தங்கப் பதக்கம் விகடன் விமர்சனம்


படம் வந்தபோது – 1974 – விகடனில் வந்த விமர்சனம். நன்றி, விகடன்! என் விமர்சனம் விரைவில் வரும்.

‘தங்கம் என்றால் இதுதான் மாற்றுக் குறையாத தங்கம்’ என்று கையில் எடுத்துக்காட்டுவது போல, போலீஸ் அதிகாரி என்றால் தன்னைப் போல்தான் இருக்கவேண்டும் என்று சொல்லாமல் சொல்லும் சிவாஜி கணேசனின் நடிப்பும் தோற்றமும் தங்கமா, வைரமா என்று வியக்கிறோம்!

காட்சிக்குக் காட்சி சிவாஜியின் கம்பீரத்தையும், கண்டிப்பையும், கடமை உணர்ச்சியையும், கனிவையும் பார்க்கும்போது எந்த இடத்தில் உயர்ந்து நிற்கிறார் என்று இனம் கண்டு கொள்ளப் பார்க்கிறோம். முடியவில்லை.

கடமையே உருவமான போலீஸ் அதிகாரிக்கு என்னைப் போல் கண்ணியமான ஒரு பெண்தான் மனைவியாக இருக்கமுடியும் என்று சொல்வது போல் லட்சிய மனைவியாக நடித்திருக்கும் கே.ஆர்.விஜயாவின் நிறைவை எப்படிச் சொல்வது? தங்கப் பதக்கத்தைத் தட்டிக் கொள்கிறார்!

ஸ்ரீகாந்திடம் நல்ல முன்னேற்றம். அப்பாவின் கண்டிப்பைத் தவறாகப் புரிந்துகொண்டு அவரை அவமானப்படுத்தும் சந்தர்ப்பங்களைச் சாமர்த்தியமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

சோவுக்குக் கான்ஸ்டபிள் பாத்திரம் ஒன்று போதாதா? கவுன்சிலர் களேபரம் கதைக்குத் தேவையில்லாத கூத்து!

மைனர் மனோகரை அங்கவஸ்திரத்தால் கட்டி இழுத்துப்போகும் போலீஸ் அதிகாரி, வழியில் மடக்குகிற அத்தனை பேரையும் கைத்தடியாலேயே அடித்து நொறுக்குவது இயற்கையாக இல்லை.

மகன் மீது போலீஸ் அதிகாரி காட்டும் கண்டிப்புக்குக் கதையில் கொடுக்கப்பட்டுள்ள அழுத்தம், அவன் தந்தையைப் பழி வாங்கத் துடிக்கும் அளவுக்கு எதிரியாக மாறுவதற்கும், தேசத் துரோகியாகக் கூடிய அளவுக்கு மாறுவதற்கும் கனம் சேர்ப்பதாக இல்லை.

ஜீப் வேகத்தில் ஓடிக்கொண்டிருந்த கதை, யுத்தம்-ராணுவ ரகசியம் என்று வரும்போது தடுமாறுகிறது.

இத்தனை இருந்தும், எதையும் கண்டுகொள்ள விடாதபடி திசை திருப்பிவிடுகிறார் சிவாஜி.

தங்கப்பதக்கம் – சிவாஜி கணேசனின் நடிப்புக்கு ஒரு தங்கப்பதக்கம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

2 Responses to தங்கப் பதக்கம் விகடன் விமர்சனம்

  1. Srinivasan says:

    நடிகர் திலகம் ஒரு ஸ்ட்ரிக்ட் போலீஸ் ஆபீசராக நடித்து, புகழ் பெற்ற படம், ‘தங்கப்பதக்கம்’.

    அந்தப் படத்தைப் பற்றி அவர் தனது சுயசரிதையில் என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்.

    ஏற்கனவே செந்தாமரை என்றொரு நடிகர் தங்கப்பதக்கம் கதையை நாடகமாக நடத்திக் கொண்டிருந்தார். அந்த நாடகத்தை என்னுடன் இருந்த கண்ணன் பார்த்து விட்டு, அதைப் பற்றி என்னிடம் கூறினார். எனவே, நான் அண்ணாமலை மன்றம் சென்று அந்த நாடகத்தைப் பார்த்தேன். பார்த்த பிறகு செந்தமரையைக் கூப்பிட்டு, ‘தங்கப்பதக்கம் கதையை என்னிடம் கொடுங்கள். நான் அதை நாடகமாகவும், படமாகவும் எடுக்கிறேன். நீங்களும் என்னுடன் நடிக்கலாம்” என்றேன். அவரும் பெரிய மனதோடு ஒத்துக் கொண்டார். நான் கதையை வாங்கி, முழுவதுமாக மெருகேற்றி முதலில் நாடகமாக்கினேன். மகத்தான வரவேற்பைப் பெற்றது. அதைத்தான் பின்னால் படமாக எடுத்தோம். தங்கப்பதக்கம் என்பது கடைசியில் பெற்ற மகனையே சுட்டுவிட்டேன் என்பதற்காக ஒரு மெடல் கொடுக்கிறார்களே, அதுவல்ல. தங்கப்பதக்கம் என்பது அந்த போலீஸ் ஆபீசரின் குணாதிசயம் தான்.

    ‘போலீஸ்காரர்கள் மக்களிடம் எப்படி இருக்க வேண்டும்? தன்னுடைய கடமையை எவ்வாறு செய்ய வேண்டும்?’ என்ற உண்மைகளை எடுத்துச் சொனன கதை அது. சட்டத்தைக் காப்பாற்றுகிற பாத்திரமிது. ஆகையால் தங்கப்பதக்கமென்றால், அந்தக் கடமை தவறாத போலீஸ் அதிகாரி தான் தங்கப்பதக்கம். இவையெல்லாம் போலீஸ் டிபார்ட்மென்ட் தெரிந்து கொள்வதற்காகவும், மக்கள் அதை உணர்வதற்காகவும்தான், அந்தக் கதையை வாங்கி, எஸ்.பி.சௌத்ரி பாத்திரத்தில் நடித்தேன். அதில் என்னோடு கே. ஆர். விஜயா அவர்கள் மிக நன்றாக நடித்தார்கள். அவர்கள் என்னோடு பல படங்கள் நடித்திருக்கிறார்கள். திரைப்படம் வெற்றிகரமாக ஓடியது. தெலுங்கிலும் டப் செய்யப்பட்ட இந்தப் படம், பல கோடி ரூபாய் வசூலைத் தந்தது.

பின்னூட்டமொன்றை இடுக