார்த்து இம்ப்ரஸ் ஆகி படமாக்க முன் வந்திருக்கிறார்.

வி. குமார் பிரமாதமான பாட்டுகளை போட்டிருக்கிறார். “நேற்று நீ சின்ன பாப்பா” என்ற பாட்டில் துள்ளல், “ஒரு நாள் யாரோ” என்ற பாட்டில் இனிமை, “கல்யாண சாப்பாடு போடவா” என்ற பாட்டில் குத்து, “துணிந்து நில்” என்ற பாட்டில் கம்பீரம். “நானே பனி நிலவு” என்பதும் நல்ல பாட்டுதான். இவரை தமிழ் திரை உலகம் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. டிஎம்எஸ், சீர்காழி எல்லாரும் நன்றாக பாடி இருந்தாலும், சுசீலா எல்லாரையும் மிஞ்சிவிட்டார். “துணிந்து நில்” பாட்டு சுரதா எழுதியது. மற்ற எல்லாம் வாலி. “ஜிங்கிடுச்சான் ஜிங்கிடுச்சான் ஜிங்கிடிச்சிச்சான் சிச்சான் சான்” போன்ற காவிய நயம் மிக்க வரிகளை அந்த காலத்தில் எழுதக் கூடியவர்கள் தஞ்சை ராமையா தாசும் வாலியும்தான்.

“நேற்று நீ”, “ஒரு நாள் யாரோ”, “கல்யாண சாப்பாடு” பாட்டுக்களை இங்கே கேட்கலாம்.

மேஜரின் மாஸ்டர்பீஸ் இதுதான். குருட்டுத்தனத்தை வெல்லும் தன்னம்பிக்கை, மன உறுதி, ஒழுக்கத்தின் மீதுள்ள அழுத்தமான நம்பிக்கை எல்லாவற்றையும் மிக சிறப்பாக வெளிப்படுத்தி இருப்பார். இதை விட சிறப்பாக அவர் நடித்ததில்லை. எவ்வளவோ திறமைசாலியான அவர் எப்போதும் ஒரு டம்மி அப்பா ரோலில் வந்து போனது கொடுமை. ஒரு விதத்தில் பார்த்தால் இந்த படத்தில் நடித்தது அவரது துரதிர்ஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும் – இதற்கு பிறகு முக்கால்வாசி படங்களில் அவர் நடித்தது திருப்பி திருப்பி இதே ரோல்தான்!

முத்துராமன் மிக அருமையாக நடித்திருப்பார். நாகேஷ் முதல் பகுதியில் சிரிக்க வைப்பார். அவர் அழ வைக்கும் இரண்டாவது பகுதி கொஞ்சம் மெலோட்ராமாவாக இருந்தாலும் மோசம் என்று சொல்ல முடியாது.

மேஜரின் நண்பராக வருபவர் யார்? யாருக்காவது தெரியுமா?

நல்ல plot. குருடரான ரிடையர்ட் மேஜர் மே. சுந்தரராஜன் தன் பலவீனத்தை உறுதியுடன் சமாளித்து வாழ்கிறார். அவரது முதல் பையன் முத்துராமன் கடமை தவறாத போலிஸ் அதிகாரி. இளைய மகன் ஏவிஎம் ராஜனோ ஒரு ப்ளேபாய். ஜெயை மயக்கி கைவிட்டுவிடுகிறார். ஜெ தற்கொலை செய்து கொள்ள, அவரது அண்ணன் நாகேஷ் ராஜனை தேடி கண்டுபிடிக்கிறார். ராஜனிடம் ஆறுதலாக இரண்டு வார்த்தைகள் எதிர்பார்க்கும் அவரிடம் பயப்படும் ராஜன் பணம் தருகிறேன் என்னை விட்டுவிடு என்கிறார். வெறியில் நாகேஷ் ராஜனை கொன்றுவிட்டு தப்பி ஓடி, மேஜரின் வீட்டுக்குள் ஒளிகிறார். குருடராய் இருந்தாலும் மேஜர் நாகேஷ் ஒளிந்திருப்பதை கண்டுபிடித்து விடுகிறார். நாகேஷ் மேஜருக்கு கண் தெரியாது என்று தெரிந்து அதிசயப்படுகிறார். அவரிடம் தான் கொலை செய்ததை சொல்கிறார். மேஜருக்கு அது தவறாக தெரியவில்லை. ஆனால் நாகேஷ் தன் வீட்டில் ஒளிந்துகொள்ளக்கூடது என்று சொல்கிறார். நாகேஷ் மேஜரின் போலித்தனத்தை சாடுகிறார். பிறகுதான் அவருக்கு மேஜரின் மகன் போலீஸ்காரர் என்று தெரிகிறது. தான் கொலை செய்தது மேஜரின் இன்னொரு மகன் என்றும் தெரிகிறது. மேஜர் உடைந்துபோனாலும், நாகேஷ் செய்தது சரிதான் என்று சொல்கிறார். நாகேஷுக்கு இடம் கொடுக்கிறார். முத்துராமன் நாகேஷை கண்டுபிடித்து அவரையும் அவருக்கு இடம் கொடுத்த மேஜரையும் கைது செய்கிறார்.

“ஊஞ்சே லோக்” என்றால் “உயர்ந்த மனிதர்கள்” என்று அர்த்தம். மேஜர், நாகேஷ், முத்துராமன் ஆகியவர்களின் கதாபாத்திரங்கள் உண்மையிலேயே உயர்ந்தவர்கள்தான்.

சில காட்சிகள் பிரமாதமாக செதுக்கப்பட்டிருக்கின்றன. மேஜர் தான் குருடனாக இருப்பதால் தனக்கு ஒரு ப்ராப்ளமும் இல்லை என்று நாகேஷுக்கு சொல்வார். வீட்டில் ஒவ்வொரு பொருளும் எங்கே இருக்கிறது என்று தனக்கு ஒரு கணக்கு இருக்கிறது என்று காண்பிப்பார். அடுத்த வினாடி கீழே விழுந்துவிடும்போது என்ன கணக்கு இருந்தாலும் கண் தெரியாத குறை எவ்வளவு பெரியது என்று தெரிகிறது.

“ஒரு நாள் யாரோ” படமாக்கப்பட்ட விதம் – ரேடியோவில் தங்கை ஜெ பாடுவதை தன் அக்கம்பக்கத்தார் கேட்க நாகேஷ் வாங்கும் ஓட்டை ரதியோ சரியாக எல்லாரும் வந்ததும் உடைந்துவிட, ஜெயை லைவ் ஆக பாட வைத்து, சமையல் பாத்திரங்களைக் கொண்டு நாகேஷ் இசை அமைப்பது அமர்க்களம்! காட்சியை அமைத்தவருக்கு ஒரு சபாஷ்! இதை youtubeஇல் தேடிப் பார்த்தேன், கிடைக்கவில்லை. வீடியோ இருந்தால் ரசிக்கலாம், யாராவது நல்ல மனம் upload செய்யுங்களேன்!

மீண்டும் பார்த்திருந்தால் ஒரு வேலை கொஞ்சம் நாடகத்தனம் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் வேறு குறைகள் எதுவும் எனக்கு தெரிந்திருக்காது என்று தோன்றுகிறது.

பார்க்க வேண்டிய படம். 10க்கு 7.5 மார்க். B+ grade.

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

One Response to மேஜர் சந்திரகாந்த் II (Major Chandrakanth)

  1. Bhuvanesh says:

    ரொம்ப தேடி பிடித்து நான் பார்த்த பழைய படத்தின் விமர்சனத்தை படித்தேன்!
    நல்ல விமர்சனம்! அதை விட தேடி தேடி ஒரு “Controversy” -ஐ கண்டுபிடித்தேன்!
    நாகேஷ் மேல் என்ன கோபமோ? அவர் ரோல் தான் படத்தை மாற்ற எல்லா கேரக்டர்களையும் இணைக்கும் புள்ளி! அது சொதப்பி இருந்தால் படம் சொதப்பி இருக்கும். அந்த கால மாற்ற படங்களை பார்க்கும் போது இந்த படத்தில் அவர் நடிப்பு அந்த காலத்தின் யதார்த்தம் என்று உங்களுக்கு புரியும். அதில் இருந்த நாடகத்தன்மை இல்லை எனில் அவர் எதோ “just like that” கொலை செய்ததுபோல் இருந்திருக்கும்! நாகேஷ் தமிழ் சினிமாவின் அதிர்ஷ்டம்! சப்போர்டிங் ரோல் இல்லாமல் சிரிக்க வைக்கவும் முடியும் அழவைக்கவும் முடியும் என்று உணர்த்தியவர்!
    நன்றி!

பின்னூட்டமொன்றை இடுக