உலகம் சுற்றும் பன்!


தகவல் தந்த ஸ்ரீனிவாசுக்கு நன்றி!

உலகம் சுற்றும் வாலிபன் படம் ரெடியாயிட்டிருந்த நேரம். பல பரபரப்புகளுக்கு நடுவுல எம்ஜியார் படத்தை ஆரம்பிச்சிருந்தார்.

பாட்டு எழுத கவிஞர் வாலியை கூப்பிட்டிருக்காங்க. வாலி வழக்கம் போல வார்த்தைகளால ஜாலம் காட்ட, எம்ஜியாருக்கு ரொம்ப சந்தோஷம்.

அமர்க்களமான ட்யூனோட வாலியோட வரிகளும் சேர, ரெக்கார்டிங் முடிஞ்சுது.

பல பிரச்னைங்க இருந்தாலும், எப்படியோ கஷ்டப்பட்டு வெளிநாட்டுக்கு போய் ஷூட்டிங்க முடிச்சுட்டு வந்தார் தலைவர்.

எடிட்டிங் முடிஞ்சு, இறுதி கட்ட வேலைங்க எல்லாம் முடிச்சு படம் கிட்டத்தட்ட ரெடி.

படத்துல இருக்க அத்தனை பாட்டும் சூப்பர் ஹிட்டாகும்னு எம்ஜியார் கூட இருந்தவங்க கிட்ட சொல்லிட்டிருந்தார்.

எம்ஜியாருக்கு வாலி ரொம்ப செல்லம். “என்ன ஆண்டவரே”ன்னு தான் கூப்பிடுவார். சரி, வாலியைக் கொஞ்சம் வெறுப்பேத்தலாம்னு, எம்ஜியார் வாலிய கூப்பிட்டு, “இந்த படத்துல பாட்டு எல்லாம் நல்லா வந்திருக்கு. ஆனா உங்க பேரை நான் டைட்டில்ல போட போறதில்லை” அப்டீன்னாராம்.

வாலி சிரிச்சுகிட்டே கம்முனு இருந்திருக்கார்.

“அட, நிஜமாதான் சொல்றேன். உங்க பேர் வராது.”

“என் பேரை போடாம உங்களால படத்தை ரிலீஸ் பண்ண முடியாது.”

“அப்டியா? நான் ரிலீஸ் பண்ணிட்டா?”

“எப்டிங்க ரிலீஸ் பண்ணுவீங்க? படத்தோட பேரு ‘உலகம் சுற்றும் வாலிபன்’. இதுல ‘வாலி’ங்கறத எடுத்துட்டா ‘உலகம் சுற்றும் பன்’ ஆயிடும். மக்கள் திலகம் நடிக்கும் ‘உலகம் சுற்றும் பன்’ அப்டீனா போஸ்டர் ஒட்டுவீங்க?”

எம்ஜியார் பலமாக சிரிச்சுகிட்டே வாலியை முதுகில் தட்டி, கட்டி பிடிச்சுகிட்டாராம்!

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

எங்க வீட்டுப் பிள்ளை


எனக்கு மிகவும் பிடித்த எம்ஜிஆர் படங்கள் என்று ஒரு ஆறேழு தேறும். ஆயிரத்தில் ஒருவன், எங்க வீட்டுப் பிள்ளை, அன்பே வா, நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன், அலிபாபாவும் 40 திருடர்களும் இந்த மாதிரி. பர்ஃபெக்ட் மசாலா. எம்ஜிஆருக்கு ஏற்ற கதை. இன்னும் பார்க்கக்கூடிய படங்கள்.

படம் வெளியானபோது விகடனில் வந்த விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.

எங்க வீட்டுப் பிள்ளையில் எம்ஜிஆர் சாட்டையை கையில் எடுத்துக் கொண்டு நான் ஆணையிட்டால் என்று பாட்டு பாடிக் கொண்டே நம்பியாரை விளாசும் காட்சியில் நமக்கும் நம்பியாரை விளாச வேண்டும் என்று தோன்றுகிறது. அதுதான் எம்ஜிஆரின் வெற்றி. இந்த திரைக்கதையின் வெற்றி. இந்த படத்தின் ஹைலைட்டே அந்த காட்சிதான்.

ஹிந்தியில் திலிப் குமார் நடித்து ராம் அவுர் ஷ்யாம் என்றும் தெலுங்கில் என்.டி. ராமராவ் நடித்து ராமுடு பீமுடு என்றும் ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் ரிலீஸ் ஆனது. எனக்கு பிடித்தது தமிழ்தான். தெலுங்கும் பரவாயில்லை. ஆனால் ஹிந்தி பிடிக்கவில்லை. திலிப் குமார் ஒரு மாஸ் ஹீரோ இல்லை.

1965-இல் வந்த படம். எம்ஜிஆர், சரோஜா தேவி, நம்பியார், பண்டரிபாய், நாகேஷ், தங்கவேலு, மனோரமா, ரங்காராவ் நடித்தது. இன்னொரு ஹீரோயின் யார் என்று தெரியவில்லை ரத்னா என்று டோண்டு ராகவன் தகவல் தருகிறார். இவர் தொழிலாளி படத்திலும் எம்ஜிஆருக்கு ஜோடியாம். சுரேஷ் இவர் பின்னாளில் இதயக்கனி படத்திலும் நீங்க நல்லாயிருக்கோணும் பாட்டிற்கு ஆடி இருக்கிறார் என்று குறிப்பிடுகிறார். விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை. வசனம் சக்தி கிருஷ்ணசாமியோ? விஜயா ஃபில்ம்ஸ்(நாகி ரெட்டி) தயாரிப்பு.

படம் ஒரு தங்கச் சுரங்கம்தான். அந்த ஓட்டம் ஓடியது. இன்றைக்கும் ரீ-ரிலீஸ் செய்தால் நன்றாக ஓடும் என்று நினைக்கிறேன். ஹிந்தி, தெலுங்கிலும் நன்றாக ஓடியது.

கதை வழக்கமான இரட்டையர்கள், ஆள் மாறாட்ட கதைதான். நம்பியார் ஒரு எம்ஜிஆரை கோழையாக, படிக்காதவனாக வளர்க்கிறார். அவரை மாப்பிள்ளை பார்க்க வரும் சரோஜா தேவி இந்த தத்தியை மணக்க முடியாது என்று மறுத்து விடுகிறார். அக்காவிடமும் அக்கா பெண்ணிடமும் மிகவும் பாசம் இருந்தாலும், அடி தாங்க முடியாமல் எம்ஜிஆர் வீட்டை விட்டு ஓடி விடுகிறார். கொஞ்சம் முரடனாக வளரும் இன்னொரு எம்ஜிஆர் சரோஜா தேவியின் கைப்பையை திருடனிடமிருந்து மீட்டுக் கொடுக்கிறார். சரோஜா தேவி மனம் மாறி எம்ஜிஆருடன் குமரிப் பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நீ வர வேண்டும் என்று டூயட் எல்லாம் பாடுகிறார். கோழை எம்ஜிஆர் இடத்துக்கு போகும் இவர் நம்பியாரை சாட்டையால் அடித்து நான் ஆணையிட்டால் என்று பாட்டெல்லாம் பாடி வீட்டையும் ஆலையையும் ஒழுங்கு செய்கிறார். இதற்கிடையில் வழக்கமான ஆள் மாறாட்ட குழப்பம் எல்லாம் நடந்து, இவர்கள் சகோதரர்கள் என்று தெரிந்து, நம்பியார் வழக்கம் போல கடைசி காட்சியில் மனம் திருந்தி, சுபம்!

திரைக்கதை நன்றாக அமைக்கப்பட்டிருந்தது. முரடன் எம்ஜிஆர் ஹோட்டலில் ஒரு வெட்டு வெட்டிவிட்டு பிள்ளை கொடுக்காமல் நழுவிவிட, அங்கே வரும் கோழை எம்ஜிஆர் இரண்டு இட்லி சாப்பிட்டுவிட்டு எல்லாத்துக்கும் பில் அழும் இடம், எங்களை காப்பாற்ற யாருமே இல்லையா என்று கோழை எம்ஜிஆர் அப்பா அம்மா படத்தை பார்த்து அழ, வீரன் எம்ஜிஆர் என் இல்லை, நான் இருக்கிறேன் என்று அடுத்த சீனில் என்ட்ரி கொடுப்பது, ஸ்டண்ட் செய்ய சொன்னால் எம்ஜிஆர் ஹீரோவை துவைத்து எடுப்பது, சரோஜா தேவி ரங்காராவை கலாய்ப்பது, ரங்காராவ் ஒன்றும் தெரியாதவர் போல தலையாட்டுவது, வீரன் எம்ஜிஆர் சமையல்காரனை அடிப்பது, தங்கவேலு-நாகேஷ் கூத்துகள், நாகேஷின் ஸ்பூனரிசங்கள் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

எம்ஜிஆர் கலக்கிவிட்டார். அவருக்கென்றே அமைக்கப்பட்ட அருமையான திரைக்கதை. அவருக்கேற்ற வில்லன் நம்பியார். அவருடைய நம்பர் ஒன் ஹீரோயின் சரோஜா தேவி. அப்பா ரோலுக்கென்றே அவதாரம் எடுத்த ரங்காராவ். நல்ல நகைச்சுவை டீம். அற்புதமான இசை. அவருடைய இமேஜுக்கு ஏற்ற மாதிரி பாட்டு எழுதும் வாலி. பெரிய தயாரிப்பாளர். படம் பிரமாதம்!

நான் ஆணையிட்டால் பாட்டு படமாக்கப்பட்ட விதம் பிரமாதம். பார்க்க வேண்டிய பாட்டு இது. எம்ஜிஆருக்கென்றே எழுதப்பட்ட வரிகள். வீடியோ கிடைக்கவில்லையே!

குமரிப் பெண்ணின் உள்ளத்திலே, நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன், மலருக்கு தென்றல் பகையானால் ஆகிய பாட்டுகள்தான் இப்போது நினைவுக்கு வருகின்றன. காலேஜ் நாட்களில் “அவன் காதலுக்கு பின்னால கல்யாணம் என்றே கையடிச்சான்” என்ற வரிகளை கேட்டு சிரி சிரி என்று சிரித்திருக்கிறோம். வாலிக்கு குசும்பு அதிகம்.

பாட்டுகளை இங்கே கேட்கலாம். இங்கே பார்த்த பிறகு பெண் போனால், கண்களும் காவடி சிந்தாகட்டும் ஆகிய பாட்டுகளும் நினைவுக்கு வருகின்றன.

பொதுவாக பாட்டுகளின் தரம் ஒரு எம்ஜிஆர் படத்தில் இருப்பதை விட கொஞ்சம் மட்டம் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் நான் ஆணையிட்டால் பாட்டு கேட்க மட்டும் இல்லை, பார்க்கவும்தான். அதில் எம்ஜிஆர் மாடி மேல் ஏறுவதும், உடனே இறங்குவதும், ட்விஸ்ட் ஆடுவதும் – பார்ப்பவர்களுக்கு நம்மை காப்பாற்ற ஒரு தலைவன் வந்துவிட்டான் என்ற எண்ணத்தை ஏற்படுத்தத்தான் செய்யும். அதே போல் குமரிப் பெண்ணின் உள்ளத்திலே பாட்டில் அவர் அப்படி ஸ்டைலாக பார்ப்பதும் ஆடுவதும் அபாரம்.

எம்ஜிஆரின் சிறந்த படங்களில் ஒன்று. பாருங்கள் என்று சிபாரிசு செய்கிறேன். பத்துக்கு ஏழு மார்க். B grade.

நம்பியாரை பற்றி படித்தவர்கள் சொன்னவை


ராண்டார்கை எழுதியது இங்கே.

நம்பியாரின் இன்னொரு முகம் பற்றி உஷா சொன்ன ராஜநாயகம் போஸ்ட் இங்கே.

தாஸ் சொல்கிறார்: சபரி மலைக்கு போவதற்கு எம்ஜிஆர் அனுப்பும் மாலையை அணிந்துதான் நம்பியார் போவாராம். சரத் பாபு நம்பியாரின் மாப்பிள்ளை என்று தாஸ் உறுதிப்படுத்துகிறார்.

சாரதா சொல்வதென்னவென்றால்:
நம்பியார் சுத்த சைவம். அதை தன்னுடைய இளமைக் காலத்திலிருந்து இன்று வரை கடை பிடித்து வருபவர். இத்தனைக்கும் அவர் குடும்பம் ஒரு அசைவக்குடும்பம். இருந்தும் விடாப்பிடியாக தன் கொள்கையில் உறுதியாக இருந்து வருபவர். தன்னுடைய பணிரெண்டாவது வயது வரையில் பால் கூட அருந்த மாட்டாராம், அது மாட்டு ரத்தம் என்ற உணர்வின் காரணமாக என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

எம்.ஜி.ஆருடன் ஏராளமான படங்களில் நடித்தது மட்டுமல்லாமல் அவருடைய நெருங்கிய நண்பராக இருந்தும் கூட நம்பியார் இதுவரை அரசியல் மேடைகளில் ஏறியதும் கிடையாது, எந்த அரசியல் கட்சியையும் சார்ந்ததும் கிடையாது. (பிற்காலத்தில் அவரது மகன் – சுகுமாரன் நம்பியார் – பா.ஜ.க.வில் இருக்கிறார்).

நம்பியார் எந்த ஊருக்கு வெளிப்புறப் படப்பிடிப்புக்கு சென்றாலும், தன் மனைவி கையால் சமைத்துத்தான் சாப்பிடுவார். அதற்காக தன் சொந்த செலவில் தன் மனைவியை அழைத்துப்போவார். ஒருமுறை ஒரு தயாரிப்பாளர், நம்பியாரின் மனைவிக்கும் சேர்த்து தன் கம்பெனி செலவில் விமான டிக்கெட் எடுத்து விட்டார். ஆனால் நம்பியார் அதை மறுத்து விட்டார். “நான் மட்டும்தான் உங்கள் படத்தில் நடிக்கிறேன், என் மனைவி நடிக்கவில்லை. அவரை எனக்கு உணவு சமைப்பதற்காக, அதாவது சொந்தக்காரணத்துக்காக அழைத்து வருகிறேன்” என்று கூறி, அதற்கான விமான டிக்கெட் தொகையை தன் சம்பளத்தில் இருந்து குறைத்துக் கொண்டார். (இந்தக்காலத்தில் இப்படியும் ஒருவர்..!!!!!)

இவரிடம் நடிகர்கள் மட்டுமல்லாது, மனிதர்களும் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய.

ஒரு இணைப்பு செய்தி: 1973-ம் ஆண்டுக்கான ‘சிறந்த மேக்கப்மேன்’ விருது பெற்றவர் நம்பியாரின் மேக்கப் மேன் திரு. ராமு. படம்: உலகம் சுற்றும் வாலிபன். (தகுதியானவருக்கு கிடைத்த தகுதியான விருதுகளில் இதுவும் ஒன்று. அந்தப் படத்தில் மட்டும் நம்பியார் தன் குரலைக் காட்டாமல் இருந்திருந்தால், அது நம்பியாரே அல்ல என்று என்று எந்த கோயிலிலும் சத்தியம் செய்யலாம். அவ்வளவு நேர்த்தியான மேக்கப்).

‘ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா’ பாடல் மட்டுமல்லாது, மாடர்ன் தியேட்டர்ஸ் ‘கவிதா’ படத்தில் வரும் ‘பறக்கும் பறவைகள் நீயே’ என்ற டூயட் பாடல் நம்பியாருக்குத்தான். அத்துடன் தூறல் நின்னு போச்சு படத்தில் ‘என் சோக கதையைக்கேளு தாய்க்குலமே’ பாடலிலும் ‘ஏரிக்கரை பூங்காற்றே’ பாடலிலும் பாக்யராஜுடன் இவரும் பாடியிருப்பார். (’மன்னாதி மன்னனை பார்த்தவன் நான், அந்த மதுரை வீரனையே எதிர்த்தவன் நான்’ என்று துவங்குவது இவர்தான்)

நம்பியாரை பற்றி பக்ஸ் எழுதியது இங்கே, இங்கே.

ஆர்வி எழுதியது இங்கே.

நம்பியார்


பல நாட்களாக பக்ஸ் கலக்கிக் கொண்டிருக்கிறான். இன்றைக்கு நானும் கொஞ்சம் முயற்சி செய்கிறேன்.

ஒருவர் இறந்துவிட்டார் என்பதற்காக அவரைப் பற்றி நம் உண்மையான கருத்தை மறைப்பது பொய். எனக்கு நம்பியார் என்ற நடிகரை பற்றி அவ்வளவு நல்ல அபிப்ராயம் இல்லை. எல்லா படங்களிலும் ஏறக்குறைய ஒரே நடிப்புதான். கையை பிசைந்து கொண்டு, ஜம்புவையும் மருதுவையும் (அது ஏன் அடியாட்களுக்கு சுப்பிரமணி, ராமசாமி என்றெல்லாம் பேர் வைக்க மாட்டார்களா?) யாரையாவது அடிக்க சொல்வது எல்லாம் ஒரு வேஸ்ட். திறமையான வில்லன் நடிப்பு என்றெல்லாம் சொல்ல முடியாது. ரகுவரன், பிரகாஷ் ராஜ் போன்றவர்களுக்கு எந்த விதத்திலும் ஈடாகாது. அந்த காலத்து நடிகர்களான எம்.ஆர். ராதா, பி.எஸ். வீரப்பா போன்றவர்களை இவரை விட பார்க்கலாம். என்ன, மனோகரை விட பெட்டர். எனக்கு அசோகனை பார்த்தால் சிரிப்பு வரும், இவரை பார்த்தல் அதுவும் வருவதில்லை. பக்ஸ் சொன்ன உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் கூட, “அந்த பெட்டியை கொடுத்துடு” வசனத்தை விட அசோகன் உருகி உருகி “முருகன், நீங்க பெரிய மேதை முருகன்” என்று சொல்வதுதான் நினைத்தாலே சிரிப்பு வருகிறது.

ஆனால் மக்கள் மத்தியில் வில்லன் என்றால் நம்பியார்தான். எம்ஜியார் நம்பியார் காம்பினேஷன் மாதிரி வராது என்று சொல்வார்கள். எம்ஜிஆர் நல்ல நடிகர் இல்லாவிட்டாலும் எல்லாருக்கும் பிடித்தவர். அந்த மாதிரிதான் நம்பியாரும். எனக்கு மிகவும் பிடித்த எம்ஜிஆர் படமான ஆயிரத்தில் ஒருவனில் அவரும் நன்றாக செய்திருந்தார். எங்க வீட்டுப் பிள்ளையில் எனக்கு ஒன்றும் பிரமாதமாக தெரியவில்லை, ஆனால் பிரபலமான ரோல்.

நம்பியாரின் பொற்காலம் என்றால் அது ஐம்பதுகள்தான். அவரும் அப்போது நன்றாக வசனம் பேசக்கூடிய ஒரு நடிகர். வேலைக்காரி, சர்வாதிகாரி, மந்திரி குமாரி, உத்தம புத்திரன் போன்ற படங்களில் நன்றாக செய்தார். (மந்திரி குமாரியில் அவரை கள்ள பார்ட் நடராஜன் மிஞ்சிவிட்டார்.) அவரும் எம்ஜிஆரும் ராஜா ராணி படங்களில் கத்தி சண்டை போடுவது சாதாரணமாக நன்றாக இருக்கும். அரச கட்டளையில் அவரும் எம்ஜிஆரும் ஒரு அசத்தலான சண்டை போடுவார்கள். ஆயிரத்தில் ஒருவனில் இரண்டு பேரும் கலக்குவார்கள்.

நினைவில் நிற்கும் இரண்டு விஷயங்கள்:
1. எம்ஜிஆரிடம் ஒரு பாட்டி “உனக்குத்தான் ராசா எங்க வோட்டு, ஆனா இந்த நம்பியார்கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இரு” என்று சொன்னாராம்.
2. எதோ ஒரு படத்தில் வடிவேலு அவரிடம் “எம்ஜிஆர் போன பிறகு உனக்கு ரொம்ப துளுத்து போச்சு!” என்பார்.

நெஞ்சம் மறப்பதில்லை குறிப்பிட்டு சொல்ல வேண்டிய படம். அதில் அவர் வரும் காட்சிகள், குறிப்பாக கடைசியில் அவர் புதைகுழியில் மூழ்கும் காட்சி உறைய வைக்கும். அந்த பெருமை ஸ்ரீதருக்கும் வின்சென்டுக்கும் உரியது என்றாலும், நம்பியாரை நினைவு கூரக்கூடிய படங்களில் அதுவும் ஒன்று.

அவர் நடித்து நான் பார்க்க விரும்பும் படம் திகம்பர சாமியார். பிரிண்ட் இருக்குமா என்று தெரியவில்லை.

எனக்கு தெரிந்து மக்களை பெற்ற மகராசியில் அவருக்கு ஒரு டூயட் உண்டு – “ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா” வேறு பாட்டு ஏதாவது உண்டா தெரியவில்லை.

கிட்டத்தட்ட தொண்ணூறு வயது வரை வாழ்ந்திருக்கிறார். அவர் பல மாற்றங்களை பார்த்திருப்பார். சொந்த வாழ்க்கையில் புனிதர் என்று சொல்வார்கள். சினிமா உலகத்தில், அதுவும் நாற்பதுகளிலிருந்து நடித்து வரும் ஒருவருக்கு இப்படிப்பட்ட இமேஜ் இருப்பது அதிசயம்தான். நிறைந்த வாழ்வு வாழ்ந்து மறைந்த அவருக்கு என் அஞ்சலி.

காதலில் விழுந்தேன் ஆச்சரியங்கள்


கலாநிதி மாறன் படத் தயாரிப்பிலும் இறங்கிவிட்டாரா? சன் டிவிக்கு புதுப் படங்கள் கிடைக்க அவருக்கு மிஞ்சிய வழி இது ஒன்றுதானா?

ஹீரோ பாய்ஸ் படத்தில் வரும் கொஞ்சம் குண்டான இளைஞரா? எப்படி இப்படி இளைத்துவிட்டார்? எனக்கும் கொஞ்சம் நம்பிக்கை வருகிறது!

எனக்கு மட்டும்தான் தோன்றுகிறதா? “அட்ராட்ரா அட்ராட்ரா நாக்க முக்க நாக்க முக்க”, “அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ” இரண்டும் ஒரே ட்யூன்தானே?

அழகிரி இந்த படம் மதுரையில் வெளியிடப்படுவதை நிறுத்திவிட்டாராமே! கடைசியாக இப்படி நிறுத்த முயற்சி செய்தவர் மதுரை முத்து – உலகம் சுற்றும் வாலிபன் படத்தை!

திரிசூலம் (Thirisoolam)


1979-இல் வந்த படம். அன்றைய சிவாஜி ரசிகர்களுக்கு நல்ல தெம்பூட்டிய படம். உலகம் சுற்றும் வாலிபன், உரிமைக் குரலுக்கு பின்னால் எம்ஜியார் படங்கள் பெரிய வெற்றி அடையவில்லை. சிவாஜியின் பல படங்கள் (தீபம், அண்ணன் ஒரு கோவில், அந்தமான் காதலி, தியாகம், என்னைப் போல் ஒருவன், பைலட் ப்ரேம்னாத்) வர்த்தக ரீதியாக பெரும் வெற்றி அடைந்திருந்தன. அவரது நடிப்பும் அண்ணன் ஒரு கோவில், தியாகம் போன்ற பல படங்களில் ரசிக்கப்பட்டது. அவரது நீண்ட நாள் போட்டியாளரான எம்ஜியார் முதல் அமைச்சராகி படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். இந்த நிலையில் திரிசூலம் அடைந்த மகத்தான வெற்றியும், ஒரு ரோலில் அன்றைய இளம் கதாநாயகர்களான கமல், ரஜினி ஆகியோரொடு போட்டி போடும் அவரது “இளமைத் துள்ளலும்” ஒரு ரோலில் அவரது ட்ரேட் மார்க் நடிப்பும், சிவாஜி ரசிகர்களை பெரிய அளவில் உற்சாகப்படுத்தின. அவர்தான் ராஜா, கமல் ரஜினி போன்றவர்கள் வெகு தூரத்தில் இருக்கிறர்கள் என்று தோன்றியது.

இன்று யோசித்துப் பார்த்தால் அதிசயமாக இருக்கிறது. இந்தப் படத்துடன் சிவாஜியின் சகாப்தம் முடிந்துவிட்டது. அதற்குப் பிறகு அவர் தனது ட்ரேட் மார்க் ஸ்டைலில் நடித்த படங்கள் ஒன்று கூட வெற்றி பெறவில்லை. அப்படி அபூர்வமாக வெற்றி பெற்ற படங்களில் அவர் வயதானவராகத்தான் நடிதிருந்தார். (கீழ்வானம் சிவக்கும், ரிஷிமூலம், கல் தூண்). அவரது படங்களுக்கு ஒரு எதிர்பார்ப்பே இல்லை. அதற்கு பிறகு அவரது நடிப்பு பரவலாக ரசிக்கப்பட்டது அபூர்வமே. முதல் மரியாதையில் அவர் மிகவும் அடக்கி வாசித்தது நினைவிருக்கலாம். அதையே மிகை நடிப்பு என்று என் நண்பன் பாலமுரளி சொல்லுவான். (இன்னும் ஆஸ்திரேலியாவில்தான் இருக்கிறாயா, பால்ஸ்?) எப்படி மக்களின் ரசனை இவ்வளவு விரைவில் மாறியது என்பது ஒரு பெரிய புதிர்தான்.

77, 78 வாக்கில்தான் நான் மெதுவாக ரஜினி/கமல் ரசிகனாக மாறிக்கொண்டிருந்தேன். குறிப்பாக பைரவி படத்தின் போஸ்டர்களில் ரஜினி ஒரு உள்ளெ சட்டை ஏதும் போடாமல் ஒரு கறுப்பு கோட்டு அனிந்திருந்த கோலத்தை பார்த்தபோது “ஸ்டைலு ஸ்டைலுதான்” என்று தோன்றியது. அதே போல் “என்னடி மீனாட்சி” டான்ஸைப் பார்த்து கமல் ரசிகர்கள் ஆனவர்கள் அனேகம். இதில் சிவாஜியும் அதே ஸ்டைலில் தன்னை சாட்டையால் அடித்துகொள்ளும் காட்சியில் சட்டை ஏதும் இல்லாமல் நீண்ட, திறந்த ஓவர்கோட்டுடன் வருகிறார். கொடுமையடா சாமி!

கன்னடத்தில் ராஜ்குமார் நடித்து பெரிய hit ஆன “சங்கர் குரு” படத்தின் ரீமேக். 3 சிவாஜிக்கள். ஒருவர் பாரம்பரிய சிவாஜி ரசிகர்களுக்காக “சுமதீஈஈ” டயலாக்குடனுடனும், இன்னொருவர் புது ஜெனரேஷனுக்காக நக்கல் வசனங்களுடனும், ஒருவர் சும்மா டம்மியாகவும் வருவார்கள். அன்றைய கவர்ச்சிக் கன்னியான ஸ்ரீப்ரியா முதன்முதலாக சிவாஜிக்கு ஜோடியாக நடித்த படம். வழக்கம் போல கையை பிசையும் நம்பியார், ஆ என்று கத்தும் வி.கே. ராமசாமி, காண்பவர்கள் கண்களை குளமாக்கும் கே.ஆர். விஜயா, புஷ்பலதா, மேஜர், ஜெய்கணேஷ் முதலானோரும் நடித்திருக்கிறர்கள்.எம்.எஸ்.வி.யின் இசையில், கண்ணதாசன் பாடல்களுடன், கே. விஜயன் இயக்கத்தில் வந்த படம்.

பாட்டுக்கள் எல்லாம் சுமார்தான். “மலர் கொடுத்தேன்” பாட்டு சிவாஜியை பல வருஷங்கள் கிண்டல் செய்ய பயன்பட்டது. “காதல் ராணி”, “திருமாலின் திருமார்பில்”, “இரண்டு கைகள்” போன்ற பாட்டுக்களும் உண்டு.

கதை இன்று cliched ஆக தெரிகிறது. 79இல் அப்படி தோன்றவில்லை. தன் மனைவி கே.ஆர். விஜயாவை விட்டு ஓடிவிடும் சிவாஜி காஷ்மீரில் பெரிய எஸ்டேட் அதிபர் ஆகிவிடுவார். தன் மனைவியை தவிக்கவிட்ட குற்றத்துக்காக வருஷத்துக்கு ஒரு முறை திதி கொடுப்பது போல் சாட்டையடி வாங்குவார். கே.ஆர். விஜயாவின் இரட்டைக் குழந்தைகளில் ஒன்றை டாக்டர் புஷ்பலதா மேஜரிடம் கொடுத்துவிடுவார். அந்தக் குழந்தை குறும்புக்கார குருவாக வளரும். இன்னொரு குழந்தை கே.ஆர். விஜயாவிடம் – போலிஸ் அதிகாரி சங்கர். அவர் போலிஸ் அதிகாரி என்பது யாருக்கும் தெரியாது. 25 வருஷம் கழித்து எல்லாரும் காஷ்மீருக்குப் போவார்கள். குரு ஸ்ரீப்ரியாவைக் காதலிக்க போவார். சங்கர் துப்பு துலக்கப் போவார். ஓடிப் போன சிவாஜி கூப்பிட்டதால் கே.ஆர். விஜயாவும் வருவார். வில்லன்களும் அங்கே இருந்தால்தான் அடி வாங்க முடியும் என்று அங்கே போவார்கள். டாக்டர் புஷ்பலதாவும் குருவுக்கு ஸ்ரீப்ரியாவுக்கும் காதல் உண்டாக்கவும், எல்லா உண்மைகளையும் சொல்லி சங்கரையும் குருவையும் அம்மாவையும் இணைக்க அங்கே போவார். எனக்கும் ஒரு டிக்கெட் வாங்கி கொடுத்திருந்தால் நான் என்ன வேண்டாமென்ற சொல்லப் போகிறென்?

எங்கோ கொள்ளை அடித்த நெக்லஸ் சங்கர் கையில் சிக்கி, அதை வில்லன்கள் தேடி அலைந்து இரண்டு சிவாஜிகளும் இணைந்து “இரண்டு கைகள் நான்கானால்” என்று பாட்டெல்லாம் பாடி, வில்லன்களை அடித்து உதைத்து எல்லாரும் ஒன்று சேர்ந்து சுபம்! (எனக்கென்னவோ சுபம் என்று எழுதினால்தான் நிறைவு!)

எல்லாரும் அடிக்கடி காஷ்மீருக்கு போகிறேன் என்பார்கள். ட்ரங்க் கால் கூட ஸ்ரீநகருக்கோ குல்மார்க்குக்கோ புக் செய்ய மாட்டார்கள் – காஷ்மீருக்குத்தான் செய்வார்கள். அந்தக் கால டெலிஃபோன் ஆபரேட்டர்கள் பாடு படுகஷ்டம்!

சிவாஜியும் கே.ஆர். விஜயாவும் நடத்தும் டெலிஃபோன் உரையாடல் புகழ் பெற்றது. இன்னும் கூட அவ்வப்போது அசத்தப் போவது யாரு போன்ற நிகழ்ச்சிகளில் “சுமதீஈஈஈ” என்ற அலறலை கேட்கலாம். எஸ்.வி. சேகரின் “காட்டுல மழை” நாடகத்தில் இது மிகவும் கிண்டல் செய்யப்பட்டது.

ஆனால் படம் வந்தபோது எல்லாருக்கும் – பள்ளி கல்லூரி மணவர்களுக்கும் – குரு காரக்டர் பிடித்துத்தான் இருந்தது. சும்மா கலக்கிவிட்டார் என்றுதான் நானும் 13 வயதில் நினைத்தேன். The story just hasn’t aged well.

தீவிர சிவாஜி ரசிகர்கள் பார்க்கலாம்.

டாக்டர் சிவா (Dr. Siva)


74, 75ஆம் ஆண்டு வாக்கில்தான் எம்ஜியாரின் ரசிகனாக இருந்த நான் சிவாஜியின் “நடிப்பு” ரசிகனாக மாறி இருந்தேன். நாங்கள் அப்போது ஒரு குக்கிராமத்தில் வசித்தோம். கமலும் ரஜினியும் அந்த கிராமத்தில் நுழைய இன்னும் 3, 4 ஆண்டுகள் இருந்தன. அப்போது எம்ஜியார் சிவாஜிக்கென்று எங்கள் வயது (5இலிருந்து 15) சிறுவர்களுக்குள் கோஷ்டிகள் உண்டு. மிகச் சிலர் தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் ஜெய்ஷங்கரின் ரசிகர்கள். எம்ஜியார் ரசிகர்கள் “ஒரு உலகம் சுற்றும் வாலிபன் மாதிரி ஒரு சூப்பர் சிவாஜி படம் சொல்லுடா” என்றால் சிவாஜி கோஷ்டியை சேர்ந்த நாங்கள் கொஞ்சம் தலை குனிந்த படியே “வெயிட் பண்ணுடா, டாக்டர் சிவா, இளைய தலைமுறை, அவன் ஒரு சரித்திரம் எல்லாம் வருதுடா” என்போம். ஏனென்றால் சிவாஜியின் சமீபத்திய படங்களை (மனிதனும் தெய்வமாகலாம், ராஜபார்ட் ரங்கதுரை) நாங்கள் யாரும் அவ்வளவாக ரசிக்கவில்லை. மூன்றுமே தாமதமாகத்தான் வந்தன. மூன்றுமே எங்கள் சிவாஜி கோஷ்டியின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொண்டன. டாக்டர் சிவாவை பார்த்து விட்டு தீவிர சிவாஜி ரசிகர்களே சுமார் என்றுதான் சொன்னார்கள் என்று ஞாபகம். இளைய தலைமுறை ஓடவே இல்லை. அவன் ஒரு சரித்திரமும் ஓட வில்லை என்று ஞாபகம்.

வயிறு எப்படி எரியாமல் இருக்கும்? சிவாஜி full form-இல் இருக்கிறார். அவர் “ஏஸ்ஸ்ஸ்ஸ்ஸ்”(Yes) என்று உறுமும்போதும், “ஓ மை காட்” என்று அலறும்போதும் சிவாஜிக்கு நிகர் சிவாஜிதான் என்று தோன்றியது. எல்லாரும் – மேஜர், பண்டரிபாய், மஞ்சுளா, நாகேஷ் – அப்படியே பல படங்களில் உபயோகப்படுத்திய அச்சையே மீண்டும் ஒரு முறை அலட்டிக் கொள்ளாமல் உபயோகிக்கிறார்கள். அதுவும் மேஜர் மஞ்சுளாவை வீட்டை விட்டு விரட்டும் காட்சியில் சிவாஜிக்கே ஓவர் ஆக்டிங்கில் சவால் விடுகிறார்.

படத்தின் கதாநாயகன் சிவாஜி என்றதுமே படத்தின் காட்சிகள் எல்லாம் ஏறக்குறைய முடிவாகிவிடுகிறது. டைரக்டருக்கு அவரது சாமர்த்தியத்தைக் காட்ட ஸ்கோப்பே இல்லை. அவர் கவர்ச்சிக் காட்சிகளில்தான் தனது திறமையைக் காட்டி இருக்கிறார். டைரக்டருக்கு மஞ்சுளாவை டூ-பீஸ் நீச்சல் உடையில் நீண்ட நேரம் காண்பிக்க வேண்டும். என்ன செய்வது? ஒரு கழுதை மஞ்சுளாவின் உடையைத் தூக்கிகொண்டு ஓடி விடுகிறது! என்னே டைரக்டரின் சாமர்த்தியம்! பற்றாக்குறைக்கு ஜெயமாலினி (முதல் படமாம்) வேறு. அவர் எப்போதும் தொடை தெரிய அரை ட்ரவுசரும் எவ்வளவு மேலே தூக்கிக் கட்ட முடியுமோ அவ்வளவு தூரம் தூக்கிக் கட்டிய சட்டையுமாக சுற்றுகிறார்.

அந்தக் காலத்தில் அஸிஸ்டண்ட் டைரக்டர்கள் கன்டின்யூடி எல்லாம் பார்க்க மாட்டார்கள் போலிருக்கிறது. சிவாஜி முதல் ஒரு மணி நேரத்திலேயே 4-5 விக்குகள் அணிந்துகொண்டு வருகிறார். எல்லாமே பொருந்தாமல் இருப்பதுதான் கொடுமை. சிம்பு இந்தப் படத்தை கட்டாயமாக பார்க்க வேண்டும். சிவாஜியின் கையில் உள்ள மணி மாலையும், அவர் முதலில் சில காட்சிகளில் போட்டுக் கொண்டிருக்கும் தொப்புள் வரை வரும் செயினும் அவருக்கு பல ஐடியாக்களை கொடுக்கக் கூடும்.

25 வருஷங்களுக்கு முன்னால் வேண்டுமானால் மஞ்சுளாவையும் ஜெயமாலினியையும் பார்த்து ஜொள்ளு விட்டிருக்கலாம். இப்போது எல்லா படங்களிலுமே அவர்களை விட பல மடங்கு அதிகமாக கவர்ச்சி காட்டப்படுவதால், நேரத்தை வீணடிக்காமல் “மலரே குறிஞ்சி மலரே” பாட்டை மட்டும் கேளுங்கள். (சிவாஜியும் மஞ்சுளாவும் பூஜை செய்யும் இடம்தான் தலைக் காவேரியாம்.)