கலைஞரின் நண்பன் சிவாஜி


சிவாஜியை பற்றி ஒரு போஸ்ட் எழுதினேன். அதன் சுருக்கம் கீழே. முழுதாக படிக்க விரும்புவர்கள் இங்கே செல்லலாம்.

கலைஞர் சிவாஜியை பற்றி பேசும்போதெல்லாம் பல எதிர்ப்புகளையும் மீறி தன் நண்பனுக்கு சிலை வைத்ததை குறிப்பிடுகிறார். தன் நண்பனுக்கு சிலை வைக்கவேண்டியது தன் கடமை என்று நினைத்ததாக சொல்கிறார். நண்பனுக்கு சிலை வைக்க வேண்டுமென்றால் சொந்த பணத்தில் அல்லவா வைக்க வேண்டும்? எங்கள் வரிப் பணத்தை எதுக்கய்யா செலவழிக்கிறீர்?

இப்படி பேசுவது சிவாஜியின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடுவதாக ஆகாதா? தமிழ் நாட்டின் psycheஇல் ஒரு பகுதி ஆகிவிட்ட சிவாஜி எனக்கும் நண்பர் என்றல்லவா சொல்ல வேண்டும்? இதை எல்லாம் சிவாஜி ரசிகர்கள் எப்படி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்?

தசாவதாரம் ஜோக்ஸ்


கொஞ்சம் லேட்தான், ஆனாலும்:

தியேட்டரில் கேட்ட கமெண்ட்கள்:

1. நல்ல வேளை, அசின் ரோலையும் நானே பண்ணிவிடுகிறேன் என்று சொல்லாமல் இருந்தாரே!

2. நல்ல வேளை, படத்துக்கு கௌரவர்கள் என்று பேர் வைக்கவில்லை!

சபாபதி (Sabapathi)


சபாபதி பற்றி எழுத கொஞ்சம் தாமதம் ஆகும். இப்போதைக்கு “ச” வரைக்கும்தான், பிறகுதான் “பாபதி”! மொத்தமாக நீங்கள் “சபாபதி” என்று படித்துக்கொள்ளுங்கள். சுருக்கமாக:

1. என்னை பொறுத்த வரை இதுதான் தமிழில் முதல் படம். இதற்கு முன்னால் வந்ததெல்லாம் பாட்டு களஞ்சியங்கள். த்யாக பூமி, சேவா சதனம் இரண்டும் பாட்டை நம்பி வரவில்லை என்று கேள்வி, ஆனால் நான் பார்த்ததில்லை.

2. அந்த காலத்து காமெடி நிறைய இடங்களில் சாயம் போய்விட்டது – நமக்கு சிரிப்பு வரமாட்டேன் என்கிறது.

3. ஆனால் அந்த ரயில் “வியாசம்” அபாரம்.

4. ஒரு pioneering effort என்ற விதத்தில் பார்க்கலாம். 10க்கு 6.5 மார்க். C+ grade.

தொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்

தொடர்புடைய பதிவுகள்: ராண்டார்கை சபாபதி பற்றி எழுதிய பத்தி

நூத்துக்கு நூறு


இத்துடன் வெற்றிகரமாக நூறு போஸ்ட்கள் ஆகிவிட்டன! சபையோர்களே! சொற்குற்றம் பொருட்குற்றம் எக்குற்றம் இருப்பினும், அக்குற்றத்தை மன்னித்து, குறையை விடுத்து நிறையை மட்டுமே கொண்டதற்கு நன்றி!

இவர்களை குறிப்பிடவேண்டும்!

சாரதா – கருத்துகள் வேறுபட்டாலும் அருமையான மறுமொழிகள் எழுதியவர். உங்கள் மறுமொழிகளை போஸ்டாக போட அனுமதித்தற்கும் நன்றி!

ப்ளம் – காரசாரமாக வாதாடியவர்களில் தலையாயவர்

வெங்கட் – தமிழ் வாசிப்பு பற்றிய என் கேள்விகளுக்கு பொறுமையாக பதில் சொன்னவர். இந்த ப்ளாகை புகழ்ந்த ஒரே ஆத்மா!

பாஸ்டன் பாலா – அடிக்கடி இந்த ப்ளாகை லிங்க் செய்தவர்.

பக்ஸ் – உனக்கெல்லாம் நன்றி சொல்லிக்கொண்டிருக்க முடியாது.

என் மனைவி ஹேமா – என்னை பொறுத்துக்கொண்டதற்கு நன்றி!

அன்பைத் தேடி II


இதுவும் சாரதாவின் guest post. Enough said. என்னுடைய ஒரிஜினல் போஸ்ட் இங்கே. Over to Saradha!

முக்தா பிலிம்ஸ் சார்பில் ‘முக்தா’சீனிவாசன் இயக்கிய படம். முக்தா ஒரு பழம்பெரும் இயக்குநர். அந்த காலத்திலேயே முதலாளி என்ற படம் எடுத்து மகத்தான வெற்றியைக்கணடவர் (’ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே’ என்ற பாடலை மறக்க முடியுமா). அவர் எடுக்கின்ற படங்கள் எல்லாமே கதையம்சத்தைப் பொறுத்த்வரை ச்ற்று வித்தியாசமாகவே இருக்கும். அதாவது மற்றவர்கள் எடுக்கத் தயங்கும் கதைகளை துணிந்து படமாக்குவார். தொடர்ந்து ‘பனித்திரை’, ‘தேன்மழை’, ‘பொம்மலாட்டம்’ போன்ற படங்களை இயக்கியபின்னர் நடிகர்திலகத்திடம் வந்தார். ‘நிறைகுடம்’ என்ற அற்புதமான படத்தைத் தந்தார். சிறப்பான கதை அற்புதமான நடிப்பு, சிறந்த நட்சத்திரத் தேர்வு என்று எல்லா அம்சங்களையும் உள்ளட்க்கிய படமாக அது வந்தது. (அதைப்பற்றி தனியாக ஒரு எபிசோட் எழுத இருப்பதால் இப்போது விட்டுவிடுவோம்).

முக்தா – நடிகர்திலகம் காம்பினேஷன் ஒரு விசித்திரமான கூட்டணி. தொடர்ந்து இரண்டு வெற்றியைத்தர மாட்டார்கள். ஒரு வெற்றி ஒரு தோல்வி என்று தொடர்ந்தது. உதாரணமாக, இவர்கள் கூட்டில் உருவானவற்றுள்

நிறைகுடம் – வெற்றி
அருணோதயம் – தோல்வியைக்கடந்த சுமார் வெற்றி
தவப்புதல்வன் – வெற்றி
அன்பைத்தேடி – தோல்வி
அந்தமான் காதலி – வெற்றி
இமயம் – தோல்வி
கீழ்வானம் சிவக்கும் – வெற்றி
பரீட்சைக்கு நேரமாச்சு – வெற்றி
இரு மேதைகள் – தோல்வி

இப்படி வெற்றியும் தோல்வியும் வெற்றியும் மாறிக்கண்ட ஒரு காம்பினேஷன். இவற்றிற்கிடையே முக்தா தனியாக ‘சூரியகாந்தி’, ‘அந்தரங்கம்’, ‘அவன் அவள் அது’ போன்ற படங்களையும் இயக்கினார். (அது பற்றி இங்கு விளக்கம் அவசியமில்லையென்பதால் விட்டு விடுவோம்).

“அன்பைத்தேடி” படம் ரொம்பவும் எதிர்பார்க்கப்பட்டு தோல்வியடைந்த படம் அல்ல. முதல் நாள் முதல் காட்சி பார்த்ததுமே நடிகர்திலகத்தின் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு விட்டுப்போய் விட்டது. (பொதுவாக முக்தாவின் ப்டங்களை ரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்போடு எல்லாம் அணுகுவதில்லை. இப்படித்தான் இருக்கும் என்று அவர்களுக்குள்ளாகவே ஒரு கணிப்பு இருக்கும்). கண்தெரியாத கதாநாயகியை வைத்து, நிறைகுடம், மாலைக்கண் நோய் உள்ள கதாநயகனை சித்தரித்து தவப்புதல்வன் என்று எடுத்த முக்தா, அன்பைத்தேடி படத்தில் ‘எப்போதும் பகல் கனவு காணும்’ ஒரு கதாநாயகனை மையமாக வைத்து கதயை உருவாக்கி இருந்தார். நடிகர் திலகத்துக்கு தன் திறமையைக் காட்ட கொஞ்சம் கூட ஸ்கோப் இல்லாத ஒரு களம்.

கதைச்சுருக்கம்:

அக்கா விஜயகுமாரியின் கணவர் மேஜரின் ப்ராமரிப்பில் வளரும் சிவாஜி, எப்போதும் பகல் கனவு காண்பவராக இருப்பார். அவரை முன்னுக்கு கொண்டுவர மேஜரும் என்னென்னவோ வியாபாரங்களை அமைத்துக்கொடுக்க ஒவ்வொன்றும் அவருடைய பகல்கனவு நோயால் பாழ்பட்டுப்போகும். கண்ணாடிக்கடை வைத்திருக்கும்போது, கிரிக்கெட் விளையாடுவதாக கனவு கண்டு விளாச மொத்த கண்ணாடிகளும் பாழ். மீண்டும்பட்டாசுக்கடை வைத்திருக்கும் சிவாஜி, ஜெயலலிதாவை ‘மிஸ்.மெட்றாஸ்’ ஆக கனவு கண்டு கொண்டே மத்தாப்புகளைக் கொளுத்திப் பட்டாசுகளின் மேல் போட, மொத்தக்கடையும் எரிந்து சாம்பல். இன்னொரு இடத்தில் ஓவியக்காட்சியைகாணச் சென்ற இடத்தில் ஒரு படத்தைப்பார்த்து அதில் வரும் பெண்ணுடன் கற்பனையில் ஜெயலலிதாவை நினைத்துப் பாட்டுப்பாடி, அதே நினைவில், அங்கே விளக்கம் அளித்துக் கொண்டிருக்கும் சி.ஐ.டி.சகுந்தலாவைக் கட்டிப்பிடிக்க மிகவும் ரசாபாசமாகிவிடுகிறது. இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக அக்கா விஜயகுமாரி – மேஜர் தம்பதியின் பெண்குழந்தையை கடைக்கு அழைத்துச் செல்லும் சிவாஜி, அங்கே ஒரு புத்தர் சிலையைக் கண்டு, தானே புத்தராக பகல் கனவில் மூழ்கி விட, குழந்தை காணாமல் போக, விஷயம் அறிந்த மேஜர் இனிமேலும் பொறுக்க முடியாமல் வெகுண்டு போய் மைத்துனனின் சொத்துக்களை அவரிடமே ஒப்படைத்து விட்டு மனைவி விஜயகுமாரியுடன் தனியே சென்று விடுகின்றார். இதனிடையே, காணாமல் போன தன் மகளின் ஒரே நினைவாக தன்னிடம் இருந்த (அந்தக் குழந்தை முன்பு பாடிய) பாடல் கேஸட்டையும் தன்னுடைய அவசர நடவடிக்கையால் விஜயகுமாரி அழித்து விடுகிறார். அக்காவும் அத்தானும் தனியே விட்டுச்சென்றதால் தவிக்கும் சிவாஜிக்கு ஜெயலலிதாதான் உறுதுணையாக இருந்து அவரை கொஞ்சம் கொஞ்சமாக பயந்த சுபாவத்தைப் போக்கி, தைரியமுள்ளவராக மாற்றுகிறார். இந்நிலையில் ஒருநாள் வானொலியில் காணாமல் போன அக்காவின் குழந்தை பாடிய பாட்டு ஒலிக்க, அதைக்கேட்டு உடனடியாக வானொலி நிலையத்தை அணுகும் சிவாஜி அவர்களிடம் இருந்து குழந்தையின் இருப்பிடம் பற்றியறிந்து அங்கே சென்று குழந்தையை மீட்டு அக்கா குடும்பத்திடம் சேர்க்க, குடும்பம் மொத்தமும் ஒன்று சேர … முடிவு ‘சுபம்’.

இப்படத்திற்கு மிகச்சிறந்த ஒளிப்பதிவாளரான (சிவந்த மண், இதயக்கனி, தியாகம் புகழ்) என்.பாலகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருந்தார். ‘மெல்லிசை மாமன்னர்’ எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். அவருடைய இசையில்

“அம்மாவும் அப்பாவும் இரு பூனைகள்.. அவர்களின் மகள் நான் செல்லப்பூனை” (குழந்தை பாடுவது, கிளைமாக்ஸில் குழந்தையை கண்டு பிடிக்க உதவும் பாட்டு)

“புத்தி கெட்ட பொன்னு ஒண்ணு சுத்துதடி என்னையே” (டி.எம்.எஸ். – சுசீலா) நடிகர் திலகமும் ஜெயலலிதாவும் வித்தியாசமான காஸ்ட்யூமில்.

டி.எம்.எஸ்ஸுடன் ஜெயலலிதா சொந்தக்குரலில் பாடிய “சித்திர மண்டபத்தில் சில மொட்டுகள் கொட்டி வைத்தேன்” என்ற பாடல் அப்போது ரொம்ப பாப்புலர். இப்படத்திற்காக சென்னை தேவி பாரடைஸ் தியேட்டரில் நன்றாக ஓடிக்கொண்டிருந்த ‘என் மகன்’ படம் மாற்றப்பட்டது.

அந்த நாள் Preview


இது சாரதாவின் guest post. அவர் அந்த நாள் பற்றி எழுதிய மறுமொழி மிக அருமையாக இருந்ததால், அதை இங்கே ஒரு போஸ்டாக போட்டிருக்கிறேன்.

சாரதா, ராஷோமொன் படத்தில் இந்த ஃப்ளாஷ்பாக் உத்தி மிக சிறப்பாக பயன்படுத்தப்பட்டது.

Over to Saradha!

அந்த நாளில், அதாவது அந்த நாட்களில் (1950) படம் துவங்கும்போது கர்நாடக இசையுடன் அல்லது கர்நாடக இசைப்பாடலுடன் படத்தின் டைட்டில்கள் ஓடும். முடிந்ததும் ஒரு அரசவையில் அரசவை நர்த்தகியின் நடனம் நடைபெறும். அதைத் தொடர்ந்து பாத்திரங்கள் பேசத்துவங்க படம் நகர ஆரம்பிக்கும். இதுதான் அன்றைய நடைமுறை.

ஆனால் “அந்த நாள்” படத்தின் துவக்கத்தைப்பாருங்கள். படம் துவங்கும்போது ஜாவர் சீதாராமனின் குரலில் “இரண்டாம் உலகப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது போர் விமானங்கள் குண்டு வீசித் தாக்கிக்கொண்டிருந்தன. எந்த நேரம் என்ன நடைபெறுமோவென்று எல்லோர் மனதிலும் ஒரு அச்சம் குடிகொண்டிருந்தது. அப்போது ஒருநாள் சென்னை திருவல்லிக்கேணியில் ஒரு வீட்டில்…”

இதைப்பேசி முடிக்கும் முன்பாகவே, திடீரென்று துப்பாக்கி வெடிக்கும் சப்தம், அதைதொடர்ந்து சிவாஜி நெஞ்சைப் பிடித்துக்கொண்டே கேமராவிலிருந்து பின்னோக்கிச்சென்று கீழே விழுவார். கால்களை உதைத்தவாறே உயிரை விடுவார். (ஆம். முதல் காட்சியிலேயே கதாநாயகன் அவுட். அந்த நாளில் நினைத்துப்பார்க்க முடியாத புதுமை). சிவாஜி இறந்ததும், மாடியிலிருந்து கதவொன்று திறக்கும். ஒரு வழுக்கைத்தலை பெரியவர் தட தட வென மாடிப்படிகளில் ஓடி வந்து கேமரா அருகில் வந்ததும் கீழுதட்டை கைகளல் பிடித்தவாரே அங்குமிங்கும் பார்ப்பார். பின்னர் ஓடத்துவங்குவார். டைட்டில்கள் ஓடத்துவங்கும். (ஆம் ‘அந்த நாள்’.. அந்த நாளேதான்).

கொலை எப்படி நடந்தது என்று விசாரிக்க வரும் சி.ஐ.டி.ஜாவர் சீதாராமனிடம், கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரும், கொலை எப்படி நடந்திருக்கக் கூடும் என்று அவரவருக்கு தெரிந்த விஷயங்களைக்கொண்டு விவரிக்க, ஒவ்வொன்றும் ஒரு ஃப்ளாஷ்பேக்காக விரியும். ஒவ்வொருவர் சொல்லி முடிக்கும்போதும் சிவாஜி சுடப்பட்டு விழுவார். (படம் முழுவதையும் ஃப்ளாஷ் பேக்கிலேயே சொல்லும் பாணியில் பின்னாளில் வந்த பல புதுமைப்படங்களுக்கு வித்திட்டு வழிகாட்டிய படம் ‘அந்த நாள்’).

பெரியவர் பி.டி.சம்பந்தம், சிவாஜியின் தம்பி டி.கே.பாலச்சந்திரன், பாலச்சந்திரனின் மனைவி, நாடோடிப்பாடலை சுவாரஸ்யமாகப்பாடும் சோடாக்கடைக்காரன், குதிரை வண்டிக்காரன்… ஒவ்வொருவரும் எவ்வளவு ஜீவனுள்ள பாத்திரங்கள்..!!. நாட்டுப்பற்று மிகுந்த பண்டரிபாய், கல்லூரி விழாவில் புரட்சிக்கருத்துக்களை சொல்லும் சிவாஜியைக் கண்டு காதல் வசப்படுவது ஒரு அருமையான கவிதை நயம். தன்னுடைய திறமையை தன்னுடைய சொந்த நாட்டு அரசாங்கம் அங்கீகரிக்கவில்லை என்று விரக்தியின் எல்லைக்குப் போய் ஜப்பான் நாட்டு அரசுடன் உறவு வைத்து தன் சொந்த நாட்டுக்கே விரோதியாக மாறும் துடிப்புள்ள எஞ்சினீயர் கதாபாத்திரத்தில் சிவாஜி தூள் கிளப்பியிருப்பார்.

கேமரா வழியாக கதை சொல்லும் பாணி முதலில் இந்தப்படத்தில்தான் பரீட்சித்துப் பார்க்கப்பட்டிருக்கும் என்பது பலரின் எண்ணம். நான் முன்பு சொன்னது போல அறையைப்பூட்டிக்கொண்டு சிவாஜி போகும்போது அவரோடேயே கேமராவும் போகும். கையிலிருக்கும் சாவிக்கொத்தை மேலும் கீழும் தூக்கிப்போட்டுப் பிடித்தபடி அவர் செல்லும்போது, கேமராவும் சாவியோடு மேலும் கீழும் போகும்.

அதே போல இறுதிக்காட்சியில், தான் சுடப்படுவதற்கு முன்பாக, சுழல் நாற்காலியில் அமர்ந்த படி மனைவி பணடரிபாயுடன் பேசும்போது கேமரா இவரிடத்தில் அமர்ந்து கொண்டு இவர் பார்வை போகும் திசையெல்லாம் போகும். அறை முழுக்க சுற்றி சுற்றி அலையும்.

( ‘இருகோடுகள்’ படத்தில் கலெக்டர் சௌகார், முதலமைச்சர் அண்ணாவை பேட்டியெடுக்கும் காட்சியில், அண்ணாவின் இருக்கையில் கேமரா அமர்ந்து, அவர் பார்வை போகும் திசைகளில் போவதைக்கண்டுவியந்தேன். அதன் பின்னரே ‘அந்தநாள்’ பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த உத்தி ஏற்கெனவே (15 ஆண்டுகளுக்கு முன்பே) அந்த நாளில் பயன்படுத்தப் பட்டிருப்பதைக் கண்டு வியப்பின் எல்லையை அடைந்தேன். (பாலச்சந்தர் என்று பெயர் வைத்தாலே புதுமைகள் செய்யதோன்றுமோ)

எஸ். பாலச்சந்தர், தானே ஒரு நடிகராக இருந்தும் கூட, சில காட்சிகளில் தானே நடித்துப் போட்டுப் பார்த்தபின், சரிவரவில்லையென்றதும் தூக்கிப்போட்டுவிட்டு ஏ.வி.எம். செட்டியாரின் ஆலோசனையின்படி நடிகர்திலகத்தை கதாநாயகனாகப் போட்டு படத்தை எடுத்தார்.

படத்தில் பாடல்களே இல்லாததால் இசையமைப்பாளர் என்று தனியாக ஒருவர் கிடையாது. படத்தின் டைட்டிலில் ‘பிண்ணனி இசை : ஏ.வி.எம்.இசைக்குழு’ என்று மட்டும் காண்பிக்கப்படும்.

தமிழ்த்திரையுலக வரலாற்றில் எந்நாளும் பேசப்படும் படமாக சிறந்த தொழில் நுட்பம், மற்றும் புதிய சிந்தனை அமைந்த படம்தான் “அந்த நாள்”I