தாதாசாஹேப் ஃபால்கே விருது


முக்கால்வாசி தமிழர்களுக்கு இப்படி ஒரு விருது இருப்பதே சிவாஜிக்கு இந்த விருது கொடுத்த பிறகுதான் தெரியும். இந்திய அரசு சினிமாத் துறையில் பெரும் சாதனையாளர்கள் என்று கருதப்படுபவர்களுக்கு இந்த விருதைக் கொடுக்கிறது.

V.K. Murthy

2008-ஆம் வருஷத்துக்கு விருதை வென்றவர் வி.கே. மூர்த்தி. மூர்த்தி கன்னடிகர். ராஜ்குமாருக்கு அடுத்தபடி இந்த விருதை வென்ற கன்னடிகர் இவர்தான். காமெராமேன். எனக்கு காமெராவின் நுட்பம் எல்லாம் ரசிக்கத் தெரியாது. ஆனால் குரு தத்தின் முக்கால்வாசி படங்களுக்கு இவர்தான் ஒளிப்பதிவாளர், குரு தத்தின் படங்கள் அனேகமாக கிளாசிக் ஒலிப்பதிவைக் கொண்டவை. கறுப்பு வெள்ளை திரைப்படங்களில் சில சமயம் ஒளிப்பதிவு அற்புதமாகத் தெரிவதுண்டு. மூர்த்தியின் கறுப்பு வெள்ளைப் படங்கள் அப்படித்தான். அந்த மாதிரி ஒளிப்பதிவு என்றால் எனக்கு தமிழ் படத்தில் நினைவு வருவது “அந்த நாள்” திரைப்படம்தான். காகஸ் கே ஃபூல், ப்யாசா, ஆர் பார், சாஹிப் பீபி அவுர் குலாம், Baazi (இதுதான் தங்கைக்காக என்று பிற்காலத்தில் சிவாஜி நடித்து வந்தது), சி.ஐ.டி. போன்ற படங்கள் இவர் ஒளிப்பதிவு செய்தவைதான்.Kagaz Ke Phool என் போன்ற பாமரனுக்கே அற்புதமான ஒளிப்பதிவு என்று தோன்றுகிறது. ஒளிப்பதிவுக்கு என்று ஒரு விருது கொடுத்திருப்பது, அதுவும் இவருக்கு கொடுத்திருப்பது பொருத்தமானதே.

தாதாசாஹேப் ஃபால்கே விருது பெற்றவர்களின் லிஸ்டைப் பார்த்தால் வயிறு எரிகிறது. ஹிந்திப் படங்களுக்கு மட்டுமே recognition இருக்கிறது. தமிழுக்கு சிவாஜி மட்டுமே; கன்னடத்துக்கு ராஜ்குமார் மட்டுமே; கேரளாவுக்கு அடூர் கோபாலகிருஷ்ணன் மட்டுமே; தெலுங்குக்கு நாகேஸ்வர ராவ், எல்.வி. பிரசாத், நாகி ரெட்டி, பி.என். ரெட்டி; பானுமதி, எம்ஜிஆர், ஸ்ரீதர், பாலச்சந்தர், ஜெமினி கணேசன், பத்மினி, சாவித்திரி, நாகேஷ், எம்எஸ்வி, இளையராஜா, டிஎம்எஸ், சுசீலா, எஸ்பிபி, எஸ். ஜானகி போன்றவர்கள் மன்னா டே, தபன் சின்ஹா, யஷ் சோப்ரா, பிரதீப், துர்கா கோட்டே போன்றவர்களுக்கு எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை. கே. சுப்பிரமணியம், ஏவிஎம் செட்டியார் போன்ற முன்னோடிக்காவது கொடுத்திருக்கலாம். சிவாஜிக்கே தாமதமாகத்தான் கிடைத்திருக்கிறது. அவருக்கு முன்னால் நாகேஸ்வர ராவுக்கும் ராஜ்குமாருக்கும் கொடுத்ததே தவறு!

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

சுட்டிகள்:
தாதாசாஹேப் ஃபால்கே விருது பெற்றவர்கள் லிஸ்ட்
வி.கே. மூர்த்தி பற்றிய விக்கிபீடியா குறிப்பு
நடிகர் மோகன்ராம் எழுதிய ஒரு குறிப்பு

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

4 Responses to தாதாசாஹேப் ஃபால்கே விருது

  1. vijayan says:

    இந்திரா ஆட்சிக்கு வந்தபின் இந்த விருதுக்கேல்லாம் எந்த மரியாதையும் இல்லை RV

  2. சிரவணன் says:

    பகிர்வுக்கு நன்றி.

    வி.கே.மூர்த்தி குறித்து என் வலைப்பதிவில் இட்ட இடுகையை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்…

    காகிதப் பூக்களுக்கு மணம் தந்த மூர்த்திக்கு பால்கே! http://siravanan.wordpress.com/2010/01/20/vkmurthy/

  3. //தாதாசாஹேப் ஃபால்கே விருது பெற்றவர்களின் லிஸ்டைப் பார்த்தால் வயிறு எரிகிறது. ஹிந்திப் படங்களுக்கு மட்டுமே recognition இருக்கிறது//

    பொதுவாகவே இந்த அங்கீகாரம் என்பது ஒருதலை பட்சமாகவே தெரிகிறது. நீங்கள் பட்டியல் இட்டதில் கூட ஒருதலை பட்சம் உள்ளதே!.
    தமிழில் நீங்கள் இதற்குத் தகுதியுள்ளதாய் கூறுபவர்களை விட மாடர்ன் தியேட்டர் அதிபர் டி.ஆர்.சுந்தரம் எந்தவிதத்திலும் தகுதியில் குறைவுள்ளவர் இல்லை. சொல்லப் போனால் மற்றவர்களை விட இந்த விருதுக்கு அதிக தகுதியுள்ளவராகவே இருக்கிறார்.

    எவி.எம், ஜெமினி வாசனுக்கு முன்பே ஸ்டூடியோ அமைத்து படம் தயாரித்தவர் ( 1936 ).
    முதல் சிங்களப் படம் தயாரித்தவர்.
    முதல் மலையாளப் படம் தயாரித்தவர்.
    முதல் (இந்தியாவில்) ஆங்கிலப் படம் தயாரித்தவர்.
    முதல் (தமிழில்) கலர்ப் படம் தயாரித்தவர்.
    ஐம்பது வருடங்களுக்கு முன்பே 1960 களிலேயே அசாதரண சாதனையான 100 திரைப் படங்களைத் தயாரித்தவர்.
    இந்த சாதனையை இன்று வரை எந்த தயாரிப்பாளர் செய்துள்ளார்?.
    ஒரு காலத்தில் திரைப்படத்துறையில் கோலோச்சிய எம்.ஜி.ஆர், கலைஞர், கண்ணதாசன், கே.வி. மகாதேவன், ஏபி.நாகராஜன், ஜி.இராமநாதன் உள்ளிட்ட பல கலைஞர்கள் மாடர்ன் தியேட்டர்சாரால் வளர்ந்தவர்களே.

    ஆனால் இவர் உங்கள் ”பால்கே” விருதுக்குத் தகுதியுள்ள தமிழர்கள் பட்டியலிலேயே இல்லையே?.

    ஒரு வேளை இதைப் போலவேதான் அங்கேயும் நடக்குமோ என்னவோ? 🙂

    • RV says:

      நல்லதந்தி, இந்த விருதுகள் டி.ஆர். சுந்தரம் மறைந்த பிறகுதான் ஆரம்பிக்கப்பட்டன. சுந்தரம் 64-இலோ 65 -இலோ மறைந்தார் என்று நினைவு. இந்த விருது முதன்முதலாக கொடுக்கப்பட்டது 69-ஓ என்னவோ. சேலத்தில் படித்த எனக்கு டி.ஆர். சுந்தரம் மறந்து போகுமா? 🙂 அதே காரணத்தால்தான் நான் எஸ்.எஸ். வாசனையும் குறிப்பிடவில்லை.

      விஜயன், இந்திரா காந்தி காலத்தில்தால் இந்த விருதுகள் வழங்கப்படவே தொடங்கின.

      சிரவணன், நல்ல பதிவு! நீங்களும் குரு தத் விசிறியா?

பின்னூட்டமொன்றை இடுக