ஸ்ரீதரை பற்றி அவர் மனைவி


ஆனந்தவிகடனிலிருந்து: ((மணிவண்ணனுக்கு நன்றி!)
”இன்னும் ஒரு படத்தை இயக்கிப் பார்க்கணும். என்னோட படைப்பு, சினிமா உலகத்தையே திருப்பிப் போடணும். சினிமாவில் செய்ய வேண்டிய வித்தியாசங்கள் நிறைய இருக்கு. மனுஷ வாழ்க் கையோட கூறுகளை நாம சொல்லவே இல்லை. அதை அழுத்தமாச் சொல்ற மாதிரியான ஸ்க்ரிப்ட் என்கிட்ட இருக்கு. எழுந்து நடமாடுற அளவுக்கு இந்த உடம்பு சரியாகிறப்ப நான் ‘ஷாட் ரெடி’ன்னு கிளம்பிடுவேன். அடுத்த வருஷம் இளைய தலைமுறை இயக்குநர் களுக்கு நான்தான் போட்டியா இருப்பேன்!” விகடன் தீபாவளி மலருக்காக தன்னை சந்திக்க வந்த டைரக்டர் அமீரிடம் இப்படிச் சொன்னார் ஸ்ரீதர்.

ஆனால், அந்த வார்த்தைகளில் மிளிர்ந்த நம்பிக்கை ஒளி அடுத்த சில வாரங்களிலேயே அணைந்ததுதான் சோகம். பக்கவாதத்தால் 10 வருடங்களுக்கும் மேலாக படுக்கையில் இருந்த டைரக்டர் ஸ்ரீதரின் உடல்நிலை சமீப காலமாக, ரொம்பவே கவலைக்கிடமானது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஸ்ரீதர் கடந்த 20-ம் தேதி காலையில் மரணமடைந்தார்.

தமிழ்த் திரையுலகை தன் திரைக்கதை வித்தைகளால் வித்தியாசப்படுத்திய அந்த ஜாம்பவான் முடங்கி விழுந்தபோது, அவருக்கு யாதுமாகி நின்றவர் அவருடைய மனைவி தேவசேனா.

”விகடனுக்கு கொடுக்கிற பேட்டிதான் கடைசி பேட்டின்னு நினைச்சாரோ என்னவோ… உடல் நலமில்லாததைக்கூட பொருட்படுத்தாம அஞ்சு மணி நேரம் பேசினார். நிறைய மனசுவிட்டுப் பேசினார். ஆனா, அவரோட கடைசிப் பேட்டி பிரசுரமானதை அவர் பார்க்காமலேயே போயிட் டார்!” குரல் உடைந்து அழுகிறார் தேவசேனா.

”அவருக்கு எப்பவும் எதுவும் சுத்தமா இருக்கணும். ஒரு நாளைக்கு மூணு தடவை டிரெஸ் மாத்துவார். ஹீரோவுக்குப் போட்டியா வொயிட் அண்ட் வொயிட்டில் பளிச்னு செட்டில் உலவுவார். ஒரு கதை மனசில உருவாகிடுச்சுன்னா, அது முழுமையடைகிற வரைக்கும் சரியாப் பேச மாட்டார். சாப்பாடு, தூக்கம்னு எது பத்தியும் கவலைப்படமாட்டார். அந்தக் கதை மனசுல முழுமையடைஞ்ச பிறகு பேப்பரும் பேனாவுமா உட்கார்ந்திடுவார். வசனங்களை ரொம்ப யதார்த்தமா எழுதுவார். எந்த வேலையையும் தள்ளிப்போடக் கூடாதுங்கிறதில ரொம்ப உறுதியா இருப்பார். பக்கவாதத்தால் அவரோட மொத்த ஓட்டமும் தடையாகி படுக்கையில் விழுந்தப்ப, ‘ரெண்டு மாசத்தில் சரியாகிடும்!’னு சொல்லிட்டே இருந்தார். சாகப் போற ரெண்டு மாசத்துக்கு முன்னாலகூட இதே வார்த்தை களைத்தான் சொன்னார்!” – தலைமாட்டில் இருக்கும் ஸ்ரீதரின் கம்பீரப் புகைப்படத்தைப்பார்த்துக் கொண்டே பேசுகிறார் தேவசேனா.
”ஷூட்டிங் சமயத்தில யார்கிட்டயும் பேச மாட்டார். பார்வையாலேயே எல்லா விஷயத்தையும் சம்பந்தப்பட்டவங்களுக்கு உணர்த்துவார். வெளியூர் ஷூட்டிங் போறப்ப, முக்கியமான டெக்னீஷியன்களை குடும்பத்தோட வரச் சொல்வார். அந்த மாதிரி நேரங்கள்ல ரொம்ப சந்தோஷமா இருப்போம். ஆங்கிலப் படங்களை விரும்பிப் பார்ப்பார். அப்பவே ‘இந்த மாதிரித் தரத்தில் நாம எப்பதான் படம் எடுக்கப் போறோமோ?’ன்னு ஆதங்கப்பட்டுப் பேசுவார். ‘நமக்காக ஒரு நிமிஷம் கூட ஒதுக்காம இப்படி பம்பரமா சுத்துறாரே’ன்னு நான் வருத்தப்பட்டதுதான் தப்போ என்னவோ… படுத்த படுக்கையா அவர் விழுந்து பல வருஷம் என் பக்கத்திலேயே இருந்தார்.

சில நாட்களுக்கு முன்னால அவர் உடம்புக்கு ரொம்ப முடியாமப் போச்சு. ‘நான் உன்னை ரொம்பச் சிரமப்படுத்துறேன்தானே?’ன்னு கேட்டார். ‘நீங்க நல்லபடியாக இருந்து உங்க பக்கத்திலேயே இருக்கிற பாக்கியத்தைத் தவிர, வேற எதுவும் எனக்கு வேணாம்’னு சொன்னேன். அவருக்கு கண்ணெல்லாம் கலங்கிடுச்சு. ‘ஒரே ஒரு படத்தைப் பிரமாதமாப் பண்ணிட்டு, அதுக்கப்புறம் செத்தாக்கூட எனக்குக் கவலை இல்லை!’ன்னு சொன்னார். அவர் குணமடைவது சுலபமில்லைன்னு எனக்குத் தெரியும். இருந்தாலும் அவரோட அசாத்திய நம்பிக்கை எப்படியும் அவரை மறுபடியும் நடக்கவைச்சிடும்னு நினைச்சேன்… அவரோட நம்பிக்கையைத்தான் நான் நம்பிட்டு இருந்தேன். ஆனா, எல்லாமே பொய்யாகிப் போச்சே!” – கண்ணீரில் கரைகிறார் தேவசேனா.

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

பின்னூட்டமொன்றை இடுக